

வந்து விட்டது நவராத்திரி கொண்டாட்டம். சக்திகளின் அம்சங்களுக்கு நன்றி கூறும் இந்துகளின் பெருவிழா. பரணில் இருக்கும் பொம்மைகளுக்கு அலங்காரம் ஆராதனை நடைபெறும் 9 நாள் பண்டிகை.
நவராத்திரி கொலுவில் பொம்மைகளை படிகளில் முறையாக அடுக்குவதற்கு பின்னால் மிக ஆழமான ஆன்மீக, அறிவியல் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி தத்துவங்கள் உள்ளன. அதைப்பற்றி இங்கு காண்போம்.
அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் வடிவமே என்பதை உணர்த்துவதற்கும், மனிதன் தன் வாழ்க்கையில் ஆன்மீக ரீதியாக எப்படிப் படிப்படியாக முன்னேறி இறைநிலையை அடைய வேண்டும் என்பதை விளக்குவதன் அடிப்படையே இந்த படிமுறை அமைப்பு .
ஏன் படிகள் அமைக்கிறார்கள்?
கொலுவில் பொதுவாக 3, 5, 7, 9 அல்லது 11 படிகள் என்ற ஒற்றை எண்கள் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு படியும் வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளையும், உலகில் உள்ள உயிரினங்களின் பரிணாம நிலையையும் குறிக்கும் என்ற பாரம்பரிய விளக்கம் உள்ளது. 9 படிகள் கொண்ட பாரம்பரிய கொலுவில் பொம்மைகள் அடுக்கப்படும் முறை மற்றும் எதற்காக எனும் அதன் தத்துவமும் அறிந்து நவராத்திரியை கொண்டாடி மகிழ்வதே சிறப்பு.
9 கொலுப் படிகளின் சுருக்கமான தத்துவ விளக்கம்
1-ஆம் படி- புல், செடி, கொடி, மரம் போன்ற தாவரங்களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன. அதாவது தொடுதல் அறிவு மட்டும் உள்ள ஓரறிவு உயிர்கள் முதல் படியில் இடம் பெறுகின்றன.
2-ஆம் படி - சங்கு, நத்தை, சிப்பி போன்ற தொடுதல் + சுவை அறிவு உள்ள ஈரறிவு உயிர்களான கடல் வாழ் உயிரினங்களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.
3-ஆம் படி- தொடுதல் + சுவை + மோப்ப அறிவு உள்ள மூவறிவு உயிர்களான எறும்பு, கரையான் போன்ற பூச்சி வகைகளின் பொம்மைகள் இடம் பெறுகின்றன.
4-ஆம் படி - தொடுதல் ,சுவை ,மோப்பம் , பார்வை அறிவு உள்ள நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு, தவளை, தும்பி போன்ற உயிரினங்களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.
5-ஆம் படி- பறவைகள் மற்றும் விலங்குகளின் (சிங்கம், யானை, பசு, குதிரை) பொம்மைகள் வைக்கப்படுகின்றன. தொடுதல், சுவை, மோப்பம், பார்வை, கேட்கும்அறிவு உள்ள ஐந்தறிவு ஜீவன்கள் இவை.
6-ஆம் படி - பகுத்தறிவு கொண்ட மனித நிலையான ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் இதில் வைக்கப்படும். சாதாரண மனிதர்கள், உழவர், நெசவாளர், வியாபாரிகள் என பல்வேறு தொழில் செய்யும் மக்கள் மற்றும் செட்டியார்-செட்டிச்சி பொம்மைகள் வைக்கப்படுகின்றன.
7-ஆம் படி - சாதாரண மனித நிலையிலிருந்து உயர்ந்து ஆன்மீகப் பாதையில் சென்ற முனிவர்கள், சித்தர்கள், மகான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் தேசத் தலைவர்களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.
8-ஆம் படி- நாம் வணங்கும் அவதார மூர்த்திகளான தசாவதார மூர்த்திகள், அஷ்டலட்சுமிகள், மற்றும் நவகிரகங்கள் போன்ற தெய்வங்களின் அவதாரங்கள் மற்றும் தூதுவர்களின் சிலைகள் மற்றும் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.
