

சீர்காழியில் வசித்துவந்த சிவபாதஇருதயர் புனிதவதி தம்பதியரின் பிள்ளை சம்பந்தன். சம்பந்தருக்கு மூன்று வயதாக இருக்கும்போது, தன் தந்தையுடன் தோணியப்பர் கோவிலுக்குப் போனார். சம்பந்தரை பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் உட்கார வைத்துவிட்டு, சிவபாதஇருதயர் குளத்தில் குளிக்கச் சென்றார். சிறிது நேரம் கழிந்தது. குழந்தைக்குப் பசியெடுத்தது. குளிக்கப் போன தந்தையையும் காணவில்லை. குழந்தை சம்பந்தன் அழவே, இதைக் கண்ட தோணியப்பர், அன்னையுடன் ரிஷப வாகனத்தில் குழந்தை அருகே வந்தார். அன்னை பொற்கிண்ணத்தில் பாலை எடுத்து குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டினார். குழந்தை அழுகையை நிறுத்தவே, இருவரும் மறைந்தனர்.
நீராடி வந்த சிவபாதஇருதயர், குழந்தை சம்பந்தன் கையில் பொற்கிண்ணம் இருப்பதையும், குழந்தையின் கடைவாயில் பால் ஒழுகுவதையும் கண்டு துணுக்குற்றார்.
“யாரிடம் பாலை வாங்கிக் குடித்தாய்?” என்று கோபத்துடன் கிண்ணத்தைப் பிடுங்கி வீசி எறிந்தார். அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து மிரட்டினார்.
சம்பந்தன் தோணியப்பர் கோயில் கோபுரத்தைக் காட்டியவாறே,
“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ என்றே”
எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடினார்.
மூன்று வயது நிரம்பிய குழந்தை இத்தனை இலக்கண சுத்தமாக எப்படி திடீரென்று பாட முடியும்? சிவபாதஇருதயர் நடந்ததை விளங்கிக் கொண்டார். அவருக்கும் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இது சிவபெருமானின் கருணை என்பது விளங்கியது. அன்றுமுதல் குழந்தை சம்பந்தன் திருஞானசம்பந்தர் என்று அழைக்கப்படலானார்.
சிவபாதஇருதயர் சம்பந்தன் கையில் இருந்த பொற்கிண்ணத்தை வீசியபோது, அது அங்கிருந்த சுவரில் பட்டு விழுந்தது. கிண்ணம் விழுந்த சுவடை இப்போதும் காணலாம் என்கிறார்கள்.
திருஞானசம்பந்தர் பிறந்து, நடை பயின்ற வீடு இப்போதும் திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தேவாரப் பாடசாலையாக இந்த இல்லம் இயங்குகிறது. இப்போதும் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று ஞானப்பால் வழங்கிய நிகழ்வு திருமுலைப்பால் விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் மூன்றடுக்கு சந்நிதியில் ஈசன் அருள்புரிகிறார். கீழ்த்தளத்தில் பிரம்மபுரீஸ்வரராக லிங்க வடிவில் அருள்கிறார்.
படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மா, உலகில் தானே அனைவரிலும் பெரியவன் என்ற அகங்காரம் கொண்டார்.
இந்த அகங்காரத்தைப் போக்கி, அவருக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் சிவபெருமான். தன் தவறை உணர்ந்து வருந்திய பிரம்மா, இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். இதனால் இத்தலத்து ஈசனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
நடு தளத்தில் உமா மகேஸ்வரர் அருள்கிறார். இவர் தோணியப்பர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகின்றார்.
ஊழிக்காலத்தில் உலகம் அழிந்தபின், சிவபெருமான் 64 கலைகளையும் தன் ஆடையாக அணிந்துகொண்டு, பிரணவ மந்திரத்தைத் தோணியாகக் கொண்டு, உமையம்மையுடன் வரும்போது, பிரளயத்திலும் அழியாமல் இருந்த சீர்காழி தலத்தைக் கண்டார். இதுவே தனக்கு ஏற்ற இடம் என முடிவு செய்து தோணியப்பராக இங்கே குடிகொண்டார்.
