உங்க வீட்ல கொலு வைக்கிறீங்களா? 9 படிகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலும் ஆன்மீகமும்!

மனித பரிணாம வளர்ச்சி, சுண்டல் தானத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் நவராத்திரியின் அறியப்படாத உண்மைகள்!
நவராத்திரி தத்துவம் - Navarathri Traditions
நவராத்திரி தத்துவம் - Navarathri TraditionsImage credit: Gemini
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on: 

தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய சக்தியின் பெருமையை விவரிக்கும் மகத்தான பண்டிகை நவராத்திரி ஆகும். ஒன்பது இரவுகள் கொலு வைத்து கலை, வீரம், செல்வம் மற்றும் கல்வியைப் போற்றி இறை வழிபாட்டோடு மக்கள் ஒற்றுமையாகக் கொண்டாடும் புண்ணியத் திருவிழாவாக இது திகழ்கிறது.

நவராத்திரி தத்துவம்:

ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள்:

பெரும்பாலோருக்குச் புரட்டாசி மாதத்தில் வரும் ‘சாரதா நவராத்திரி’ மட்டுமே தெரியும். ஆனால், ஆகம விதிப்படி ஒரு ஆண்டுக்கு வசந்த, ஆஷாட, சாரதா மற்றும் சியாமளா என நான்கு நவராத்திரிகள் உள்ளன. இதில் ஆஷாட மற்றும் சியாமளா நவராத்திரிகள் 'குப்த நவராத்திரி' (ரகசிய நவராத்திரி) என்று அழைக்கப்பட்டு, சாக்த வழிபாட்டாளர்களால் தீவிரமாக அனுசரிக்கப்படுகின்றன.

கொலுப்படிகளின் தத்துவமும் பொம்மைகளின் வரிசையும்:

தென்னிந்தியாவில் வைக்கப்படும் பொம்மை கொலு வெறும் அலங்காரமல்ல; அது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது. ஓரறிவு கொண்ட புல், மரங்கள் முதல் ஆறறிவு கொண்ட மனிதர்கள், அதற்கு மேலாக வாழும் சித்தர்கள் மற்றும் தெய்வங்கள் வரை உயிர்கள் இறைநிலையை எயாதும் ஆன்மீகப் பயணத்தையே கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.

வழக்கமாக 9 படிகள் அமைத்து பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

முதல் படி:

ஓரறிவு கொண்ட உயிரினங்களான புல், செடி, கொடிகள்

இரண்டாம் படி:

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற நீர்வாழ் உயிரினங்கள்

மூன்றாம் படி:

மூவறிவு கொண்ட எறும்பு, கரையான் போன்ற ஊர்வன

நான்காம் படி:

நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு போன்ற பூச்சியினங்கள்

ஐந்தாம் படி:

ஐந்தறிவு கொண்ட பறவைகள் மற்றும் விலங்குகள்

ஆறாம் படி:

ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள், நாட்டுத் தலைவர்கள் மற்றும் சான்றோர்கள்..

ஏழாம் படி:

மனித நிலைக்கு மேல் உயர்ந்த மகரிஷிகள், சித்தர்கள் மற்றும் முனிவர்கள்.

எட்டாம் படி:

தேவர்கள்,அஷ்ட திக்கு பாலகர்கள் மற்றும் நவதானியக் கலசம்.

ஒன்பதாம் படி:

முப்பெரும் தேவியரான துர்க்கை, லஷ்மி, சரஸ்வதி மற்றும் பரம்பொருள் வடிவங்கள்.

இதையும் படியுங்கள்:
ஒரே இரவில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் 5 ரகசியங்கள்!
நவராத்திரி தத்துவம் - Navarathri Traditions

மராத்தியர்களின் 'கடாஸ்தாபனா' மற்றும் அகண்ட தீபம்:

மகாராஷ்டிராவில் நவராத்திரியின் முதல் நாளில் மண்பானையில் நவதானியங்களை விதைத்து அதன் மீது நீர் நிரம்பிய கலசத்தை வைப்பார்கள். இதற்கு "கடாஸ்தாபனா" என்று பெயர். ஒன்பது நாட்களும் இந்த கலசத்தின் அருகில் ஒரு அகண்ட ஜோதி அதாவது அணையாத தீபம் எரியவிடப்படும். ஒன்பதாம் நாளில் தானிய முளைகள் எவ்வளவு உயரமாக வளர்ந்துள்ளன என்பதைக்கொண்டு அந்த ஆண்டின் விவசாயச் செழிப்பை கணிப்பார்கள்.

