ஐந்தாம் நாள் - மகோன்னத வாழ்வருள்வாள் மஹாலக்ஷ்மி!

Navarathiri
Navarathiri
Published on

இன்று நவராத்திரி வைபவத்தின் ஐந்தாம் நாள். 

பண்டரிபுரத்தில் வேமன்னபுரி என்று ஒரு கிராமம் இருந்தது. இங்கு சீனிவாச நாயக் என்பவன் தன் மனைவி சரஸ்வதியோடு வாழ்ந்து வந்தான். சிறிதும் கடவுள் பக்தியே இல்லாதவன் அவன். ஆனால் மனைவியோ நாளும், பொழுதும் அந்த ஊர் கோவிலில் கொலுவிருக்கும் பாண்டுரங்கனைத் துதித்தபடியே இருப்பாள். தான, தருமங்களில் மிகுந்த உவகையுடன் ஈடுபடுவாள். தன் கணவன் இப்படி இறைச் சிந்தனை இல்லாமல் இருக்கிறானே என்று அவளுக்கு உள்ளூர வருத்தம். 

அவளுக்கும், சீனிவாச நாயக்குக்கும் விமோசனம் அருள விரும்பினார் பாண்டுரங்கன். ஒரு முதியவராக உருமாறி, சீனிவாசனுடைய கடைக்கு வந்தார். ‘‘ஐயா என் பிள்ளைக்கு உபநயனம் செய்விக்க வேண்டும். செலவுக்குப் பணமில்லை, கொடுத்து உதவுங்கள்,‘‘ என்று கெஞ்சிக் கேட்டார்.

சீனிவாசனோ, ‘‘நான் தானமாகப் பணம் தருவதில்லை. அதனால் ஏதாவது பொருளை அடமானம் வைத்துவிட்டு பணம் வாங்கிச் செல்,‘‘ என்று நிர்த்தாட்சண்யமாகக் கூறிவிட்டான். மிகுந்த வருத்தத்துடன் முதியவர் கடை இறங்கி சீனிவாசன் வீடு நோக்கிச் சென்றார்.

அங்கே அன்றைய நவராத்திரி பூஜையை முடித்து விட்டு கணவர் வருகைக்காகக் காத்திருந்தாள், சரஸ்வதி. அவளிடம் வந்த முதியவர் தன் கோரிக்கையை வைக்க, தான் ஏதும் பணம், பண்டம் என்று கொடுத்தால் கணவர் கோபித்துக் கொள்வாரே என்று பெரிதும் தயங்கினாள். முதியவரோ ‘‘உன்னுடைய மூக்குத்தியைக் கொடேன் அம்மா. இது உன் தாயார் உனக்கு அளித்த திருமண சீதனம்தானே, இது உனக்குரியதுதானே?‘‘ என்று சாமர்த்தியமாகக் கேட்டார். அவளும் ஒரு நல்ல விஷயத்துக்குதான் பயன்படட்டுமே என்று கருதி அதைக் கழற்றிக் கொடுத்து விட்டாள். 

முதியவரும் மூக்குத்தியைக் கடைக்கு எடுத்துச் சென்று, அதற்கு ஈடாகப் பணம் தருமாறு கோரினார். அதைப் பார்த்ததும் சீனிவாசனுக்கு பகீரென்றது. அவனுக்குத் தெரியும், அது அவன் மனைவியுடையது என்று. ஆனாலும் இது இவரிடம் வந்த மர்மத்தைத் தெரிந்து கொள்வதற்காக, ‘‘இப்போதைக்கு என்னிடம் பணம் இல்லை, இந்த நகையை கொடுத்துவிட்டு, இன்று போய் நாளை வாருங்கள், உரிய பணம் தருகிறேன்,‘‘ என்று கூறி அவரை அனுப்பி விட்டான். 

