சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்: அற்புதங்களும் ஆன்மீக ரகசியங்களும்!

500 ஆண்டுகள் பழமையான சேலத்தின் காவல் தெய்வமான கோட்டை மாரியம்மனின் வரலாற்றுச் சிறப்புகள்
கோட்டை மாரியம்மன் - Salem Kottai Mariamman
கோட்டை மாரியம்மன் - Salem Kottai Mariamman
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சேலம் என்றாலே உணவுப் பிரியர்களுக்கு மாம்பழமும், கலைப் பிரியர்களுக்கு மாடர்ன் தியேட்டர்ஸும், ஆன்மீகப் பிரியர்களுக்கு கோட்டை மாரியம்மன் கோவிலும்தான் நினைவுக்கு வரும்.

சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் இப்பகுதியின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற காவல் தெய்வம் ஆகும். சேலம் மாநகரில் உள்ள 8 மாரியம்மன் கோவிலில் இதுவே முதன்மையானது மற்றும் பெரியதுமாக கருதப்படுகிறது.

மூலவர் கோட்டை மாரியம்மன்

தலவிருட்சம் அரசமரம் (போதிமரம்)

தீர்த்தம் மணிமுத்தாறு நதி

500 ஆண்டுகள் பழமையான கோவில்

கோட்டை மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் 81 அடி உயரத்தில் உள்ளது.

சேலம் மாநகரின் எட்டு மாரியம்மன் கோவில்கள்:

சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மாபேட்டை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன், சின்னக் கடைவீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன் ஆகிய 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள்.

சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள். சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் "எட்டு பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி" என்ற சிறப்பு பெயரும் உண்டு.

கோட்டை உருவான கதை:

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டு குறுநில மன்னர்கள் இங்கு ஒரு கோட்டையை அமைத்து ஆட்சி செய்த பொழுது இந்த கோவிலையும், ஒரு பெருமாள் கோவிலையும் கட்டினர். கோட்டை வீரர்கள் அன்னை மாரியம்மனைத் தங்களின் காவல் தெய்வமாக வணங்கி வந்தனர். மன்னர்கள் கட்டிய கோட்டையின் பாதுகாப்பில் அன்னை இருந்ததால் இவருக்கு "கோட்டை மாரியம்மன்" என்ற பெயர் நிலைத்தது.

கோட்டை மாரியம்மன் - Salem Kottai Mariamman
கோட்டை மாரியம்மன் - Salem Kottai Mariamman

கோவிலின் கருவறை மற்றும் அதன் நுழைவாயில் மிகவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இங்கு குனிந்து, பணிந்து தான் அம்மனை தரிசிக்க வேண்டும். அன்னை மாரியம்மன் ஈசான்ய-வட கிழக்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறாள். பொதுவாக மாரியம்மன் பாதங்களுக்கு கீழே அசுரனின் தலை இருக்கும்.

ஆனால் இங்கு மாரியம்மனின் பாதங்களுக்குக் கீழே ஒரு தாமரை மொட்டு உள்ளது. அம்மனின் எட்டு கைகளில் கத்தி, சூலம், கபாலம், சங்கு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் அருள்புரிகிறாள். இங்கு வந்து வேண்டிக்கொள்ள சின்னம்மை, தட்டம்மை மற்றும் தீராத உடல் பிணிகள் நீங்கும், பிள்ளைவரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

அதிசய வழிபாட்டு முறைகள்:

நவகிரக நாயகி:

சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் நவகிரகங்களுக்கும் நாயகி என்பதால் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற காலங்களில் கூட கோவில் நடை சாத்தப்படுவதில்லை. கிரகண காலங்களின் பொழுது இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நேரடி நைவேத்தியம்:

பிற கோவில்களில் இறைவனுக்கு நைவேத்தியத்தை அடையாளமாகவோ அல்லது திரையிட்டுக் காட்டியோ படைப்பார்கள். ஆனால் இங்கு அன்னை மாரியம்மனுக்கு நேரடியாக உணவை ஊட்டுவது போன்றே நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
கோட்டை மாரியம்மன் - Salem Kottai Mariamman

உப்பு, குங்குமம் காணிக்கை:

உடலில் உள்ள வியாதிகள் மற்றும் தீராத பிரச்சினைகள் நீங்குவதற்காக, பக்தர்கள் கோவிலில் உள்ள பலிபீடத்தில் உப்பும் குங்குமமும் கலந்து கொட்டி, அதன் மேல் தண்ணீர் ஊற்றுகின்றனர். அந்த உப்புத் தண்ணீரில் கரைவதுபோல தங்களின் துன்பங்களும் கரையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

பூ வாக்கு கேட்டல்:

பக்தர்கள் தங்களின் வீட்டில் திருமணம் அல்லது புதிய தொழில் போன்ற சுபகாரியங்களைத் தொடங்குவதற்கு முன்பு அன்னைக்கு இரு வேறு நிற பூக்களை கட்டிவைத்து "பூ வாக்கு" கேட்டு, நல்ல உத்தரவு கிடைத்த பின்னரே அந்த காரியங்களைச் செய்கின்றனர்.

திருவிழாக்கள்:

இக்கோவிலின் மிக முக்கியமான மற்றும் தொன்மையான திருவிழா ஆடித்திருவிழா. இதில் பூச்சட்டு என்ற நிகழ்ச்சியும் அடங்கும். இந்த திருவிழாவின் பொழுது சேலத்தில் உள்ள மற்ற மாரியம்மன் கோயில்களுக்கு இந்த கோவிலில் இருந்து மட்டுமே மலர்கள் அனுப்பப் படுகின்றன.

இது 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். இதில் கம்பம் நடுதல், அன்னை சக்தியை அழைத்தல், கரகாட்டம் என்னும் நாட்டுப்புற நடனம், உருளுதண்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இப்பகுதி முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்பார்கள். மாசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் திருவிழா பல நாட்களுக்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பார்வைக் குறைபாடு முதல் நோய்கள் வரை தீர்க்கும் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்!
கோட்டை மாரியம்மன் - Salem Kottai Mariamman

கோவில் திறந்திருக்கும் நேரம்:

கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?

சேலம் ரயில் சந்திப்பில் இருந்து (Salem Junction) சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சேலம் மாநகரின் மையப் பகுதியில், பழைய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைவீதி பகுதியில் திருமணி முத்தாற்றின் கரையில் அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com