

நம் தென் மாவட்டங்களில் சிறு தெய்வ வழிபாடு என்பது மிகச் சிறப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சிறு தெய்வங்களேயே கிராமத்து மக்கள் வணங்கி வருகின்றனர். இப்படி கிராமத்து மக்கள் வணங்கும் தெய்வங்களில் முனியப்ப சாமி என்பது முக்கியமான காவல் தெய்வமாகும். இது ஒரு சில மக்களுக்கு குலதெய்வமாகவும் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட காவல் தெய்வமான முனியசாமி கமுதி அருகில் உள்ள பாப்பனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வரலாற்றைப் பற்றி இக்கட்டுரையில் இனி விரிவாய் காண்போம்.
ஒட்டிக்கொண்டு வந்த முனியப்ப சாமி!
ஆதி ஒரு காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி பக்கத்தில் விடத்தக்குளம் என்ற ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் உள்ள மக்கள் அங்கு பஞ்சம் ஏற்பட்டதால் பிழைப்பு தேடி மற்ற ஊருக்கு செல்ல தயாரானார்கள். அப்படி மற்ற ஊருக்கு செல்லும் பொழுது அந்த ஊரில் உள்ள முனியப்பசாமி அசரீரி மூலம் “நானும் உங்களுடன் வருகிறேன்” என்று விடத்த குலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்,
“நாங்கள் உங்களை எப்படி ஐயா! தூக்கிக்கொண்டு அவ்வளவு தூரம் செல்வது?”
என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த முனியப்ப சாமி,
“நான் உங்கள் மீது ஒரு செத்தை (உலர்ந்த சருகு) போன்று ஒட்டிக்கொண்டு வருகிறேன். என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாப்பனம் கிராமத்தில் கோயில் வாங்கிய முனியப்பசாமி!
இப்படி வெகு தூரத்திலிருந்து வந்த தம்பதியினர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் உள்ள பாப்பனம் என்ற கிராமத்திற்கு வந்தடைந்தனர். அப்பொழுது அந்த முனியப்ப சாமி “இந்த எல்லையிலேயே என்னை விட்டு விடுங்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த தம்பதியினரும் அந்த முனியப்ப சாமியை அந்த ஒரு திடலில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பாப்பனம் கிராமத்தில் உள்ளே சென்றவுடன் அந்த ஊர் மக்களால் அந்த தம்பதியினர் விசாரிக்கப்படுகின்றனர். அதற்கு அந்த தம்பதியினர்கள் “நாங்கள் விடத்தக்குளம் என்ற ஊரில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக இங்கு வந்துள்ளோம். நாங்கள் வரும்போது முனியப்ப சாமியையும் கூட்டி வந்துள்ளோம். அவர் இந்த ஊர் எல்லையில் இறக்கி விடச் சொன்னதால் அவரை இந்த ஊர் எல்லையில் இறக்கி வைத்துள்ளோம்.” என்று கூற,
அந்த ஊர் மக்கள் அங்கு சென்று, அவரை வணங்குகின்றனர். அவர் வடக்கு திசையில் இருந்து வந்ததால் “நான் வடக்குதிசை நோக்கி பார்த்தபடியாக இங்கேயே இருப்பேன்! எனக்கு கோயில் கட்டி வணங்கி வந்தால் உங்களை நான் காலத்துக்கும் காத்து நிற்பேன்!" என்று அந்த முனியப்ப சாமி கூறியதாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். அந்த முனியப்ப சாமியையே தங்கள் குலதெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.
ஊர் மக்களால் முனியப்ப சாமிக்கு கட்டப்பட்ட கோயில்!
அந்த ஊர் மக்களால் பிறகு முனியப்ப சாமிக்கு ஒரு சிறு கோவில் எழுப்பப்பட்டது. முனியப்ப சாமிக்கு சில மாதங்கள் மட்டுமே பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு முனியப்ப சாமிக்கு எந்த ஒரு பூஜைகளும் நடத்தாமலும் விளக்குகள் ஏற்றாமலும் அப்படியே விட்டு விட்டனர்.
