
தமிழ்நாடு கண்ட கோலாகலமான பெரிய விழாக்களில் சரித்திரத்தில் இடம் பெறும் ஒரு விழாவாக அமைந்தது – கல்கி ஆசிரியர் ஶ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி நடத்திய பாரதி விழா!
அது ஒரு பொற்காலம்... 1945ம் வருடம் ஜூன் மாதம் மூன்றாம் தேதி!
அன்று தான் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் ஞாபகார்த்த மண்டபத்தின் அஸ்திவாரக் கல் நாட்டு விழா நடந்தது. மண்டபத்திற்கான இடத்தை கொடுத்து உதவியிருந்தார் எட்டயபுரம் மகாராஜா.
தமிழ்நாட்டின் பல பாகங்களிலுருந்தும் ஆயிரக்கணக்கான தமிழ் அன்பர்கள் அங்கு கூடி இருந்தனர்.
மகாத்மா காந்தியடிகள் தன் கைப்படவே தமிழில் தன் “ஆசீர்வாதத்தை” தெரியப்படுத்தி வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.
அஸ்திவாரக் கல்லை நாட்டியவர் யார் தெரியுமா?
ஶ்ரீ சக்கரவரத்தி இராஜகோபாலாச்சாரியார்! ஆமாம், எட்டயபுரம் மகாராஜா அஸ்திவாரக் கல்லை எடுத்துக் கொடுக்க, ராஜாஜி தான் அதை நாட்டினார்.
இந்த விழா எப்படி ஆரம்பித்தது தெரியுமா?
ஆசிரியர் கல்கி அவர்கள் ஒரு முறை திரு டி.கே.சி அவர்களுடன் எட்டயபுரம் போய் வந்தார். உடனடியாக 8-10-1944 கல்கி இதழில் ‘பாரதி பிறந்தார்’ என்ற ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டார்.
கட்டுரை வெளிவந்தவுடன் தமிழகமெங்கும் உற்சாக வெள்ளம் கரை புரண்டோடியது. கல்கி ஆசிரியருக்கு ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்தன. திரு கி.ரகுநாதன் என்பவர் ஐந்து ரூபாய்க்கு ஒரு செக்கை அனுப்பி இருந்தார். அதில் ஆரம்பித்த நிதி, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வந்து குவிந்தது.
அப்படி அந்தக் கட்டுரையில் கல்கி என்னதான் எழுதி இருந்தார்?
எட்டயபுத்தில் நடந்த தமிழிசை மகாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. அதில் கலந்து கொண்டு திரும்பிய கல்கி, அது பற்றி எழுதினார்.
நீண்ட சுவாரசியான கட்டுரையின் முடிவில் அவர் எழுதி இருந்தது இது தான்:
“ பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் அவருடைய ஞாபகார்த்தமாக ஒரு சிறு புத்தக நிலையமாவது ஏற்படுத்த வேண்டும் என்பது எட்டயபுரத்து இளைஞர்களின் விருப்பம். அதற்கு வேண்டிய ஒத்தாசைகளை நான் செய்ய வேண்டுமென்றும், தமிழ் மக்களை அதில் ஊக்கங் கொள்ளச் செய்ய வேண்டுமென்றும் அவர்கள் ரயில் கிளம்பும் வரையில் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இதோ என்னாலான ஒத்தாசையை நான் செய்தாகி விட்டது. இனிமேல், அந்த ஊக்கமும் உற்சாகமும் உள்ள இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழக மக்கள் – தமிழன்பர்களின் பொறுப்பு!”
கல்கி அவர்களின் சக்தி வாய்ந்த இந்த வார்த்தைகளுக்கு தமிழன்பர்கள் செவி சாய்த்தார்கள் – கட்டுரையின் பலனாக ரூபாய் நாற்பதினாயிரம் வந்து குவிந்தது!
பாரதி ஞாபகார்த்த நிதியைக் கொண்டு மண்டபம் அமைக்கப்பட்டதோடு அதில் சேர்ந்திருந்த நிதியிலிருந்து ரூபாய் பத்தாயிரத்தை தனியாக ஒதுக்கி வங்கியில் போட்டு அதிலிருந்து கிடைத்த வட்டித் தொகையை மூன்று மாதத்திற்கு ஒரு தரம் ரூ 112-8-0 என்ற தொகையை பாரதியாரின் மனைவிக்கு ஜீவிய காலம் வரை அளிக்க கல்கி வழி வகை செய்தார்.
பிரமாதமாக நடந்து முடிந்த இந்த விழா பற்றிய செய்திகள் பின்னால் கல்கி இதழில் விரிவாகப் பிரசுரமானது.
முதலில் மூவாயிரம் பேர் திரண்டிருந்த கூட்டமானது வர வரப் பெருகி ராஜாஜி பேசும் சமயத்தில் பதினாயிரம் பேருக்கு மேல் பெருகி விட்டது.
கூட்டம் ஐந்தரை மணி நேரம் நடைபெற்றது.
ராஜாஜி முகவுரையில் கூறினார் : “ஒரு நாட்டின் பிரதம மந்திரியாக இருப்பதைக் காட்டிலும் இம்மாதிரியான ஒரு வைபவத்துக்குத் தலைமை வகிப்பதே எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.”
திரு டி.கே.சி, ‘வெற்றி எட்டுத் திக்குமெட்டக் கொட்டு முரசே’ என்ற பாரதியாரின் பாடலை உணர்ச்சி பொங்கப் பாடினார்.
மதுரை வைத்தியநாதையர், டாக்டர் ராஜன், நாமக்கல் கவிஞர், உள்ளிட்டோர் பேசினர்.
திரு டி. சதாசிவம் விழாவை வாழ்த்தி வந்திருந்த நூற்றுக்கணக்கான தந்திகளைத் ‘தந்தி வேகத்தில்’ படித்து முடித்தார்.
தனக்கே உரித்தான பாணியில் கல்கி அவர்கள் நன்றி கூற, அஸ்திவார விழாவானது டாக்டர் திரிமூர்த்தி தமது செய்தியில் குறிப்பிட்டபடி, “இதுவரை தமிழ்நாட்டில் இம்மாதிரி இலக்கிய விழா நடந்ததைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை” என்று சொல்லும்படியாக இனிது நடைபெற்று முடிந்தது.
கொசுறு செய்தி என்ன தெரியுமா? பாரதி மகாகவிதான்; ஆனால் உலக மகாகவியா என்று ஒரு காலத்தில் கேட்ட கல்கி அவர்களை எதிர்த்த பாரதி அன்பர்கள் அனைவரும், உள்ளம் நெகிழ்ந்து உலக மகாகவிக்கு கல்கி அவர்கள் செய்த சேவையைப் பாராட்டிப் போற்றி அவரைக்கொண்டாடியது தான்!
அது ஒரு பொற்காலம் தானே அன்பர்களே? இன்று இது போன்ற நட்பும் பண்பும் நல்லெண்ணமும் காண்பது அரிது... மிக அரிது இல்லையா?