

குஜராத், மகாராஷ்டிரா பகுதியில் நவராத்திரி என்பது கர்பா மற்றும் தாண்டியா நடனங்களுக்குப் புகழ்பெற்றது. மேற்கு வங்காளமோ பிரம்மாண்டமான பந்தல்கள் மற்றும் ஊர்வலங்களுடன் துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி வழிபாடு:
தென்னிந்தியாவில் கொலு பொம்மை காட்சிப்படுத்தும் பாரம்பரியம் மற்றும் பக்திப் பாடல்கள் இசைப்பது வழக்கமாக உள்ளது. உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் ராமரின் வெற்றிக்கதையுடன், கடுமையான விரதங்களோடும் தொடர்புடையது. ராமலீலா நிகழ்வுகள் 9 நாட்கள் நடைபெறும். 10ஆம் நாள் தசரா அன்று ராவணனின் பிரம்மாண்டமான உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு, தீமையின் அழிவு கொண்டாடப்படுகிறது.
இப்படி நாடு முழுவதிலும் பல்வேறு பழக்க வழக்கங்கள் இருந்தபோதிலும், தேவியைப் போற்றுவதும், தீமையின் மீது நன்மையைக் கொண்டாடுவதுமான இந்த விழாவின் முக்கிய செய்தியாக உலகளாவி நிலைத்திருக்கிறது.
நவராத்திரியில் தேவியின் 9 வடிவங்கள்:
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் துர்கையின் 9 வடிவங்கள் (நவ துர்கா) மற்றும் இச்சா, கிரியா, ஞான வடிவங்களாக துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவி வழிபடப்படுகிறாள். சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாந்தா, குஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, காலராத்திரி, மகாகௌரி, சித்திதாத்ரி ஆகிய 9 வடிவங்களில் தேவி வழிபடப்படுகிறாள்.
முதல் நாள் சைலபுத்ரியாக பர்வத ராஜனின் மகளாக வழிபடப்படும் இவள் வலிமை மற்றும் தைரியத்தை வழங்குபவள். மாட்டின் மீது அமர்ந்து கையில் சூலமும் தாமரையும் ஏந்தி இருப்பாள்.
2ஆம் நாள் பிரம்மச்சாரிணியாக தவம் மற்றும் ஒழுக்கத்தின் வடிவமாக போற்றப்படும் இவள் நமக்கு ஞானம் அளிப்பவள். தவக்கோலம் பூண்ட இந்த தேவி வெறும் கால்களுடன் நடந்து, கைகளில் ஜெபமாலையும் கமண்டலமும் ஏந்தி இருப்பாள்.
3ஆம் நாள் சந்திரகாந்தா என்று அழைக்கப்படும் இவளோ நெற்றியில் பிறை சந்திரனை மணியைப் போல அணிந்தவள். புலியின் மீது அமர்ந்து, பத்து கைகளில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு தீமையை அழிப்பவளாக காட்சி தருகிறாள்.
4ஆம் நாள் பிரபஞ்சத்தை தன் புன்னகையால் படைத்த தேவியான கூஷ்மாண்டா தேவிக்கு உரியது. இவள் சிம்ம வாகனத்தில் அமர்ந்து எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள்.
5ஆம் நாள் தாய் அன்பின் அடையாளமாக ஸ்கந்த மாதாவாக காட்சி தரும் இவள் தன் மடியில் கார்த்திகேயனை (முருகன்) அமர்த்தி சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கிறாள்.
6ஆம் நாள் மகிஷாசுரனை வதம் செய்த வீரப் போர் வடிவம் கொண்டு காத்யாயனியாக காட்சி தருகிறாள். காத்யாயன முனிவரின் மகளாக அவதரித்த மகிஷாசுரமர்த்தினி சிம்ம வாகனத்தில் நான்கு கரங்களுடன் அசுரர்களை அழிக்கும் காலத்தில் காணப்படுகிறாள்.
7ஆம் நாளோ துர்கையின் உக்கிரமான வடிவத்துடன் பயத்தை போக்குகின்ற காலராத்திரி வடிவம் கொண்டுள்ளாள். இருண்ட நிறமும், கத்தரித்த தலைமுடியும் கொண்ட பயங்கரமான வடிவம் கொண்டு கழுதையின் மீது அமர்ந்து தீமைகளை அழிக்கும் அன்னையாக அருள்புரிகிறாள்.
8ஆம் நாள் அமைதியைத் தரும், தூய்மை மற்றும் அழகின் வடிவமாக காளையின் மீது அமர்ந்து நான்கு கரங்களுடன் மகாகௌரியாகத் திகழ்கிறாள்.
9ஆம் நாள் நான்கு கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்து, அனைத்துவிதமான சித்திகளையும் அதாவது வரங்களையும், ஆன்மீக சக்திகளையும் வழங்கும் சித்திதாத்ரியாக அருள்புரிகிறாள்.
தமிழக பாரம்பரியத்தில் நவராத்திரியை மூன்று மூன்று நாட்களாகப் பிரித்து முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், இடைப்பட்ட மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் மகா சரஸ்வதியையும் வழிபடும் வழக்கம் உள்ளது.
நவராத்திரி விழா நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்:
சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தைரியம், சுய கட்டுப்பாட்டையும் பக்தியையும் கடைப்பிடிக்க கூடிய ஒழுக்கத்தையும், பிறர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இரக்கம் காட்டும் கருணை உள்ளத்தையும், வேற்றுமையில் ஒருமைப்பாட்டை கொண்டாடும் ஒற்றுமையையும் கற்றுத்தருகிறது.
அத்துடன் நம்பிக்கையின் மூலம் நல்ல பலன்களுக்காகக் காத்திருக்கும் பொறுமை, தடைகளை வெல்லும் மீள்திறன், எண்ணங்களையும் செயல்களையும் தூய்மைப்படுத்தும் குணம் மற்றும் நன்றியுணர்வு போன்றவற்றை இந்த நவராத்திரி விழா நமக்கு கற்றுத்தருகிறது.