தெருவிளக்கு எரியவில்லை!
அந்த ஊரில் 150 குறைவான வீடுகளே உள்ளன. அந்த ஊர் பொதுமக்கள் தெருவிளக்கு அமைத்த போது இரண்டு நாட்களில் தெருவிளக்கு எறியாமல் போனது. மின்சாரம் தடைபட்டு போனது. இது ஏனென்றே அவர்களுக்கு தெரியவில்லை. பிறகு அந்த ஊர் மக்கள் ஒருவரின் கனவில் முனியப்ப சாமி தோன்றி “கோவிலில் விளக்கு எரியாமல் நான் மட்டும் இருட்டில் இருக்கும்போது நீங்கள் எப்படி தெருவிளக்கு வெளிச்சத்தில் இருக்கலாம்?” என்று கேட்டதாக கூறப்படுகிறது. பிறகு அந்த ஊர் மக்கள் முனியப்பசாமி கோவிலில் மின்விளக்கை ஏற்றி வைத்த பிறகே இந்த ஊர் மக்கள் தெரு விளக்கு தடையில்லாமல் எரிந்ததாக கூறப்படுகிறது.
முனியப்ப சாமியின் உத்தரவு!
விடத்தக்குளம் என்ற ஊரில் இருந்து வந்த முனியப்ப சாமி “எனக்கு எழுப்பிய கோவிலில் தங்ககதவு மட்டுமே போடவேண்டும்! அப்படி தங்க கதவு போட முடியவில்லை என்றால் உங்கள் வீட்டில் யாரும் நிலை கதவு வைக்க கூடாது. எனக்கு நீங்கள் தங்ககதவு போட்டால் மட்டுமே உங்கள் வீட்டில் நிலை கதவு வைக்க முடியும்” என்று முனியப்பசாமி பாப்பனம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு உத்தரவு கொடுத்துள்ளார்.
கதவு இல்லாத பாப்பனம் கிராமம்!
முனியப்ப சாமி கூறிய உத்தரவை இன்று வரை அந்த மக்கள் பின்பற்றி வருகின்றனர். பாப்பனம் கிராமத்தில் உள்ள எந்த ஒரு வீட்டிலும் நிலை கதவு இல்லாமலே இன்று வரை உள்ளது. அப்படி கதவு வைக்க வேண்டுமென்றால், அது இரும்பு கதவாகவும், கம்பி கதவாக மட்டுமே இருக்கிறது. இப்படிப்பட்ட தெய்வ நம்பிக்கை உடைய கதவு இல்லாத கிராமம் பாப்பனம் என்ற கிராமம் ஆகும்.
நிலை கதவு வைத்தவர் நிலைகுலைந்து போனார்!
பாப்பனம் கிராமத்தில் ஒரு சில நபர்கள் முனியப்ப சாமியின் உத்தரவு தெரிந்திருந்தும், வீட்டில் நிலை கதவு வைத்துள்ளனர். அப்படி வைத்தவர்களை முனியப்பசாமி இரண்டு மூன்று நாட்களில் மதி கெட்டுப் போகும்படியாக செய்துள்ளார். அவர்கள் வீட்டில் ஆடு, மாடு அனைத்துமே இறந்து போனதாகவும் மற்றொருவர் வீட்டில் இடி விழுந்து அந்த வீட்டில் இரண்டு பேர் மாண்டு போனதாகவும் அந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. பாப்பனம் கிராமத்தில் உள்ள மக்கள் வேறு ஒரு ஊருக்கு பிழைக்கச் சென்றாலும் அந்த ஊரில் அவர்கள் நிலை கதவு வைக்க முடியாது. அப்படி மீறி நிலை கதவு வைப்பவர்களுக்கு வீட்டில் கை, கால்கள் விளங்காமலும், நோய்வாய்ப்பட்டும், சிலர் இறந்துமே விடுகின்றனர் என்று கூறப்படுகிறது.
கனவில் வந்து காட்டிக் கொடுக்கும் முனியப்பசாமி!