குலு மணாலியின் வித்தியாசமான தேவதா விழா:

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு பள்ளத்தாக்கில் விஜயதசமி நாளில்தான் நவராத்திரிக் கொண்டாட்டமே தொடங்கும். அங்குள்ள கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான உள்ளூர் தெய்வங்களின் சிலைகளை அலங்கரித்து வழிபடுவது வழக்கம்.

நவராத்திரி தத்துவம் - Navarathri Traditions
நவராத்திரி தத்துவம் - Navarathri TraditionsImage credit: Gemini

கர்நாடகாவின் மைசூர் தசரா மற்றும் மல்யுத்தம்:

மைசூரில் நவராத்திரி "தசரா" என்ற பெயரில் அரசு பாரம்பரியத்துடன் கொண்டாடப்படுகிறது. மைசூர் அரண்மனை லட்சக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க அம்பாரியில் யானை மீது ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறாள். மேலும் இந்நாட்களில் பழமையான சாமுண்டி பாரம்பரிய மல்யுத்த போட்டிகள் நடத்தப்படுவது மிகவும் புகழ்பெற்ற சிறப்பு அம்சமாகும்.

மேற்கு வங்கத்தின் சிந்துர் கேலா:

துர்க்கா பூஜையின் கடைசி நாளான விஜயதசமி அன்று சுமங்கலிப் பெண்கள் துர்க்கை அம்மனுக்கு விடை கொடுக்கும் விதமாக அன்னைக்கு சிந்துரம் சாத்தி பின் ஒருவர் மீது ஒருவர் சிந்துரம் பூசி "சிந்துர் கேலா" என்ற சடங்கை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

இது குடும்ப ஒற்றுமையையும், கணவனின் நீண்ட ஆயுளையும் வேண்டி நடத்தப்படும் பிரத்யேக வழிபாடாகும்.

நவராத்திரி தத்துவம் - Navarathri Traditions
நவராத்திரி தத்துவம் - Navarathri TraditionsImage credit: pixabay

பலிதானத்திற்குப் பதில் காய்கறிகள் அறுத்தல்:

ஆதி காலத்தில் வழங்கப்பட்ட விலங்கு பலிக்கு மாற்றாக தற்காலத்தில் நவராத்திரி வழிபாட்டில் பூசணிக்காய், எலுமிச்சம்பழம் அல்லது வாழைக்காய் வெட்டி பலி கொடுக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இது மனித மனதில் உள்ள காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் ஆறு தீய குணங்களை அறுத்து எரிவதைக் குறிக்கும் ஆன்மிகக் குறியீடாகும்.

தானியங்களின் அறிவியல் அற்புதம்:

நவராத்திரியின்போது 'முளைப்பாரி' வளர்ப்பதும், தினமும் ஒரு வகைத் தானியத்தைச் சுண்டலாகச் செய்து படைப்பதும் வெறும் வழக்கமல்ல. பருவநிலை மாறும் இக்காலத்தில் உடலுக்குத் தேவையான புரதச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதற்காகப் பூர்வீகக் காலத்தில் வகுக்கப்பட்ட மிகச்சிறந்த ஆரோக்கியக் கோட்பாடாகும்.

வண்ணங்களும் அஷ்டகோண வழிபாடும்:

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணம் மற்றும் நவக்கிரகங்களின் தொடர்பு உண்டு. ஒன்பது நாட்களும் இறைவிக்குச் சாத்தப்படும் வண்ண ஆடைகளும், அஷ்டகோணக் கோலங்களும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை அதிர்வுகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை.

நவராத்திரி திருவிழா என்பது வெறும் வழிபாட்டு முறை மட்டுமல்ல; அது மனித வாழ்வின் பரிணாமம், ஆரோக்கியம், இயற்கை சார்ந்த அறிவியல் மற்றும் ஆன்மீக ஒருங்கிணைப்பின் உயரிய அடையாளமாகும். நவராத்திரி விழா பக்தியோடு சேர்ந்து மனித உறவுகளையும் பண்பாட்டையும் வளர்க்கிறது.

அருள்மிகு அன்னையின் ஆசியால் வாழ்வில் அறியாமை இருள் விலகி அறிவும் செல்வமும் அமைதியும் பெருகட்டும். இத்தகைய அரிய தத்துவங்களைப் புரிந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடும்போது, நம் இல்லத்திலும் உள்ளத்திலும் அன்னை பராசக்தியின் அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி கொலு: பொம்மைகளை படிமுறையாக அடுக்குவது ஏன்? ஒளிந்துள்ள ஆன்மீக அறிவியல்!
நவராத்திரி தத்துவம் - Navarathri Traditions
logo
Kalki Online
kalkionline.com