டேப் ரெக்கார்டர் காலேஜ் – பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!

Sri Sathya Sai Baba
Sri Sathya Sai BabaImage credit: AI
Updated on
Deepam strip
Deepam strip

1976ம் ஆண்டு மாணவர்களுக்காக நடந்த தொடர் சொற்பொழிவில் பகவான் ஆற்றிய அருளுரை. Summer Roses on the Blue Mountain என்ற நூலாக வெளிவந்துள்ளது. அதில் Be Good, Do Good and See Good. That is the Way to God என்ற அத்தியாயத்தில் ஒரு பகுதி.

உங்களுக்கு நமது பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்றைய ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரவேண்டிய வகுப்பறைக்குச் செல்ல விரும்புவதில்லை. ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் வகுப்பறையில் டேப் ரெக்கார்டரை ஆன் செய்து விட்டுத் தனது அறைக்குச் சென்று தூங்க ஆரம்பித்தார். அன்று பாடம் டேப் ரிகார்டர் வழியாகச் சொல்லித் தரப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் நோட்ஸ் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் வீட்டிற்குச் சென்றனர்.

அடுத்த நாளும் ஆசிரியர் வந்தார், தனது டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார். வகுப்பறையை விட்டுச் சென்றார். பல மாணவர்கள் தங்கள் டேப் ரெக்கார்டரை கொண்டு வந்து ஆன் செய்தனர். அவர்களும் வகுப்பறையை விட்டு வெளியே சென்று விட்டனர். நல்லவேளையாக அன்று பிரின்ஸிபால் அந்த வகுப்பறையின் பக்கம் வந்தார். வகுப்பறையானது ஒரே டேப் ரெக்கார்டர் மயமாக இருப்பதைப் பார்த்து அவர் திகைத்துப் போனார். எங்கும் டேப் ரெக்கார்டர்கள். ஆனால் ஒரு மாணவனையும் காணோம். ஆசிரியரும் இல்லை.

Bhagavan Baba
Bhagavan Baba

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!

Image 1 Image 2 Image 3

கல்வி இப்படி இருந்தது என்றால் அதை கல்வி என்று சொல்ல முடியுமா?

ஆகவே, இலட்சிய குடிமகனாக ஆக வேண்டுமென்றால், நீங்கள் நமது நாகரிகத்தின் அடிப்படை அம்சங்களை உள்வாங்கிப் புரிந்து கொள்ள வேண்டும். முதன்முதலாக மனிதன் என்று சொல்லக் கூடியதற்கான குணாதிசயங்களை அறிந்து கொள்வது அவசியம். நன்னடத்தை, சத்தியம், இதயத் தூய்மை, ஆன்மாவில் நாட்டம் ஆகியவையே நீங்கள் கொள்ள வேண்டிய குணங்களாகும். இவையே உங்களை மனிதன் என்று அழைத்துக் கொள்வதற்கான அம்சங்களாகும். பாவத்தைச் செய்யப் பயப்படாத தன்மையும் இறைவன் மீது பக்தியும் இல்லாத ஒருவனை உருவ அளவில் மனிதன் என்று சொல்லலாமே தவிர அவன் மனிதனே அல்ல.

இறைவனின் லீலைகள் ஆச்சரியகரமானவை. சாமானியனால் புரிந்து கொள்ள முடியாதவை. கடவுளே அவதாரமாக வந்து முக்கிய விஷயங்களை போதிக்கும் போது அதைப் புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் அவரின் வார்த்தைகளையும் செயல்களையும் தவறாக அர்த்தம் செய்து கொள்கிறார்கள். அப்போது ஒவ்வொருவரின் மனதிலும் நிஜமான அர்த்தம் மறைந்து விடுகிறது. அவதாரங்கள் சத்தியத்தை பரப்பவே வருகின்றன சத்தியத்தைப் பறைசாற்றவே வருகின்றன. உங்களை சத்தியத்தின் வழியில் நடக்கச் செய்யவே வருகின்றன.

இதையும் படியுங்கள்:
பரோபகாரம் இதம் சரீரம் – பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய தமிழ்ப் புத்தாண்டு(2001) அருளுரை!
Sri Sathya Sai Baba

இதை விளக்கும் ஒரு சம்பவம் மஹாபாரதத்தில் வருகிறது.

