

"ஓசையுடன் பூஜை செய்’’ என்பதன் பின்னணியில் மிக ஆழமான அறிவியல் மற்றும் ஆன்மீகத் தத்துவம் இரண்டும் பின்னிப் பிணைந்துள்ளன. இது வெறும் சடங்கு மட்டுமல்ல; மனித உடலையும் மனதையும் பிரபஞ்ச ஆற்றலோடு இணைக்கும் ஒரு சக்திவாய்ந்த வழிமுறை. மேலும் மருத்துவ ரீதியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பாக, மூளையை சாந்தப்படுத்துவதிலும், நுண்ணியிரி களிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் முக்கியத்துவம் பெறுகிறது இந்த ஓசையுடன் பூஜை செய்யும் முறை.
இதன் அறிவியல் மற்றும் ஆன்மீகப் பின்னணி பற்றி காண்போம்!
ஆன்மீகப் பின்னணி:
பிரபஞ்சத்தின் முதல் ஓசையை ஓம் என்கிறோம். ஆன்மீகத்தின்படி, இந்தப் பிரபஞ்சமே ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணிலும் ஒலியிலும்தான் இயங்குகிறது. அந்த ஆதி ஓசையின் வெளிப்பாடுதான் வழிபாடுகளில் எழுப்பப்படும் ஒலிகள்.
பொதுவாக மணி (Bell), சங்கு (Conch), மற்றும் ஜால்ரா போன்ற பூஜைப் பொருட்களிலிருந்து எழும் ஓசையானது, சுற்றுப்புறத்தில் உள்ள தீய சக்திகள், சோம்பல் மற்றும் எதிர்மறை எண்ணங்களை (Negative Energies) விரட்டி, தெய்வீக அமைதியை நிலைநிறுத்துவதாக ஐதீகம்.
ஆமாம் 'பாரத போர் முடிக்க சங்கை எடுத்தான் என்ற வரிகள் நினைவூட்டுவதும் போருக்கு பின் அமைதி' என்பதைத்தானே!
ஆதலால் ஓசை எழுப்பிக்கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. ஸ்லோகம் சொல்வது ,பக்தி பாடல்கள் பாடுவது நாமாவளிகளை பூஜை நேரங்களில் கூறுவதற்கான காரணம், அக்கம் பக்கத்தில் மற்றவர்கள் ஏதாவது எதிர்மறையாக பேசினால் கூட இப்படி எழுப்பப்படும் ஒலியால் நம் செவிகளில் அவை வந்து சேராது தடுக்கும் ஆற்றலை இந்த ஒலிகள் கொடுக்கும்.
இதனால் நேர்மறை எண்ணங்கள் வலுவாகும் என்பதை ஓசையுடன் செய்யும் பூஜை முறை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியதும் இதைத்தான்.
குறிப்பாக பூஜையின்போது எழும் சத்தங்கள் நம் சிதறிய மனதை ஒருபுறம் குவித்து, இறைவனோடு ஆன்மாவை இணைக்க ஒரு பாலமாகச் செயல்படுகிறது என்பதை இதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம். ஆமாம் பூஜை செய்யும் பொழுது மணி அடிக்கையில் குழந்தைகள் கூட அப்படியே கை குவித்து நிசப்தமாக 'மகுடிக்கு கட்டுண்ட பாம்பு போல்' நிற்பதை பார்க்கிறோமே.
அறிவியல் பின்னணி:
மூளை அலைகளின் தூண்டுதலுக்கு முக்கிய பங்காற்றுவது இந்த ஓசையே.
கோயில்களில் அல்லது வீடுகளில் பூஜை மணியை (Temple Bell) ஒலிக்கச் செய்யும்போது, அது காதுகளுக்கு இன்பமான ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணை (Frequency) உருவாக்குகிறது. இந்தச் சத்தம் மனித மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்குக் கொண்டுவந்து (Left-Right Brain Synchronization), மன அழுத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த அமைதியைத் தருகிறது என்று கூறுகிறது அறிவியல்.
அதோடு பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட பூஜை மணிகளை அடிக்கும்போது எழும் ஒலியும், அதிலிருந்து பரவும் அதிர்வெண்களும் காற்றுடன் கலந்து, அங்குள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் நச்சு நுண்ணுயிரிகளை (Microbes) அழிக்க வல்லவை என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஆக நுண்ணுயிரிகளிடமிருந்தும் நம்மை பாதுகாக்கிறது பூஜை மணி ஒலியும் அதன் அதிர்வும் என்பது வெள்ளிடை மலை.
மருத்துவ ரீதியாக இதில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.பூஜையின் போது சங்கு ஊதுவது வெறும் சம்பிரதாயம் அல்ல. சங்கு ஊதும்போது நுரையீரலுக்கு மிகச் சிறந்த பயிற்சி கிடைக்கிறது. உதட்டுத் தசைகள், தொண்டை மற்றும் மார்பகப் பகுதிகள் பலமடங்கு வலுப்பெறுகின்றன.
இது இரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது. இப்படி மருத்துவ ரீதியாகவும் நம் உடலுக்கு பல்வேறு விதமான அற்புதங்களை செய்கிறது இந்த சங்கொலி.
பூஜை நேரத்தில் எழும் சங்கு, மணி மற்றும் மந்திர ஒலிகள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை உருவாக்கி, அந்தச் சூழலில் உள்ள காற்றில் தூய்மையை ஏற்படுத்துகின்றன. இதனால் சுற்றுச்சூழல் தூய்மையும் பாதுகாக்கப்படுகிறது எந்த உண்மையும் வெளிப்படுகிறது.
சுருக்கமாகக் கூறின்:
"ஓசையுடன் பூஜை செய்" என்பது நமது முன்னோர்கள் ஆன்மீகத்தின் பெயரால் நமக்குப் பரிசளித்த ஒரு சிறந்த மனநல மருத்துவமும், சுகாதார முறையுமாகும். ஆன்மீகம் மனதிற்கு அமைதியைத் தந்தால், அறிவியல் நமது உடலையும் சுற்றியுள்ள சூழலையும் ஆரோக்கியமாகப் பாதுகாக்க உதவுகிறது!
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் நாம் ஏன் மந்திரம் ஜபித்து பூஜை பொருட்களினால் ஒலியை ஏற்படுத்தி பூஜை செய்கிறோம் என்பதற்கான அறிவியல், ஆன்மீக காரணங்களை தெரிந்து கொள்ளலாம் . கூடவே பூஜை செய்யும் பொழுது அதைப் பின்பற்றி மனதை நல்வழியில் செலுத்தலாம்.