

உலகில் அதர்ம போக்கு அதிகரிக்கும்போது, அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டவே கடவுளின் அவதாரங்கள் நிகழ்கின்றன. மஹான்களும் மக்களுக்கு நன்மை செய்யவேதான் அவதரிக்கிறார்கள். ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவும் இத்தகைய அவதார புருஷர்களுள் ஒருவர் தான்.
சாயி சத்சரிதம்:
ஸ்ரீ சாயிபாபா அடிக்கடி சொல்வார், "யார் அதிர்ஷ்டசாலியோ, எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்கள்தான் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னை வழிபட வருகிறார்கள். நீங்கள் பெரிதாக எதையும் செய்ய வேண்டாம். 'சாயி! சாயி!' என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பீர்களேயேயானால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். என்னுடைய இம்மொழிகளை நம்புவர்கள் நிச்சயம் நன்மையடைவார்கள்."
ஒருவன் எவ்வளவு அதிக நம்பிக்கையுடன் சாயியை உணர்கிறானோ, அவ்வளவு அதிகமாக சாயியின் செயல்பாடும் இருக்கும் என்பதை ஸ்ரீ சாயி சத்சரிதத்தில் வரும் கதைகள் நிரூபணமாக காட்டுகின்றன.
ஒருமுறை பாலாஜி பாட்டீல் நிவாஸ்கரின் திவசத்தின் போது சாப்பாட்டு நேரத்தின்போது அழைக்கப்பட்டதைப் போல் மூன்று மடங்கு விருந்தினர்கள் வந்துவிட்டனர். பாலாஜியின் மனைவி திகைத்துப் போய்விட்டாள். வந்திருக்கும் விருந்தினர்களுக்கு உணவு பற்றாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்றும் அவள் பயந்தாள்.
அப்போது அவள் மாமியார், "பயப்படாதே! அது நம்முடைய உணவல்ல, சாயியினுடையது. ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதியைப் போட்டு, ஒரு துணியைப் போட்டு மூடி, அதைத் திறக்காமலே அவர்களுக்குப் பரிமாறு! சாயி இந்த அவமானத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவார்!" என்று தைரியம் கூறினார். அவ்வாறே செய்தபோது, தங்களது வியப்புக்கும் மகிழ்வுக்கும் ஏற்ப, பரிமாறப்பட்ட உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமாக மீதமும் இருந்ததைக் கண்டார்கள்.
ஸ்ரீ ஹேமத்பந்த் நமக்களித்த சாயி சரிதத்தில் ஏராளமான விஷயங்கள் கதை ரூபத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. சாயி சத்சரிதத்தை பாராயணம் செய்வதால் நாம் பெறும் பலன்களைப் பற்றி ஸ்ரீ சாயி சத்சரித பலஸ்ருதி (பாராயண பலன்) யில் சொல்லப்பட்டிருக்கிறது.
"ஷீரடியிலுள்ள பாபாவின் சமாதி மந்திரிலுள்ள பாபாவின் சமாதியை தரிசித்து வணங்கி இந்த சத்சரிதத்தைப் படிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும். இதைச் செய்தால் உங்கள் உடல், பொருள், ஆவியைத் தாக்கும் தீங்குகள் மறையும்.
விருப்பு வெறுப்பு இல்லாதவரும், உயர்வு தாழ்வுகளைக் கடந்தவரும், உயிரினங்கள் அனைத்திலும் எவ்வித பேதமின்றி கலந்து நிற்பவருமான சத்குரு ஸ்ரீ சாயிபாபாவின் கதைகளை தற்செயலாக நினைவு கூர்ந்தாலும் அன்றாட வாழ்வின் சிக்கல்களிலிருந்து நம்மை விடுவித்து சம்சார சாஹரத்தை கடக்க பேருதவி புரிகிறார்.
இச்சரிதத்தை ஆர்வமுடனும் பக்தியுடனும் படிப்பதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஜனன மரணத்திலிருந்து நீங்கள் விடுபட விரும்பினால் சாயியின் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்யுங்கள். நீங்கள் சாயி சரிதம் என்னும் பெருங்கடலில் மூழ்கியிழுந்து அதன் ஆனந்தத்தை மற்றவர்களுடன் எழுத்து மூலமாகவோ, அல்லது ஒரு உபன்யாசமாகவோ பகிர்ந்து கொள்ளும் போது அந்த சரிதத்தில் புதுப்புது வியாக்யானங்களை, அர்த்தங்களைத் உங்களால் உணர்ந்து மற்றவர்களுக்கு எடுத்துக் கூறமுடியும்.
நீங்கள் அன்புடனும் ஆத்மார்த்தமாகவும் இந்த சரிதத்தை ஒரு வார காலத்திற்குள் படித்து முடித்தால் உங்களைப் பிடித்த தீங்குகள் மறையும். படிக்கக் கேட்பவர்களுக்கு ஏற்படும் அபாயங்களும் நீக்கப்படும். ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தாலே போதும். அது எல்லையற்ற ஆனந்தத்தையும், மன நிம்மதியையும் கொடுக்கும். முக்கியமாக குரு பூர்ணிமா, கோகுலாஷ்டமி, ராமநவமி, நவராத்திரி (பாபா சமாதி நாளான விஜய தசமி) ஆகிய தினங்களில் இச்சரிதம் வீடுகளில் பாராயணம் செய்யப்பட வேண்டும்.
இதைப் பாராயணம் செய்து செல்வத்தை விரும்புவன் செல்வத்தையும், வியாபாரத்தில் வெற்றியை விரும்புவர்கள் வெற்றியையும் அடைய முடியும். உண்மைக்கும் பக்திக்கும் தகுந்தவாறே பலன்களும் அமையும்.
இச்சரிதத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும், ஏழ்மையையும் நீக்கி, உங்களுக்கு ஞானம், செல்வம் மற்றும் சகல சௌபாக்கியங்களையும் நல்குவார்.
ஸ்ரீ சாயிபாபாவின் 108 ஆவது மஹா சமாதி ஆண்டு வரும் விஜயதசமி அன்று (20.10.26) வருகிறது. அன்று சாயி சத்சரிதத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் அனைவரும் பாபாவின் அருளை நிச்சயம் பெறுவார்கள்.