ஏழாம் நாள் - சகல கலைகளையும் அருள்வாள் கலைவாணி!

Navarathiri
Navarathiri
Published on
இதையும் படியுங்கள்:
ஆறாம் நாள் - மனமகிழ்ந்து அருள்வாள் மங்கல மஹாலக்ஷ்மி!
Navarathiri

நவராத்திரி கொண்டாட்டத்தில் இன்று முதல், அடுத்த மூன்று நாட்களில் பராசக்தியின் இன்னொரு அம்சமாகிய சரஸ்வதியை நாம் போற்றித் துதிக்கிறோம்.

சரஸ்வதி தேவியின் அருட்கடாட்சம் பெற்றவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் குமரர். இவர் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள திருவைகுண்டத்தில் பிறந்தவர். தந்தையார் சண்முகசிகாமணிக் கவிராயர், தாயார் சிவகாமி அம்மையார். ஆனால், அந்தத் தம்பதிக்குத் தம் அருமைப் பிள்ளையின் மழலைக் குரலைக் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை. ஆமாம், குமரர் பிறந்தது முதல் தனது ஐந்தாவது வயது வரை ஒரு சொல்லும் உச்சரித்தாரில்லை. பெற்றோர் பெருங்கவலை கொண்டனர். முருகப் பெருமானின் அருளால் தாங்கள் பெற்றெடுத்த இந்தக் குழந்தை அதே வேலவன் அருளால் பேசவும் வேண்டும் என்று தீர்மானித்து மகனை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றார்கள். கடல் நீரில் தலை முங்க நீராடி, வேலவனை கருவறையில் தரிசித்து மனமுருகி வேண்டிக் கொண்டார்கள். மழலைச் சொல் கேளாத தங்களுடைய துர்ப்பாக்கியத்தை எண்ணி குமைந்து வருந்தினார்கள்.

செந்திலாண்டவனையே பார்த்துக் கொண்டிருந்த குமரருக்கு திடீரென்று உடல் சிலிர்த்தது. ஆமாம், பிறர் யாரும் அறியாத வகையில் குமரனின் வாய் திறக்க வைத்து தன்னிடமிருந்த ஞானவேலால் அவன் நாவில் ‘ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தை எழுதினான் திருமுருகன். அவ்வளவுதான் அந்த ஐந்து வயதுக் குழந்தை, சைவ சித்தாந்த சாத்திர சாரமாக விளங்கும் ‘கந்தர் கலிவெண்பா‘ என்னும் நூலை திருச்செந்தூரானைப் போற்றும் வகையில் பாடி மகிழ்ந்தார். அந்த பாலகனை, ‘குமரகுருபரா‘ என்றழைத்துப் பாராட்டினான் முருகன். பெற்றோர், ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தார்கள்.

இல்லம் திரும்பிய சில நாட்களில், மதுரை அரசி மீனாட்சி மீது ‘மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்‘ பாடினார். இதைக் கேள்விப்பட்ட மதுரை மன்னர் திருமலை நாயக்கர் குமரகுருபரரை அழைத்துச் சிறப்பித்தார். அதோடு ‘மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்‘ நூலை மீனாட்சி அம்மை கருவறை முன்னாலேயே அரங்கேற்றம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
ஐந்தாம் நாள் - மகோன்னத வாழ்வருள்வாள் மஹாலக்ஷ்மி!
Navarathiri

அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்ட குமரகுருபரர் கோவிலுக்குச் சென்று அம்மை முன் அமர்ந்து உளம் நெகிழ தன் ‘பிள்ளைத் தமிழை‘ பரவசத்துடன் பாடினார். அதில் வருகைப் பருவத்தில் ஒன்பதாவது செய்யுளான, ‘தொடுக்குங் கடவுட் பழம் பாடற் கொடையின் பயனே‘ என்ற செய்யுளுக்கு விரிவுரை வழங்கினார். அப்போது ஒரு சிறுமி அங்கே வந்தாள். மீனாட்சி அம்மைக்கு நித்தம் நித்தம் ஆகம வழிபாடுகளை மேற்கொள்ளும் அர்ச்சகரின் மகள் அவள். அனைவரும் அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, நேராக மன்னர் திருமலை நாயக்கரிடம் சென்று அவர் அணிந்திருந்த மணிமாலையைக் கழற்றினாள் சிறுமி. பிறகு அதை அப்படியே குமரகுருபரரின் கழுத்தில் இட்டாள். அனைவரும் பேரதிசயமாக இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் குழந்தை, மீனாட்சி அம்மை கருவறைக்குள் சென்று அப்படியே ஒளிக் கீற்றாய் மறைந்து போனாள். அர்ச்சகரின் மகளாக வந்தவள் அகிலாண்ட நாயகியே என்பதை உணர்ந்து அனைவரும் சிலிர்த்தார்கள்.

இதையும் படியுங்கள்:
நான்காம் நாள் - செல்வம் பெருக்குவாள் செல்வாம்பிகை!
Navarathiri

அன்னை மீனாட்சியின் அனுக்ரகம் கொடுத்த ஊக்கத்தால், ‘மீனாட்சியம்மை குறம்‘, ‘மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை‘ ‘மதுரைக் கலம்பகம்,‘ ‘நீதிநெறி விளக்கம்‘ முதலான நூல்களை அடுத்தடுத்து இயற்றினார் குமரகுருபரர்.

பிறகு வடநாட்டிலுள்ள காசிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. காசி விசுவநாதர் மீது ‘காசிக் கலம்பகம்‘ பாடிய அவர், காசி நகரில் ஒரு மடம் நிர்மாணிக்க, அப்போதைய அரசனான சுல்தானிடம் நிலம் கேட்டார். அவர் தன் மொழி பேசாதவர் என்பதால் அதற்கு அனுமதி மறுத்த சுல்தான், அவரை கேவலப்படுத்தி விரட்டினான். அருகிலுள்ள காட்டிற்குச் சென்று மனமுருக சரஸ்வதியை வேண்டி ‘சகலகலாவல்லி மாலை‘ பாடினார் குமரகுருபரர். உடனே சுல்தானின் மொழி அவருக்குப் பாடமாகிவிட்டது. தன்னைத் துச்சமாக மதித்த அவனை வெருட்டும் நோக்கில் காட்டிலிருந்த ஒரு சிங்கத்தை தன் வயப்படுத்தி அதன் மீது சவாரி செய்தபடி சுல்தானின் அரண்மனைக்கு வந்தார். வந்ததோடு, அவனுடைய மொழியிலேயே சரளமாக உரையாடினார். இதைக் கண்டு மருண்ட சுல்தான் உடனே நிலம் அளித்தான். அது மட்டுமின்றி, வேறு பல சைவ மடங்களையும், விஸ்வநாதர் ஆலயத்தைப் புதுப்பிக்கவும் அதே சுல்தானை உதவச் செய்தார் குமரகுருபரர்.

இதையும் படியுங்கள்:
மூன்றாம் நாள் - மன நிம்மதி அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி!
Navarathiri

கலைவாணியின் அருளுக்குப் பாத்திரமானவர்களில் குமரகுருபரர் ஒரு சிறந்த உதாரணம். ஆகவே இந்த நன்னாளில் சரஸ்வதி அன்னையை துதித்து நம் கல்வி, கலைகளில் மேன்மையுறுவோம்.

இந்த நாளில், கல்வி தெய்வத்தை தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். எலுமிச்சம்பழ சாதம், கொண்டைக்கடலை சுண்டல் தயாரித்து நிவேதனம் செய்யலாம்.

ஏட்டுக் கல்வி மட்டுமல்ல, வாழ்வில் அனுபவக் கல்வியாலும் சிகரத்தைத் தொட சரஸ்வதி அருள்வாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com