
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மணக்கால் கிராமத்தில் அமைந்துள்ளது கௌமாரி மற்றும் சப்த மாதர் திருக்கோயில் (Sapthamadhar Temple-Manakkal). அங்கு மகா மண்டபத்தில் வலது புறம் செட்டியப்பரின் வடிவம் உள்ளது. யார் இந்த செட்டியப்பர்?
இவரைப் பற்றி கேட்கும் பொழுது சுவாரசியமான கதை வெளிப்படுகிறது.
மலையாள மந்திரவாதியான இவர் மந்திரவாதியாக இருந்தாலும் தனது மந்திரத்தை எவருக்கு எதிராகவும் பயன்படுத்தியது கிடையாது. வியாபாரம் செய்வதை பிரதான தொழிலாக அவர் செய்து வந்தார். அதிலும் செட்டியப்பர் செய்தது மஞ்சள் வியாபாரம். ஒரு முறை வியாபாரம் செய்ய அவர் மணக்கால் கிராமத்திற்கு வந்தார்.
வழியில் ஒரு ஆலயம் இருப்பதையும், அந்த ஆலயத்தின் எதிரில் உள்ள திருக்குளத்தில் வைஷ்ணவி, மகேஸ்வரி, கவுமாரி, சாமுண்டி, பிராமி, வராகி, ருத்ரனி ஆகிய சப்த மாதர்கள் நீராடிக் கொண்டு இருப்பதையும் பார்த்தார். தெய்வீக அழகு நிரம்பிய அவர்களின் அருகில் சென்ற செட்டியப்பர் உங்களுக்கு மஞ்சள் வேண்டுமா என்று கேட்டார்.
விளையாடிய படியே நீராடிக் கொண்டு இருந்த கன்னியர்கள் செட்டியப்பரிடம் தங்களுக்கு மஞ்சள் வேண்டாம் என்று கூறினார்கள். தேவ கன்னியர்கள் போல் தோற்றமளித்த அவர்களிடம் தனது வர்த்தகம் நடக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார்.
நீராடிக்கொண்டிருந்த சப்த கன்னியர்கள் தாங்கள் அணிந்து வந்த ஆடைகளை திருக்குளக் கரையில் வைத்திருந்தனர். அந்த ஆடைகள் அனைத்தையும் செட்டியப்பர் சுருட்ட ஆரம்பித்தார். சக்தியான கௌமாரி அதை பார்த்து விட்டார். உடனே செட்டியப்பரை அழைத்து எனக்கு கொஞ்சம் மஞ்சள் வேண்டும் என்றார். அதைக் கேட்டதும் மன மகிழ்ந்த செட்டியப்பர் எவ்வளவு மஞ்சள் வேண்டும் ஒரு ரூபாய் பணத்திற்காக இரண்டு ரூபாய்க்கா என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதும் கௌமாரி இதன் எடைக்கி எடை மஞ்சள் கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு போ என்று கூறியதோடு, தனது தலையில் இருந்த ஒரு மலரை தூக்கி அந்த வியாபாரியை நோக்கி வீசினார்.
உடனே வியாபாரி அலட்சியமாக அந்த மலரை எடுத்து தன்னிடம் இருந்த தராசு தட்டின் ஒரு பகுதியில் வைத்தார். அதன் எடைக்கு சரியாக மஞ்சளை போட்டார் . பூ இருந்த தராசு தட்டு கீழே இறங்கியது. இதனை அடுத்து வியாபாரி மேலும் மஞ்சளை போட்டார். தட்டு மேலும் கீழே இறங்கியது.
வியந்த செட்டியார் தான் மூட்டையில் கொண்டு வந்து இருந்த மொத்த மஞ்சளையும் தராசு தட்டில் வைத்தார். என்ன செய்து பார்த்தாலும் பூ இருந்த தட்டு தாழ்ந்திருந்தது. அப்போதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. அந்த பெண்கள் அனைவரும் சாதாரன பெண்கள் அல்ல. தெய்வப் பெண்கள் என்பதை உணர்ந்தார். அங்கேயே சிறியதாக ஒரு கோவில் அமைத்து சப்தமாதரை வழிபட்டார். இன்றளவும் மணக்காலை ஆட்சி செய்யும் கௌமாரி மற்றும் சப்த மாதர்கள் தன்னை வேண்டி வரும் பக்தர்களை தனது பிள்ளையாக பாவித்து அருள் புரிந்து வருகிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு நங்கையாரம்மன் என்ற புராணப் பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கோவிலின் தலவிருட்சம் நருவளி மரம். கோவில் பிரகாரத்தில் மதுரை வீரன் சன்னதி, செட்டியப்பர் உருவம் , துவார பாலகிகள், கருப்பண்ணன், அய்யனார், யானை, குதிரை வாகனங்கள் போன்றவை உள்ளன. கோவிலுக்குள் நுழைந்ததும் இடது புறம் மதுரை வீரன் சன்னதி உள்ளது. அதை அடுத்துள்ள மகா மண்டபத்தின் வலது புறம் செட்டியப்பரின் வடிவம் உள்ளது.
அர்த்தமண்டபம் நுழைவு வாயிலில் இரண்டு புறமும் திருமேனிகள் அமைந்துள்ளன. கருவறையில் சப்தமாதர்கள் அழகுற அமைந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இங்குள்ள சப்தமாதரை வணங்கினால் மாங்கல்ய பலன் அளித்து மஞ்சள் குங்குமம் நிலைக்கச் செய்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வமாக திகழ்கிறது.
பிரகாரத்தில் யானை சிலையும், குதிரை சிலையும் சுதை வடிவில் காட்சி தருகின்றன. யானையின் மேல் அய்யனாரும், குதிரை மேல் கருப்பண்ணசாமியும் அமர்ந்திருக்கின்றார்கள். சுவாமிக்கும் அவர் சவாரி செய்யும் குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் கடன் தொகை வசூல் ஆகும் என்பது நம்பிக்கை.
குழந்தை வரம், கடன் வசூல் ஆகுதல் ,வியாபார விருத்தி ஆகிய கோரிக்கைகளுக்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் காலை ஆறு மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கிறது. மாசி மாதத்தில் வரும் அமாவாசையை தொடர்ந்து நடைபெறும் கரகத் திருவிழா இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு சப்த மாதர்களை வழிபாடு செய்கிறார்கள். நவராத்திரி விழா நடைபெறும் பத்து நாட்களும் இறைவிக்கு லச்சார்ச்சனை நடைபெறுகிறது. பத்தாம் நாள் நடைபெறும் தயிர் பாவாடை என்னும் வழிபாடு வித்தியாசமானது. இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்து இருப்பதும் தனிச்சிறப்பாகும். பக்தர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற பிரார்த்தனை செய்து நவராத்திரி திருநாட்களில் நலம் பெறலாம்.