9-ஆம் படி- உச்சியில் இருக்கும் இந்த உயர்ந்த படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், முப்பெரும் தேவிகளான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளும், நடுநாயகமாக ஜீவாதாரமான மங்கள கலசமும் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. வீட்டின் வழக்கத்தைப் பொறுத்து கலசம், மரப்பாச்சி பொம்மைகள் அல்லது குலதெய்வம் மற்றும் முக்கிய தெய்வ உருவங்கள் வைக்கப்படுகின்றன.
சுருக்கமாக கீழே உள்ள படிகளில் துவங்கி ஓரறிவு உயிரில் தொடங்கி, படிப்படியாக ஆறறிவு மனிதனாக உயர்ந்து, பின்பு பக்தி மற்றும் ஞானத்தின் மூலம் மகான்களாக மாறி, இறுதியில் இறைவனின் பாதத்தை சரண் அடைய வேண்டும் என்ற பரிணாம வளர்ச்சியையும் ஆன்மீக தத்துவத்தையும் உணர்த்தவே கொலு படிகளில் இவ்வாறு வரிசைப்படி முறையாக அடுக்கப்படுகிறது.
மேலும் “கீழே இருப்பது குறைவு, மேலே இருப்பது அதிகம்” என்ற கடுமையான விதி கிடையாது. கொலுவின் முக்கிய நோக்கம் பக்தி, கலை, பாரம்பரியம் மற்றும் குடும்ப ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகும். எனவே, குடும்பத்தில் தலைமுறையாக வரும் பொம்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கலாம்.
இந்த கொலு படிகளை உயிரின நிலையிலிருந்து மனித நிலை → ஞானம் → தெய்வீக நிலை” என்ற உயர்வை குறிக்கும் ஒரு குறியீடாக பார்க்கலாம்.
அதனால்தான் கீழே இருந்து மேலே செல்லச் செல்ல பொம்மைகளின் நிலையும் உயர்கிறது. இது மனிதன் அறியாமையிலிருந்து பகுத்து உணரும் அறிவையும் ஆன்மிக ஞானத்தையும் நோக்கி உயர வேண்டும் என்ற கருத்தை நினைவூட்டுகிறது.
இன்னொரு முக்கிய காரணம்
கொலு என்பது வெறும் பொம்மைக் கண்காட்சி மட்டுமே அல்ல. நவராத்திரியின் 9 நாட்களிலும் வீட்டில் தெய்வீகச் சூழலை உருவாக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒன்று கூடி வழிபாடு, பாடல், பக்தி, கலை, சமூக உறவு ஆகியவற்றை வளர்க்கும் பாரம்பரியமாகவும் உள்ளது. அக்கம்பக்கத்தினரை அழைத்து பரிசுகள் தந்து ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிரும் வண்ணம் இந்த நவராத்திரி விளங்குவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக எல்லா குடும்பங்களிலும் படிகளின் எண்ணிக்கையும், ஒவ்வொரு படியிலும் வைக்கப்படும் பொம்மைகளும், பிரசாதங்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இவை பெரும்பாலும் குடும்பப் பாரம்பரியம் மற்றும் அந்தந்த பிராந்திய வழக்கத்தின்படி மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது ஏதேனும் ஆன்மீகம் மற்றும் சமூகம் சார்ந்த கருப்பொருளை மையப்படுத்தி அதைக் காட்சிப்படுத்தும் கொலு அனைவரையும் கவர்கிறது. இந்த பொம்மை காட்சிகளுக்கு நல்ல கற்பனை வளமும் உழைப்பும் இருந்தால் மட்டும் போதும். இதற்கு எவ்வித நியதிகளும் அல்லது கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் சிறு வயதினரும் ஆர்வமுடன் இந்த நவராத்திரியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி கொலு படிகள் அமைப்பது வெறும் பொம்மை கண்காட்சி அல்ல; அது மனிதன் அறியாமையிலிருந்து ஆன்மீக ஞானத்தை நோக்கி உயரும் உயரிய பரிணாமத் தத்துவம் என்பதை வாசகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.