நாம் வழக்கமாக எது நடந்தாலும் இது நாஸ்டர்டாமஸ் கூறியது அல்லது பாபா வாங்கா கூறியது என்று அவர்களைப் பற்றி நிறைய விவாதிக்கிறோம். ஜோதிடமும் வானியல் சாஸ்திரமும் அறியாத நாட்டை சேர்ந்தவர்களின் கணிப்புகளை ஆராயும் நாம், ஜோதிடத்தில் வல்லமை பெற்ற ஒரே நாடான இந்தியாவில், எதிர்காலம் பற்றிய குறிப்புகள் எந்தளவுக்கு இருந்திருக்கும் என்பதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். உலக புராணங்கள், நம்பிக்கைகள் அனைத்தும் இங்கிருந்து உருவப்பட்டு 'டிங்கரிங்' செய்யப்பட்டது தான். மஹா விஷ்ணுவின் கல்கி அவதாரத்தை தான் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரில் எதிர்பார்க்கிறார்கள். அதை சுற்றிய புனைவுகள் தான் உலகை ஆள்கின்றன.
இந்தியாவில் ஏராளமான தீர்க்கதரிசிகள் உள்ளனர். இந்தியாவின் பிரபலமான ஒரு ஜோதிட சாஸ்திர புத்தகம் தான் பவிஷ்யமாலிகா புராணம். இந்த நூல் 16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த துறவி அச்சியுதானந்தா தாசரால் ஒரிய மொழியில் எழுதப்பட்டது. இவர் 12 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற ஶ்ரீ பஞ்சகா துறவிகள் பனை ஓலைகளில் எழுதிய தீர்க்கதரிசனங்களை சேகரித்து, பவிஷ்யமாலிகா புராணமாக எழுதினார். இந்த நூலை பண்டிட் ஶ்ரீகாசிநாத் மிஸ்ரா மொழிபெயர்த்து அச்சிலேற்றினார்.
பவிஷ்யமாலிகா புராணத்தின் 2025 கணிப்புகள்:
பவிஷ்யமாலிகாவின் கணிப்புகளின்படி, 2025-ஆம் ஆண்டு சனிபகவான் மீனத்தில் நுழைகிறார். அவர் மீனத்தில் நுழையும் போது நாட்டிலும் உலகெங்கிலும் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுலாம். உலக நாடுகள் அனைத்தும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படும். முன்பு 1937 ஆம் ஆண்டு மீன ராசியில் சனிபகவான் நுழைந்த போதுதான் , இரண்டாம் உலகப் போர் தொடங்கி பேரழிவு ஏற்பட்டது. பிறகு மீண்டும் சனிபகவான் மீனத்தில் சஞ்சரித்தபோது 1965-66 இல் , இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் இரு போர்களிலும் இந்தியாவுக்கு சாதகமாக முடிவுகள் வந்தன.
பவிஷ்யமாலிகாவின் கணிப்புகளின் படி போர் 2025 மார்ச் மாதத்தில் தொடங்கலாம். பல்வேறு காரணங்களால் பல நாடுகளுக்கு இடையில் பனிப்போர் நடந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை மூன்றாம் உலகப் போருக்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இந்த நேரத்தில் வானம் நெருப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஒருவேளை அணுகுண்டு வெடிப்பு அல்லது விண்கற்கள் மோதல்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.
இந்த காலகட்டத்தில் பல நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவாகும். தீ விபத்துகள் அதிகரிக்கும். நாடு முழுக்க வகுப்புவாத கலவரங்கள் நடைபெறும். மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்துவதால், பெரும் பதற்றமான சூழல் உருவாகும். இந்த ஆண்டிலிருந்து இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கும்.
உலகின் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும். பயிர்கள் அழிந்து, பசி, பஞ்சத்திற்கு வழிவகுக்கும். அதேநேரம், சில பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளம் வந்து பயிர்களை நாசமாக்கும். உலகம் முழுக்க மக்கள் பசியால் வாடுவார்கள். பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும்.
போர், இயற்கை பேரிடர், வறட்சியினால் பெரும்பாலான மக்கள் துன்பத்தை அனுபவிப்பார்கள். இந்த நேரத்தில் மனிதாபிமானம் மக்களிடையே குறைந்து சுயநலம் ஓங்கும். உலகில் ஒரு புதிய தொற்றுநோயின் பரவல் உலகின் மத்தியிலிருந்து தொடங்கும்.
பவிஷ்யமாலிகாவின் கணிப்பு காலத்தில் பாரதம் என்பது பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளையும் சேர்த்ததுதான். அந்த நாடுகளில் கணிப்புகளில் கூறப்பட்டுள்ள சில சம்பவங்கள் நடைபெறுவதால் இந்தியாவில் நடைபெறாமல் போகலாம்.