நம்முடைய இந்து புராணத்தின்படி ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு வாகனம் இருக்கின்றது. எதாவது ஒரு விதத்தில் கடவுளுக்கும் அவர்களுடைய வாகனத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இப்பதிவில் 5 கடவுளர்கள் மற்றும் அவர்தம் வாகனங்கள் பற்றி பார்ப்போமா?
காளை என்பது ஒரு ஆண் மாடு. இது பெரும்பாலும் பலம் மற்றும் வலிமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வலிமை மற்றும் சகிப்புத்தன்மை காளையின் முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.
சிவபெருமானும் வலிமை அதாவது சக்தியின் அடையாளமாகத் திகழ்கிறார். மேலும் சிவபெருமானும் பக்தர்கள் எத்தனை தவறு செய்தாலும் சகித்து கொண்டு கருணையோடு தன் அன்பையும் ஆசியையும் பொழிகிறார்.
சிங்கம் விலங்குகளின் ராஜா. எப்படிபட்ட கொடூரமான விலங்காக இருந்தாலும் அவற்றிற்கு சிங்கத்தின் முன் நிற்க தைரியம் இருக்காது. சிங்கத்தை மற்றவர்கள் தீண்டாத வரை அது அமைதியாகத் தான் இருக்கும்.
அதைப் போலத் தான் நம்முடைய பெண் தெய்வங்களில் சக்தியும் ஆக்ரோஷமும் நிறைந்த தெய்வம் துர்காதேவி தான். நாம் நியாயமகவும் ஒழுங்காகவும் நடந்து கொண்டால் அவள் சாந்த ஸ்வரூபினியாக இருந்து நம்மை காப்பாற்றி எல்லா நன்மைகளையும் செய்வாள். அவளுக்கு கோபம் வந்து விட்டால் சிங்கத்தை போல் பாய்ந்து சீறிடுவாள்.
மயில் பார்ப்பதற்கு மிக அழகாகவும் கண்களுக்கும் மனதிற்கும் ஆனந்தமாகவும் இருக்கும். அது தன் தோகையை விரித்து ஆடி அனைவரையும் மகிழச் செய்யும்.
அதைப் போல நம் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானும் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார். பால முருகன் என்றால் கேட்கவே வேண்டாம் அழகு என்றால் அழகு ... அந்த பாலகனை பார்க்க பார்க்க நம் கண்கள் பூரிப்படைந்து விடும். மயில் எப்படி தன் தோகையை பரவலாக விரித்து ஆடுகிறதோ அதைப் போல முருகரும் தன் அருளை பக்தர்களுக்கு பரவசமாகி மழையாய் பொழிவார்.
அன்னப் பறவையானது வெள்ளை நிறத்தில் இருக்கும். இது பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அழகாக பிரித்தெடுக்கும். மிகவும் புத்திசாலி மற்றும் திறமை வாய்ந்த பறவை.
இதைப் போலவே பிரம்மாவும் உலகைப் படைக்கின்றபோது அவரது உடலை இரு கூறுகளாகப் பிரித்தார், ஒரு பகுதி ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் மாறுகின்றது. அந்தப் பெண்ணே சரஸ்வதி என்று புராணங்கள் கூறுகின்றன. சரஸ்வதி தேவியும் வெள்ளை நிறத்தில் தான் உடை அணிந்திருப்பாள். பிரம்மா உயிர்களை படைப்பார். சரஸ்வதி தேவி நமக்கு புத்தியையும் அறிவையும் தருவாள்.
மூஞ்சூறு, பெறுச்சாளி போன்றவை சந்து பொந்து என எங்கு வேண்டுமானாலும் வசிக்கும். அவை பொதுவாக அரச மரத்தடியில் தான் அதிகமாக இருக்கும். உருவத்திலே சிறியது. ஆனால் அது நினைத்தால் எதையும் எளிதில் செய்யலாம்.
அதைப்போல் நம் முழு முதற்கடவுளாம் பிள்ளையாரும் எங்கு வேண்டுமானாலும் குறிப்பாக அரச மரத்தடியில் வீற்றிருப்பார்.
எத்தனை பெரிய கஷ்டமான வேலை அல்லது திட்டம் என்றாலும் பிள்ளையார் காலை பிடித்தாலே போதும், முடித்து கொடுத்து விடுவார்.
பிள்ளையார் மற்றும் மூஞ்சூறின் இணைப்பானது, நமக்கு சொல்வது என்னவென்றால், எத்தனை பெரிய கஷ்டங்கள், பிரச்சனைகள் இருந்தாலும் நம்முடன் ஒரு சிறிய நம்பிக்கை சேர்ந்து இருந்தால் போதும், வெற்றி நிச்சயம் என்பதே ஆகும்.