
அபிஜித் நட்சத்திரம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரக் கூடிய நட்சத்திரமாக உள்ளது. அபிஜித் நட்சத்திரம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வானில் தோன்றும். இது ஒரு சுப நட்சத்திரமாக கருதப்படுவதால், அந்த நேரத்தில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தேடித் தரும் என்று நம்பப்படுகிறது.
அபிஜித் நட்சத்திரம் என்பது 27 நட்சத்திரங்களுக்கு பிறகு வரும் 28வது நட்சத்திரமாகும். பண்டைய ஜோதிட சாஸ்திரத்தில் 28 நட்சத்திரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் அபிஜித். இவை பெரும்பாலும் பகல் 12 முதல் 12.30 மணி வரை(சிலர் 11.45 முதல் 12.30 வரை) உள்ள நேரத்தை அபிஜித் முகூர்த்தம் என்பார்கள். இது மகர ராசியில் அமைந்துள்ளது. உத்திராடத்தின் கடைசி பாதத்தையும், திருவோணத்தின் முதல் பாதத்தையும் உள்ளடக்கியது. இது கிருஷ்ண பரமாத்மாவின் தலையில் இருக்கக்கூடிய மயிலிறகு என்கிறது மகாபாரதம்.
மகாபாரதத்தில் குருசேத்திரப் போர் தொடங்கும் முன்பு சகுனி சகாதேவனிடம் எந்த நேரத்தில் போரைத் தொடங்கினால் வெற்றி பெற முடியும் என்று நேரத்தை குறித்து தரும்படி துச்சாதனனை அனுப்ப, ஜோதிடத்தில் வல்லவனான சகாதேவன் உண்மையை மறைக்காமல் அவர்களுக்கு வெற்றி பெறும் வகையில் அபிஜித் நட்சத்திரம் தோன்றும் நேரத்தை குறித்துக் கொடுத்தார்.
இதை கண்ட கிருஷ்ணர் அந்த நட்சத்திரத்தில் கௌரவர்கள் போரைத் தொடங்கினால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் வானில் இருந்து அபிஜித் நட்சத்திரத்தை எடுத்து தன் மயிலிறகில் மறைத்து வைத்துக் கொண்டதாகவும், மறுநாள் போர் தொடங்கும் வேளையில் இந்த நட்சத்திரத்தின் பலன் இல்லாமல் போகவே கௌரவர்கள் போரில் தோற்றுப் போனார்கள் என்றும் மகாபாரதம் கூறுகிறது.
பாரதப் போர் முடிந்ததும் தேவர்கள் கிருஷ்ணரிடம் அந்த நட்சத்திரத்தை மீண்டும் அதன் இடத்தில் வைக்குமாறு வேண்ட, கிருஷ்ண பகவான் அபிஜித் நட்சத்திரத்தை வானில் தோன்றுமாறு அருளியதாகவும் கூறப்படுகிறது.
அபிஜித் நட்சத்திரம் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தோன்றுவதில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட தேதியில் தோன்றக்கூடிய இந்த நட்சத்திரத்தின் நேரத்தை அறிந்து அதற்கேற்ப செயல்களை செய்வது நல்லது.
அபிஜித் நட்சத்திரம் என்பது உத்திராடம் மற்றும் திருவோணம் ஆகிய நட்சத்திரங்களுக்கு இடையே வருகிறது. இந்த நேரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள், தொழில் தொடங்குவது போன்ற செயல்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். இந்த நட்சத்திரத்தில் செய்யப்படும் திருமணங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும் என்று நம்பப்படுகிறது.
அபிஜித் நட்சத்திரம் என்பது மகர ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி பகுதியிலும் திருவோணம் நட்சத்திரத்தின் முதல் பகுதியிலும் அமையும். அந்த நேரத்தில் பிரார்த்தனைகள் செய்வது மிகவும் பலனுள்ளதாக இருக்கும். நம்முடைய நியாயமான ஆசைகள் நிறைவேற இந்த நேரத்தில் பிரார்த்தனைகள் செய்யலாம்.
இந்த நட்சத்திரத்தின் பொழுது ஆன்மீக நடவடிக்கைகளை மேற்கொள்வதும், பயணங்களை மேற்கொள்வதும் பாதுகாப்பானதாகவும், பலனளிக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் நேர்மறையான பலன்களையும், விரைவான மீட்சியையும் தருவதாக நம்பப்படுகிறது.