சூரியனுக்கு சாப விமோசனம் கொடுத்த சிவன்! நடந்தது என்ன?ரவீஸ்வரர் கோயிலின் பின்னணி!

Vyasarpadi Shivan Temple
Vyasarpadi Shivan Temple
Published on
Deepam strip
Deepam strip

சென்னை வியாசர்பாடி பகுதியில் இருக்கிறது, ரவீஸ்வரர் திருக்கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பிரபலமான சிவன் கோயில். இது வியாசர்பாடியின் மூர்த்தி ஐயங்கார் தெருவில் அமைந்துள்ளது. வேதங்களை இயற்றிய வியாசர் வழிபட்ட தலம் (Vyasarpadi Shivan Temple) இது. எனவே இத்தலம் இருக்கும் பகுதி அவரது பெயரால் ‘வியாசர்பாடி’ எனப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சூரிய பகவானின் மனைவி பெயர் சமுக்ஞாதேவி. இவளால், சூரியனின் வெப்பத்தை தாங்க முடியவில்லை. இதனால் தன்னுடைய நிழலைப் பெண்ணாக வடித்து, சூரியனிடம் விட்டு விட்டு, தன்னுடைய தந்தையின் இருப்பிடம் சென்று விட்டாள். நிழலில் இருந்து உருவான பெண்ணிற்கு ‘சாயாதேவி’ என்று பெயர். இதையறிந்த சூரியன், மனைவி சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்றார்.

வழியில் பிரம்மா ஒரு யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடும் மனநிலையில் இருந்த சூரியன், பிரம்மாவைக் கவனிக்கவில்லை. இதையறியாத பிரம்மன், சூரியன் தன்னை அவமதித்து விட்டதாக நினைத்து, அவரை மனிதப் பிறப்பெடுக்கும்படி சாபம் இட்டார்.

இந்த சாபம் நீங்க என்ன வழி என்று, நாரதரிடம் ஆலோசனைக் கேட்டார், சூரியன். நாரதர் சொன்ன ஆலோசனைபடி, இந்தத் தலத்திற்கு வந்த சூரியன், வன்னி மரத்தடியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

பல நாள் பூஜைக்குப் பிறகு, சூரியனுக்கு காட்சியளித்தார், சிவபெருமான். அதோடு சூரியனுக்கு சாப விமோசனத்தையும் வழங்கினார். சூரியனுக்கு விமோசனம் அளித்தவர் என்பதால் ‘ரவீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். (சூரியனுக்கு ‘ரவி’ என்ற பெயரும் உண்டு.)

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு சிவன் கோயிலிலும் நந்தி சிவலிங்கத்தை நோக்கி அமர்ந்திருப்பதன் மர்மம் என்ன?
Vyasarpadi Shivan Temple

இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இவரது சன்னதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்து தான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில் சிவலிங்கம் வடிவத்தில் ஒரு துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. இதுவே இத்தலத்தின் சிறப்பு.

சூரிய ஒளிபட்ட பிறகே, காலை பூஜையை அர்ச்சகர்கள் செய்கின்றனர். சிவன் சன்னதி முன் மண்டபத்தில் சூரியன் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகள், உத்தராயன, தட்சிணாயன புண்ணிய கால தொடக்கம், பொங்கல், ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சிவன் கருவறைக்குள் சூரியக் கடவுள் வைக்கப்பட்டிருக்கிறார். இறைவன் சிவனை வணங்குபவர்களும் சூரியக் கடவுளை வணங்க வேண்டும்.

இந்த கோவிலில் வன்னி, வில்வ மற்றும் நாகலிங்க மரங்கள் என மூன்று புனித மரங்கள் உள்ளன. பல்வேறு நோய்களிலிருந்து விடுபடுவதற்கும், பல்வேறு பரிகாரங்களை செய்வதற்கும் ஏராளமான மக்கள் ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.

இங்குள்ள அம்பிகை மரகதாம்பிகை. சக்தி வாய்ந்தவர். இவர் திருமணத்தடை நீக்கும் ஆற்றல் கொண்டவர். நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் இவரை வேண்டிக் கொள்ள திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.

மூலவர் சன்னதிக்கு எதிரே சூரிய பகவான் மற்றும் சந்திரன் விக்கிரகங்கள் உள்ளன. சிறப்பம்சமாக சிவன் சன்னதி மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எந்த பிடிமானமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டுள்ளது. கட்டடக்கலைக்குச் சான்றாக உள்ள இதை மூலஸ்தானத்தில் இருந்து பார்த்தால் தெரியும்.

வேதங்களை இயற்றிய வியாசர் வழிபட்ட தலம் இது. இத்தலம் அவரது பெயரால் ‘வியாசர்பாடி’ எனப்படுகிறது. சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் இவருக்கு சன்னதி இருக்கிறது. புலித்தோல் மீது, பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் வியாசர் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. வலதுகையில் சின் முத்திரை காட்டி, இடது கையில் சுவடி வைத்திருக்கிறார். பவுர்ணமி அன்று இவருக்கு வில்வ மாலை அணிவித்து விசேஷ பூஜை செய்கின்றனர். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், இவரிடம் வேண்டிக் கொண்டால் கல்வி சிறக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
தாணுமாலயன் கோவில்: பிரம்மா, விஷ்ணு, சிவன் - ஒரே இடத்தில்! இதற்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் ரகசியம்...
Vyasarpadi Shivan Temple

அமைவிடம்: நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரயில் மற்றும் பேருந்து வசதிகள் மூலம் இந்த இடத்தை எளிதில் அணுக முடியும். வியாசர்பாடி என்பது சென்னை சென்ட்ரல் - பீச் லைன் ரயில் பாதைக்கு இடையில் அமைந்துள்ள ஒரு ரயில் நிலையமாகும். இது பெரம்பூருக்கு மிக அருகில் உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து 7 கிமீ தொலைவிலும், பாரீஸ் கார்னரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. வியாசர்பாடி மார்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து கோயிலுக்கு சென்று விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com