

சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி ஜீவசமாதி, 141 ஆண்டுகள் வாழ்ந்த சித்தரின் ஆன்மீகத் தலமாக பக்தர்களை ஈர்க்கிறது. கருவூர்கோட்டை ஜமீன் வம்சத்தில் கிருஷ்ணராஜாகப் பிறந்த இவர், ஏழைகளுக்கான அன்னதானத்தைப் பரப்பி, தன்னை பைத்தியம் எனக் கூறிக் கொண்டு மக்களின் குறைகளை தீர்த்த சித்தர். ஜீவசமாதி தினமும் பக்தர்களுக்கு திறந்திருக்கும்.
சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அப்பா பைத்தியம் சாமி ஆலயம் (ஜீவசமாதி) மிகவும் புகழ்பெற்ற ஒரு ஆன்மீகத் தலமாகும். இந்த ஜீவசமாதி சேலம் ரயில்வே ஜங்ஷன் அருகே, உழவர் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. அமைதியான சூழலைக் கொண்ட இந்த இடம், மன அமைதி மற்றும் வேண்டுதல்கள் நிறைவேற சிறந்த இடமாக பக்தர்களால் கருதப்படுகிறது.
சேலம் ரயில்வே ஜங்ஷனுக்கு மிக அருகில் திருவாக்கவுண்டனூரில் தருகவிலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் அப்பா பைத்தியம் சாவாமி ஜீவசமாதி அமைந்துள்ளது. கருவூர்கோட்டை ஜமீன் வம்சாவளியில் 1859 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர்.
இவரது இயற்பெயர் கிருஷ்ணராஜ். 141 ஆண்டுகள் வாழ்ந்த இந்த சித்தர், மக்களிடம் தன்னை பைத்தியம் எனக் கூறிக் கொண்டவர். அப்பா ஸ்தானத்தில் இருந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பதால் 'அப்பா பைத்தியம் சுவாமிகள்' என்று அன்போடு அழைக்கப்பட்டார். ஏழை மக்களின் பசியைப் போக்கும் வகையில், தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்ற கொள்கையை பரப்பியவர்.
இவர் தனது 16 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி பழனிக்குச் சென்றுள்ளார். பழனியின் மலைப்பகுதிகளில் அவர் சுற்றித் திரிந்த பொழுது, வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த அழுக்கு சாமி என்ற சித்தரை சந்தித்து, தனது குருவாக ஏற்று ஞானம் பெற்றார். இருவரும் சேர்ந்து ஒன்றாகப் பல இடங்களுக்கு பயணித்தனர். பொள்ளாச்சியில் அழுக்கு சுவாமிகள் சமாதி அடைந்த பிறகு, அப்பா பைத்தியம் சுவாமிகள் திருவண்ணாமலை, திண்டிவனம், கடலூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்கு சென்று கடைசியாக சேலத்தில் தனது 141 வது வயதில் சமாதி அடைந்தார். புதுச்சேரியில் பல ஆண்டுகள் வசித்த பொழுது முதல் அமைச்சர் ரங்கசாமி அவரது தீவிர பக்தராக இருந்தார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இந்த ஜீவசமாதிக்கு அடிக்கடி வந்து வழிபடுவதும், ஏதேனும் முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இங்குள்ள ஜீவசமாதிக்கு வந்து தியானம் செய்வதும் வழக்கம். காரணம் ஜீவசமாதி அடைவதற்கு முன்பு சுவாமிகள் ரங்கசாமியிடம் "நீ முதலமைச்சராக வருவாய்" எனக் கூறி இருக்கிறார்.
அது நிறைவேறியதைத் தொடர்ந்து எந்த முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பும் அவர் சூரமங்கலத்தில் இருக்கும் அப்பா பைத்தியம் ஜீவசமாதிக்கு வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சுவாமிகள் மீது அளவு கடந்த பக்தியும், மரியாதையும் கொண்டுள்ள இவர் தன் வீட்டு அருகே கோரிமேடு பகுதியில் கோவில் கட்டி நாள்தோறும் அங்கு சென்று வழிபட்டு வருகிறார். இந்தக் கோவில் தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரி மக்களிடையேயும் புகழ்பெற்று விளங்குகிறது.
அப்பா பைத்தியம் சுவாமி கடந்த 2000ஆவது ஆண்டில் சேலத்தில் தனது 141வது வயதில் ஜீவசமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு கோவில் கட்டி சிறப்பாக வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
சுவாமியின் பிறந்த நாளின் பொழுதும் (சித்திரை மாதம் 28-ம் நாள்) மற்றும் தை மாதத்தில் அஸ்வினி அன்று நடைபெறும் அவரது குருபூஜையின் பொழுதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
எப்படி செல்வது?
சேலம் ரயில் நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஜீவசமாதி. சேலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் மற்றும் ஆட்டோ மூலம் எளிதாக இக்கோவிலை அடையலாம்.
காலை 5.30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் ஜீவசமாதி திறந்திருக்கும்.
மன உளைச்சலில் இருந்து விடுபட்டு முழுமையான மன அமைதியையும், ஆன்மீகத் தெளிவையும் பெறுவதற்கான எளிய வழிகளை இக்கட்டுரை உங்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் வாழ்வில் ஏற்படும் குழப்பங்களுக்கு தெளிவான ஆன்மீகத் தீர்வுகளைக் கண்டறியலாம்.