கொடூரமான மனம் உடைய கௌரவர்கள் அனைவரும் கூடியிருக்கும் சபையில் திரௌபதியை அவமானப்படுத்தினார்கள். அவளது பராக்ரமம் மிக்க கணவர்கள் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவள் மானபங்கப்படுத்தப்படும் போது தனது கணவர்களால் தன்னை மீட்க முடியாது என்பதை திரௌபதி உணர்ந்தாள். கிருஷ்ணரின் உதவியை நாடினாள்.

எவ்வளவு தீவிரமாக அவள் பிரார்த்தித்த போதும் கிருஷ்ணர் வரவில்லை. பலவிதமாக கிருஷ்ணரது பெருமையை அவள் சொன்னாள். த்வாரகையில் வசிப்பவனே என்று அவள் கூவினாள். மதுராபுரிவாசியே என்றாள். ஆனால் ஒருவித பதிலும் இல்லை. கடைசியாக ஹிருதயவாசா என்று அவள் அழைத்தாள். அடுத்த கணமே கிருஷ்ணர் அங்கு வந்து அவளைக் காப்பாற்றினார்.

பிரச்சினை எல்லாம் முடிந்த பிறகு அண்ணனும் தங்கையும் ஓரிடத்தில் அமர்ந்து பேசும் போது கௌரவர் சபையில் தான் அவமானப்படுத்தப்பட்ட போது தான் அழைத்தவுடன் ஏன் கிருஷ்ணன் வரவில்லை என்று கேட்டாள் திரௌபதி.

கிருஷ்ணர் தன்னை எப்படி திரௌபதி அழைத்தாள் என்று கேட்க, திரௌபதி த்வாரகாவாஸி என்று அழைத்ததாகக் கூறினாள். “தங்கையே! பெரிய தவறு அல்லவா இது. த்வாரகை இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. உனது அழைப்பைக் கேட்டு அங்கிருந்து வருவது சாத்தியமா?

இதையும் படியுங்கள்:
"உங்கள் இதய ஊஞ்சலில் ஆடவே எனக்கு விருப்பம்!" - ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!
Sri Sathya Sai Baba

நீ என்னை மதுராபுரிவாசியே என்று அழைத்ததாகவும் சொன்னாய். மதுராபுரியும் கூட வெகு தூரத்தில் இருக்கிறது. அஸ்தினாபுரத்தில் இருந்து நீ அழைக்கையில் அவ்வளவு தூரத்திலிருந்து எப்படி என்னால் வர முடியும். கோகுலவாசி என்று கூட அழைத்தாய். கோகுலமும் கூட தூரத்தில் அல்லவா உள்ளது! ஆனால் எப்போது நீ என்னை ஹ்ருதயவாசி என்று அழைத்தாயோ உடனே நான் உன்னைக் காப்பாற்ற வந்து விட்டேன்” என்றார்.

நீங்கள் புட்டபர்த்திக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினால் அது புட்டபர்த்திக்குத் தான் போகும். சில சமயங்கள் நான் வந்து இருக்கும் பெங்களூருக்கு அது வராது. அதே போல அவர் ஹிருதயவாசியாக உண்மையில் இருக்கும் போது த்வாரகாவாஸி என்று அழைத்தால் அந்த பிரார்த்தனை அவரைச் சென்று சேராது.

பக்தர்களின் உண்மை நம்பிக்கையையும் உறுதியையும் காண்பிக்கும் வகையில் கடவுள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கிறார். ஆகவே காம்ப் அட்ரஸ் என்பது உண்மையான முகவரி ஆகாது.

பின்னர் கிருஷ்ணர், “உனக்கு எனது சரியான முகவரியைக் கொடுக்கிறேன். அதைக் கேள். எங்கு எனது பக்தர்கள் என் பெருமையைக் கூறி பாடுகிறார்களோ அங்கேயே நான் நிரந்தரமாக இருக்கிறேன். அதுவே எனது சரியான முகவரி” என்றார்.

இப்படிப்பட்ட நல்ல கதைகளை மஹாபாரதம் மல்லிகை மலர்களால் எழுதப்பட்டது போலக் கொண்டிருக்கிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com