சங்க காலத்தில் உள்ள கோவலன் - கண்ணகி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். புத்தகத்தில் படித்து இருக்கிறோம். கண்ணகிக்கு வாழும்போதும் பிரச்னை தான் இறந்த பின்பும் பிரச்னைதான் போல...
இறந்த பின்னர் கண்ணகி கோவில் வடிவத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தக் கண்ணகி கோவில் ஆனது தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளியங்குடி வனப்பகுதியிலும் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் வனப்பகுதியிலும் அமைந்திருப்பதுதான் பிரச்னைக்கு காரணம்.
தேனி மாவட்டம் பள்ளியங்குடி இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்திலும் கேரளா குமுளியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே வழிபாட்டுக்காக அனுமதி வழங்கப்படுகிறது. தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் சேர்ந்து கலந்து பேசி இரு மாவட்ட காவல்துறை, வனத்துறை இவற்றின் பாதுகாப்புடன் சித்ரா பௌர்ணமி அன்று வழிபாடு நடைபெறுகிறது.
கோவலனை பாண்டிய மன்னன் கொலை செய்த பிறகு கண்ணகி கோபத்தால் மதுரையை எரித்துவிட்டு 14 நாட்கள் நடந்து சென்று இந்த வனப்பகுதியை அடைந்து இறந்த கோவலனுடன் புஷ்பக விமானத்தில் தேவலோகம் சென்றதாக வரலாறு. அதனை வனப்பகுதியில் உள்ள அக்கால குறவர்கள் கண்ணார பார்த்து அதனை சேரன் செங்குட்டுவனிடம் கூற, சேரன் செங்குட்டுவன் ஆச்சரியப்பட்டு தனது பரிவாரங்களுடன் சென்று அந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் கட்டியதாக வரலாறு. இதனை சீத்தலைச் சாத்தனார் தன் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
சேரன் செங்குட்டுவன் இமயமலை சென்று கற்கள் எடுத்து வந்து இந்த கோவிலை கட்டியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. மதுரையை எரித்து விட்டு இந்த இடத்தில் கண்ணகி வந்து மங்கலமானதால் மங்களதேவி எனவும் இந்தக் கடவுள் அழைக்கப்படுகிறாள்.
சேரன் செங்குட்டுவன் இந்த கோவிலை கட்டி சுமார் 2000 ஆண்டுகள் ஆகிறது. கிபி 13 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இதனை புதுப்பித்தனர்.
கோவில் படிக்கட்டுகளும் எல்லைச் சுவர்களும் பெரிய அளவில் உள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே பெரியார் புலிகள் காப்பகம் உள்ளது. இரண்டு மாவட்ட எல்லையான வண்ணாத்திப் பாறையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இரண்டு மாவட்ட அனுமதியுடன் சித்ரா பௌர்ணமி அன்று சுமார் 25000 பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்வது வழக்கம். காலை ஐந்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை தான் அனுமதி.
தற்போது கேரளா தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் கேரள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு தான் செய்து வருகிறது. ஆக கண்ணகிக்கு உயிரோடு இருக்கும் போதும் பிரச்னைதான் இறந்த பின்னரும் பிரச்சனை தான்.