முதியவரும் மனசுக்குள் சிரித்தபடி அங்கிருந்து அகன்றார். உடனே கடையைப் பூட்டிவிட்டு சீனிவாசன் வீட்டிற்கு ஓடோடி வந்தான்.  எதிர்பார்த்தபடி மனைவி மூக்கு வெறுமையாக இருந்தது. உடனே ஒன்றும் தெரியாதவன் போல, ‘‘என்ன நீ, நவராத்திரி நாளில் இப்படி மூக்குத்தி அணியாமல் இருக்கிறாயே, போய் அணிந்து வா,‘‘ என்று சொன்னான்.

இதையும் படியுங்கள்:
மூன்றாம் நாள் - மன நிம்மதி அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி!
Navarathiri

கணவன் கண்டுபிடித்துவிட்டதை உணர்ந்த சரஸ்வதி, அவன் தன்னை மிகவும் கேவலமாக நடத்துவானே, அதைவிட உயிர் துறக்கலாம் என்று கருதி ஒரு கிண்ணத்தில் விஷம் விட்டு அதை அருந்த முற்பட்டாள். அப்போது கிண்ணத்துக்குள் எதுவோ விழுந்தது. வெளியே எடுத்துப் பார்த்தால் – அவளுடைய மூக்குத்தி! இது நிச்சயம் பாண்டுரங்கனின் அருள்தான் என்று உறுதி செய்து கொண்ட சரஸ்வதி, விரைந்து வந்து கணவனிடம் அதைக் காட்டினாள். 

திடுக்கிட்டான் சீனிவாசன். இந்த மாயம் எப்படி நிகழ முடியும்? கடையில் மூக்குத்தியை பாதுகாப்பாக பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டுதானே வந்தான்! உடனே கடைக்கு ஓடிப்போய் பெட்டியைத் திறந்து பார்த்தால் – அங்கே மூக்குத்தி இல்லை! 

அவனுடைய திகைப்பு அடங்குமுன் முதியவர் வந்துவிட்டார். ‘‘இந்தாப்பா, நீ பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, என் நகையைத் திருப்பிக் கொடு,‘‘ என்று கேட்டார். 

சீனிவாசன் தவித்தான். ‘‘இப்போதைக்குப் பணம் இல்லை, நாளைக்குள் எப்படியாவது புரட்டித் தருகிறேன்,‘‘ என்று சொல்லி சமாளித்து அவரை அனுப்பிவிட்டான். அதோடு முதியவர் எங்கே போகிறார் என்றறிய அவரைப் பின் தொடர்ந்தான். அவரோ அந்த ஊர் கோவிலுக்குள் போனார், நேரே கர்ப்பகிரகத்துக்குள் போய் அப்படியே மாயமாக மறைந்துவிட்டார்! 

இதையும் படியுங்கள்:
இரண்டாம் நாள் - இழந்ததை மீட்டுத் தருவாள் ராஜராஜேஸ்வரி!
Navarathiri

இதைக் கண்டு நெகிழ்ந்த சீனிவாசன், அப்போதே பாண்டுரங்கனின் பரம பக்தனானான். தன் சொத்துகளையெல்லாம் ஏழை எளியவர்க்கு தானம் செய்தான். ஒரு கட்டத்தில் அனைத்துப் பணமும் போனபின், மனம் உருக, மஹாலக்ஷ்மியை நோக்கி ‘பாக்யாத லக்ஷ்மி பாரம்மா…‘ என்று ஸ்ரீராகத்தில் பாடல் இயற்றி அம்பிகையின் கருணையை யாசித்தான். நாளடைவில் அவனே புரந்தரதாசன் என்றும் பெயர் பெற்றான், பல நூறு கீர்த்தனைகளை இயற்றினான். 

இப்படி அருளக்கூடியவள்தான் மஹாலக்ஷ்மி. இன்று நமக்குத் தெரிந்த மஹாலக்ஷ்மி ஸ்லோகங்களால் அன்னையைத் துதிக்கலாம். கதம்பம், மனோரஞ்சிதம் மலர்களால் அர்ச்சிக்கலாம். சர்க்கரைப் பொங்கல், கடலைப் பருப்பு வடை தயாரித்து நிவேதனம் செய்யலாம்.   

நாம் விரும்பும் அனைத்து செல்வங்களையும் அருள்வாள் மஹாலக்ஷ்மி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com