இந்த கிராமத்தில் எந்த ஒரு வீட்டிலும் நிலை கதவு இல்லாததால் திருட்டு எளிமையாக நடக்கும் என்று நமக்கு எண்ணத் தோன்றும். ஆனால் அது இங்கே விதிவிலக்காக இருக்கின்றது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வீட்டில் திருடன் திருடினால் அந்த திருடனை முனியப்ப சாமி கனவில் வந்து காட்டிக் கொடுப்பதாகவும் அப்படி திருடியவன் கண்கள் தெரியாமல் போனதாகவும், திருடியதை ஒப்புக்கொண்டு விட்டு சில நாட்களில் இறந்து விடுவதாகவும் கூறுகின்றனர். இப்படி இருப்பதால் இந்த ஊரில் களவு என்பதே நடக்காது என்று கூறுகின்றனர். இங்கு முனியப்ப சாமிக்கு பயந்து எந்த ஒரு மக்களும் திருடுவதில்லை என்று அந்த மக்கள் கூறும் போது முனியப்ப சாமி மிகத் துடியான தெய்வமாக இங்கே இருக்கிறார் என்பது தெரிகிறது. இவர் துடியான முனியப்பசாமி என்றும் தன்னுடைய பக்தருக்கு கெடுதல் செய்தால் துடித்து எழுந்து தண்டனை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.
நினைத்த வரம் கொடுக்கும் முனியப்ப சாமி!
இந்த முனியப்பசாமிக்கு வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் நாம் என்ன காரியத்தை நினைத்து முனியப்ப சாமியை வேண்டுகிறோமோ அந்த காரியத்தை கட்டாயமாக நடத்திக் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் போது இவரை பேரைச் சொல்லி தொடங்கினால் அந்த காரியம் வெற்றியாகிறது என்று சொல்லப்படுகிறது. அந்த ஊர் கிராம மக்கள் வயல் வேலைக்கு செல்லும் போது முனியப்ப சாமி கோவிலில் வாசலில் நின்று மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு சென்றால் அவர்களின் கண்களுக்கு பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் தட்டுப்படாது என்று அந்த மக்கள் அதிசயமாக கூறுகின்றன.
பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி மகிழும் மக்கள்!
இந்த பாப்பனம் கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முனியாண்டி, முனியப்ப சாமி, முனியப்பன், சின்ன முனியாண்டி, பெரிய முனியாண்டி என்றும் பெண் குழந்தைகளுக்கு முனியம்மாள், முனியக்காள் என்றும் பெயர் சூட்டுகின்றனர். இந்த முனியப்ப சாமியிடம் குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை வரம் கேட்டால் உடனே அவர்களுக்கு குழந்தை வரத்தை கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
நேர்த்தி கடனை செலுத்தும் பக்தர்கள்!
இந்த பாப்பனம் கிராமத்தில் உள்ள முனியப்ப சாமியின் சக்தியை அறிந்த மக்கள் பல வேண்டுதல்களை அவரிடம் வைக்கின்றனர். அப்படிப்பட்ட வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு அவருக்கு பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், மணிவாங்கி தொங்க விடுதல், கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி தருதல், அன்னதானம் செய்தல் போன்ற ஏதாவது ஒரு செயலை நேர்த்திக்கடனாக இங்கு முனியப்ப சாமிக்கு செலுத்துகின்றனர்.
தண்டனைகள் அதிகரித்தால் மட்டுமே தப்புகள் குறையும். அதைப்போல இந்த பாப்பனம் கிராமத்தில் உள்ள முனியப்ப சாமி உடனடியாக தண்டனைகள் வழங்குவதால் இங்கு தப்புகள் என்பது தடம் தெரியாமல் போய்விட்டது.
இந்த பாப்பனம் கிராமத்தில் உள்ள முனியப்ப சாமியின் சிலை சிறியதாக இருந்தாலும் அவருடைய புகழ் மிகப்பெரியதாகும். ஆகையால் பாப்பனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள முனியப்ப சாமியின் அருள் பெற்று வாழ்வோம்!