இந்தியாவின் அடுத்த பண்டிகைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். நவராத்திரியும் (Navaratri 2025) அதைத் தொடர்ந்து தசரா விழாவையும் விமரிசையாக இந்த வருடமும் நாம் கொண்டாட வேண்டும். நவராத்திரி முழுக்க பெண் தெய்வங்களின் அருள் பெற தினமும் வீட்டில் பூஜை செய்யப்படுகின்றது.
நவராத்திரியில் வீட்டில் தேவியர்களை வரவேற்க கொலு வைத்து பூஜை செய்யும் வேளையில் அவர்களின் வருகைக்கு இடைஞ்சலாக, சில தேவையற்ற பொருட்களை வீட்டில் வைத்திருக்க கூடாது. தசரா திருவிழா காலங்களில் வீட்டில் நேர்மறையான சூழ்நிலையை உருவாக்குவது அவசியம்.
சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பது தெய்வங்களின் வருகைக்கு இடையூறு ஏற்படுத்தும். இந்த நேரத்தில் துரதிர்ஷ்டத்தையும் தரும் சில பொருட்களை வீட்டிலிருந்து அகற்றுவதன் மூலம், முப்பெரும் தேவியின் அருளைப் பெறலாம்.
தசரா திருவிழா செப்டம்பர் 22, 2025 அன்று தொடங்கி அக்டோபர் 2, 2025 அன்று விஜய தசமி பண்டிகையுடன் முடிவடைகிறது.
நவராத்திரிக்கு முன்னர் அகற்ற வேண்டிய பொருட்கள்
1. கிழிந்த உடைகள்:
வீட்டில் இருக்கும் பயன்படுத்தாத அல்லது பழைய ஆடைகளை எல்லாம் குவித்து அங்காங்கே வைக்காமல் , தேவைப்படுவோருக்கு தானம் செய்து விடுங்கள் அல்லது அப்புறப்படுத்துங்கள். கிழிந்த ஆடைகளை வீட்டில் வைக்கக் கூடாது அது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும். பழைய ஆடைகளின் இருப்பு குறையும் போது புதிய ஆடைகளின் தேவை ஏற்பட்டு , புதிய உடைகள் வரவு இருக்கும்.
2. ஓடாத கடிகாரங்கள் & பழுதான பொருட்கள்:
வீட்டில் எப்போதும் கடிகாரம் ஓடாமல் இருக்கக் கூடாது. ஓடாத அல்லது பழுதான கடிகாரங்கள் வீட்டின் நேர்மறை ஆற்றலை குறைத்து விடும். கடிகாரம் ஓடாததால், அந்த வீட்டில் நேரம் தெரியாமல் சோம்பேறித்தனம் ஏற்படும். இது வீட்டில் உள்ளவர்களின் மனநிலையில் ஒரு சோர்வினை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாது, பழுதான டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை சரி செய்ய வேண்டும். முடியாத நிலையில் அப்புறப்படுத்தி விட வேண்டும். ஒரு பொருள் வேலை செய்யாமல் இருந்தால், அது இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் பொருளாகவே கருதப்படும்.
3. உடைந்த கண்ணாடி மற்றும் சிலைகள்:
வீட்டில் உடைந்த கண்ணாடிப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். உடைந்த சிலைகள் , பொம்மைகள், கிழிந்த படங்கள் போன்றவை மங்களமற்ற பொருளாக கருதப்படுகிறது. எதிர்மறை பொருட்களான இவற்றை அகற்றுவது அவசியம் .
4. உடைந்த பாத்திரங்கள்:
நவராத்திரியின் போது உடைந்த பொருட்களையும் துருப்பிடித்த பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது. அசுத்தமான பாத்திரங்களையும் , பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான பொருட்கள் உள்ள இடத்தில் தான் லஷ்மி தேவி குடியேற நினைப்பாள், வீட்டில் பொருட்களை சிதற விடக் கூடாது.
5. காலணி மற்றும் குடை:
காலணிகள் மற்றும் குடைகளை வீட்டிற்கு வெளியில் தான் இட வேண்டும். வீட்டுக்குள்ளே செருப்பை வைத்திருந்தால் , மஹாலக்ஷ்மி வெளியே போய் விடுவாள். விளக்குமாறு முறம் போன்றவற்றை ஒதுக்குப் புறமாக, யார் பார்வையிலும் படாத வண்ணம் வைக்க வேண்டும். பிய்ந்த விளக்குமாறு , பிய்ந்த செருப்பு, கிழிந்த மிதியடி போன்றவற்றை வீட்டில் வைத்திருக்க கூடாது.
பக்தர்கள், பூஜைகள் மற்றும் விரதங்களை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், தேவியின் ஆசியைப் பெற தங்கள் வீடுகளையும் சுத்தமாக வைப்பதும் அவசியம். சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பது செல்வத்தைத் தடுக்கிறது மற்றும் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்குகிறது. நவராத்திரியின் போது இந்த பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்தினால் , முப்பெரும் தேவியர் வீட்டில் நுழையவும், அவர்களின் அருள் பெறவும் வசதியாக இருக்கும்.