நம்மிடையே பல்வேறு வடிவிலான வழிபாடு முறைகள் இருந்து வருகின்றன . நம்முடைய வாழ்க்கையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தீமைகளில் இருந்து விலகி நம்மை தற்காத்துக் கொள்வதற்காகவும் பல்வேறு வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்றி வருகிறோம். அதன் வரிசையில் கண் திருஷ்டி, எதிரிகளின் தொல்லை, பில்லி, சூனியம் போன்ற இடையூறுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிபாட்டு முறைகளுள் ஒன்றான மிளகாய் பூஜை இந்த திருத்தலத்தில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அத்தகைய சிறப்புகளை பெற்ற கோவிலையும் அதன் பின்னணி வரலாற்றையும் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பிரத்யங்கிரா ஆலயம். ஓசூரில் இருந்து சென்னைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறத்தில் மிகப்பெரிய ராஜகோபுரத்துடன், (கிட்டத்தட்ட ராஜ கோபுரத்தின் உயரத்தின் அளவிற்கு) பிரத்யங்கிரா தேவியின் சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயில் மிகவும் பிரமாண்டமாக பயத்தை ஏற்படுத்தும் சிங்க முகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் நுழைவு வாயிலை கடந்தவுடன் சரபேஸ்வரர் அவதாரத்தில் சிவபெருமானும் பிரத்யங்கிரா தேவி அவதாரத்தில் சக்தியும் வடிவமைக்கப்பட்டுள்ளனர். இந்த பிரத்யங்கிரா தேவியின் முன்புறத்தில் மிகப்பெரிய அளவிலான ஒரு யாக குண்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாக குண்டத்தில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மிளகாய் பூஜை நடத்தப்படுகிறது. கண் திருஷ்டி, பில்லி, சூனியம் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக உணர்பவர்கள் இக்கோவிலுக்கு செல்லும்போது மிளகாயையும், நெய்யையும் வாங்கி வழிபட்டுவிட்டு அதனை அங்கு வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். பின் நாட்களில் வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி பூஜையின் போது அவை, யாக குண்டத்தில் வீசப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.
பிரத்தியங்கிரா தேவி குறித்து புராணக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. ஒரு முறை விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்தாராம். அப்போது விஷ்ணுவின் கோபத்தின் அளவினை தாங்கிக் கொள்ள முடியாமல் முனிவர்களும் சித்தர்களும் மிகவும் அசௌரியமான சூழலை உணர்ந்தனர். எனவே அவர்கள் அனைவரும் விஷ்ணுவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சிவபெருமானின் உதவியை நாடினார்களாம். அப்போது முனிவர்களின் வேண்டுதலுக்கிணங்க சிவபெருமான் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்து நரசிம்மரை அடக்க சென்றாராம். ஆனால் நரசிம்மர் சிவபெருமானுக்கு எதிராக கண்ட பேருண்டம் என்ற பறவையை ஏவியதாகவும், அதனை தடுப்பதற்காக சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு சக்தியை உருவாக்கியதாகவும் அந்த சக்தி தான் பிரத்யங்கரா தேவி என்றும் சொல்லப்படுகிறது. அதனால்தான் இங்கு வைக்கப்பட்டுள்ள இந்த பிரத்யங்கிரா தேவியின் சிலை மிகவும் ஆக்ரோஷமாக கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சரபேஸ்வரர் மற்றும் பிரத்யங்கிரா தேவியின் சிலைகளுக்கு பக்கத்தில் சக்தியின் அவதாரத்தை குறிக்கும் வகையில் பல்வேறு சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோவிலின் நுழைவு வாயிலை கடந்தவுடன் ஒரு மாபெரும் விளக்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கில் பிரத்யங்கிரா தேவியே அமர்ந்திருக்கும் வண்ணம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரத்தியங்கிரா தேவிக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது போலவே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடும் சிலையும் மிகவும் பிரமாண்டமாக இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலை கீழே ஊன்றி ஒரு காலை மேலே தூக்கிய வண்ணம் ருத்ரதாண்டவம் ஆடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவபெருமான் சிலையின் காலுக்கு அடியில் புகுந்து தான் கோவிலை கடந்து செல்லுமாறு மிகவும் தத்ரூபமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் அமைந்துள்ள இந்த கோவிலானது சக்தி மற்றும் சிவபெருமானின் கோபத்தினை வெளிப்படுத்தும் வகையில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. வாய்ப்புகள் கிடைக்கும் போது நீங்களும் சென்று அதனை கண்டு தரிசித்து மகிழுங்கள்!