

வயதான ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருந்தான். அவன் கன்னட தேசத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன். கடைசி தருணம் வந்த போது அவனால் ஏதோ வார்த்தைகளை உளறத்தான் முடிந்தது. அவனது மகன்களால் அதை அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் உடனே ஒரு டாக்டரை அழைத்து கொஞ்சம் ஆக்ஸிஜனைக் கொடுத்து அவர் பேசுவது என்ன என்பதைப் புரிந்து கொள்ள வையுங்கள் என்று வேண்டினர். தான் சம்பாதித்த பணத்தை எங்கே வைத்திருக்கிறேன் என்பதை அவன் சொல்ல முயல்வதாக அவனது பிள்ளைகள் அனுமானித்தனர். ஆகவே அவனது வார்த்தைகளைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களால் ஒரே ஒரு எழுத்தை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த எழுத்து ‘க’.
‘க’ என்றால் என்ன?
‘க’ என்றால் கனகாவா? அதாவது தங்கமா? அல்லது ‘கரு’வா? அதாவது கன்றுக்குட்டியா? அல்லது ‘க’ என்பது கஞ்சாவா? அல்லது கஸப்ரிகாவா அதாவது விளக்குமாறா? விளக்குமாறை அவர்கள் கொண்டு வந்து காண்பித்தபோது அவன் தலையை அசைத்தான். இறந்தும் போனான். அவன் விளக்குமாறாகவே பிறப்பு எடுக்க நேர்ந்தது!
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
அவனைப் போல் நீங்கள் இறக்கக் கூடாது. நீங்கள் பீஷ்மரைப் போல மரணம் அடைய வேண்டும். சாந்திபர்வத்தை அவர் பாண்டவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். கிருஷ்ணர் முன்னால் இருக்க அவர் மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் இதயத்தில் புகுந்தார்.
மரணம் என்பது பயப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்ல சந்தோஷமான தருணங்களில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரணம் என்பது நல்லதோ அல்லது கெட்டதோ இல்லை. உங்களுக்கு அதைப் பற்றிய விருப்பத் தேர்வே கிடையாது. நீங்கள் அதை வரவேற்றால் அதைச் சீக்கிரம் பெற முடியாது. அதைக் கெட்டது என்று நினைத்துத் திட்டினால் அதைத் தவிர்க்கவும் முடியாது.
அது, ஒருவர் பிறந்து விட்ட தருணத்திலேயே தவிர்க்க முடியாததாக ஆகி விட்ட ஒன்று.
பிறந்த தருணத்திலேயே சுடுகாட்டை நோக்கிய பயணமானது ஆரம்பித்து விட்டது. சிலர் அதை சீக்கிரம் அடைகின்றனர். சிலர் சுற்றுப்பாதை வழியாகச் சென்று சற்று தாமதமாக அடைகின்றனர். மனிதனுக்கு மனிதன் இது ஒன்று தான் வித்தியாசம். ஆனால் மனிதனோ மரணம் என்பது தூரத்தில் இருக்கும் ஒரு துயரம் என்று நினைத்து நடக்கிறான்.
அண்டை அயலாரில் ஒருவரின் குழந்தை இறக்கும் போது அவரிடம் சென்று அது ஒரு கனவு என்றும், குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் அவர்கள் நமது கொடுப்பினை என்றும் பழைய ஜென்ம கடன்களை உணரும் தருணம் அது என்றும் கூறித் தேற்றுகிறோம். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் போது இதே வாதங்களால் உங்களைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை. இந்த ஆறுதல் மொழிகள் எல்லாம் மற்றவருக்கு மட்டுமே தான்!
அர்ஜுனன் கிருஷ்ணரை புருஷோத்தமா என்று அழைத்தான். ஏனென்றால் அவரே புருஷர்களில் உயர்ந்த புருஷராவார். புருஷா என்றால் உடல் என்ற - புரா - என்ற நகரிலே - உள்ளவன் என்று அர்த்தம். ஒவ்வொரு உடலிலும் புருஷன் இருக்கிறான்.
பிரபஞ்சம் அனைத்துமே புருஷோத்தமனைத் தன்னுள் கொண்டிருக்கிறது.
ஆகவே இறப்பது எது என்றால் உடல் மட்டுமே தான்! அதன் உள்ளே இருக்கும் புருஷன் அல்ல. புருஷன் உங்களின் உள்ளே இருக்கிறான் என்ற நம்பிக்கை உங்கள் தீய எண்ணங்களையும், தீய நாட்டங்களையும் புலன்களையும் மனதிலிருந்து அகற்றி மனதைச் சுத்தமாக்குகிறது. உள்ளிருக்கும் பானம் மட்டுமல்ல, பாத்திரமும் சுத்தமாக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் எவ்வளவு நேரம் ஸ்மரணமும் தியானமும் செய்தாலும் கூட அவை பலனைத் தராது.
ஆகவே தான் வேதங்கள் பிராமணர்களிடம் மிகக் கடுமையான விதிகளுடனும் ஒழுக்கக் கட்டுப்பாடுடனும் ஒப்படைப்பட்டது. அப்படிப்பட்ட ஒழுக்கக் கட்டுப்பாடுடன் மனம் சுத்தமாக்கப்படவில்லை என்றால் வேதங்களைக் கற்றுப் பயனில்லை.