சிறுகுன்றின் மீது பிரம்மாண்டமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் அன்னை இரு கரங்களுடன் திருநிலை நாயகி என்ற திருநாமத்துடன் அமர்ந்திருக்கிறார். திருக்கயிலாயம் போன்றே உமா மகேஸ்வரராக அமர்ந்த கோலத்தில் இறைவன் அருள்வதால் இந்த நடு தளம் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானை இதுபோல் அமர்ந்த கோலத்தில் வேறு எங்கும் காண முடியாது.
இந்தக் குன்று உருவானதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலை மலையை மூடிக்கொண்டார்.
வாயுவால் அசைக்கக்கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயு தன் வேகத்தினால் கயிலையின் ஒரு சிறு பகுதியை மட்டும் பெயர்த்தெடுத்தார். இறைவன் அருளால் கயிலையின் அந்த சிறு பகுதியை 20 பறவைகள் சீர்காழிக்குக் கொண்டுவந்து சேர்த்தன. அந்தக் குன்றுதான் தோணியப்பர் அருளும் குன்று.
உரோமச முனிவர் ஒருமுறை இறைவனிடம்,
“இறைவா! பக்தர்கள் குறை தீர தென்திசையில் தாங்கள் தேவியுடன் எழுந்தருள வேண்டும். கயிலையில் காணும் காட்சிபோல் பக்தர்களுக்கு அருள வேண்டும்,” என வேண்டினார். முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க இறைவன் சீர்காழியில் உள்ள இந்தக் குன்றில் தோணியப்பராக வந்து அருள்கிறார் என்றும் புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது தளத்தில் சட்டநாதராக இறைவன் அருள்கிறார்.
தோணியப்பர் சந்நிதிக்கு பக்கவாட்டில் உள்ள படிகளில் ஏறிச் சென்றால், நின்ற திருக்கோலத்தில் சட்டநாதராக சிவபெருமான் அருள்புரிகிறார்.
வாமன அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்கிறார். மன்னனும் மூன்றடி மண்ணை எடுத்துக் கொள்ளும்படி சொல்ல, மகாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்து பூமியையும் வானத்தையும் இரண்டு அடிகளால் அளந்தார்.
மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அளக்க, மன்னன் பூமியில் புதைந்து மறைகிறார்.
இதனால் மகாவிஷ்ணுவுக்கு, தான் எவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. தேவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார். தேவர்கள் அச்சமடைந்து ஈசனிடம் முறையிடுகிறார்கள். சிவபெருமான் வடுகநாதராக வந்து, மகாவிஷ்ணுவின் மார்பில் அடித்து வீழ்த்தினார்.
திருமகள் தன் கணவனைக் காப்பாற்றும்படி சிவனை வேண்டினார். அதனால் மகாவிஷ்ணுவின் அகந்தை என்னும் மாயையை நீக்கி அருளினார் ஈசன். ஸ்ரீமந்நாராயணனும் தன் தவறை உணர்ந்து, தன் எலும்புக்கும் தோலுக்கும் மகிமை அளிக்கும்படி ஈசனை பிரார்த்திக்கிறார்.
அதனை ஏற்று ஈசன் அவரின் எலும்பை தண்டாயுதமாகவும், தோலைச் சட்டையாகவும் அணிந்து சட்டைநாதராக அருள்கிறார். பேச்சு வழக்கில் காலப்போக்கில் அது சட்டநாதராக மாறிவிட்டது.
சட்டைநாதரைத் தரிசிக்கச் செல்லும் ஆண்கள் மேல் சட்டை அணியாமலும், பெண்கள் கூந்தலில் மலர் சூடாமலும் செல்லும் பழக்கம் இப்போதும் பின்பற்றப்படுகிறது.