
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் சுவாமி கோவில் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலானது பாண்டிச்சேரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் கடலூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
ஆதிகாலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் போது அதில் இருந்து ஒரு சிறிய பகுதி கீழே விழுந்த இடம்தான் திருவந்திபுரம் எனப்படுகிறது. இந்த இடத்தில் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளதால் இந்த இடம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பகுதி ஆகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலமாக உள்ளது.
தற்காலத்தில் அய்ந்தை என்றும் அழைக்கப்படுகிறது. நடுநாட்டு திருப்பதியில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. திருமலை பெருமாளுக்கு அண்ணனாக இங்குள்ள பெருமாள் கருதப்படுகிறார்.
இந்த திருதலத்தை பற்றி பிரம்மாண்ட புராணம், காந்த புராணம் பிருகன் புராணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறைவன் தேவநாதன் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார். இறைவி வைகுண்ட நாயகி. திருக்கோவில் ஆயிரம் முதல் 2000 ஆண்டுகள் பழமையானது என கல்வெட்டு கூறுகிறது. தேவநாத சுவாமி பெருமாள் ஆகவும், அவரது மனைவி லட்சுமி அம்புஜவல்லியாகவும் வீற்றி இருக்கிறார்கள். திருக்கோவில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விஜயநகரப் பேரரசர்கள் இந்த கோவிலை கட்டினார்கள். தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும் சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயன் ஆகியோர் தரிசித்த தலமாகும்.
சித்திரை மாசம் பத்து நாட்கள் தேவநாதசுவாமிக்கும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரமோற்சவம் நடைபெறும்.
இவை தவிர ஆடிப்பூரம் பகல் பத்து, ராபத்து வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறும். திருமணத்தடை நீங்கும் ஸ்தலமாக இருப்பதால் இங்கு ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு முகூர்த்த நாள் அன்றும் குறைந்த பட்சம் 100 திருமணங்களும் அதிகபட்சமாக 220 திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
இங்கு நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்ளும் மணமக்களுக்கு கோவில் சார்பாக திருமணச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இங்கு ஐந்து வகையான தீர்த்தங்கள் உள்ளன. அதிகாலை 2 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். தேவநாத ஸ்வாமிகளின் பக்தராக விளங்கிய தேசியகருக்கு சிறப்பு தீப தீபாரதனைகள் நடைபெறுகின்றன.
தினமும் வீதி உலா நடைபெறும். பிரமோற்சவத்தின் போது தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். திருமணத்தடை நீங்கவும் தொழில் சிறக்கவும் ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை நேர்ந்து கொள்கிறார்கள். இதனால் பக்தர்கள் அதிக முடி காணிக்கை கோவிலுக்கு வழங்குகிறார்கள்.
மூன்றாவது சனிக்கிழமை 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பக்தர்கள் மொட்டை போடுகிறார்கள். திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நபர்கள் இங்கு உள்ள கோவிலில் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 41வது திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் தாயார் தவம் செய்து திருமாலை திருமணம் செய்து கொண்டதால் இத்திருத்தலம் திருமணம் செய்ய ஏற்ற இடமாக சிறப்புற்று விளங்குகிறது; சிறந்த பரிகார தலமாகவும் உள்ளது.
திருவிழா காலங்களில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்து இருக்கும். மற்ற நாட்களில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைதிறந்து இருக்கும்.