
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவசைலம் என்ற ஊரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் சிவசைலநாதர் கோவில் (Tenkasi Sivasailanathar Temple) ஆகும். இந்த கோவில் திருநெல்வேலியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சுவாமி பெயர் சிவசைலநாதர். அம்பாள் பெயர் பரமகல்யாணி.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி கடனா நதிக்கரையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோவிலில் உள்ள நந்தி சிலை மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒரு சமயம் இந்திரன் தான் பெற்ற சாபத்தை தீர்ப்பதற்காக சிற்பி மயனை அனுப்பி இந்த சிவன் கோவிலில் நந்தி சிலை அமைக்குமாறு உத்தரவிட்டார். மயனும் இந்திரனின் கட்டளையை நிறைவேற்ற இந்த கோவிலில் ஒரு நந்தி சிலையை தத்ரூபமாக செதுக்கினார். நந்தி சிலை தத்துரூபமாக இருந்ததால் அந்த நந்தி எந்திரிக்க முற்பட்டது. உடனே மயன் தன் கையில் இருந்த உளியால் அதன் முதுகில் ஒரு அழுத்து அழுத்தினார். இதனால் அந்த நந்தி மீண்டும் அமர்ந்து நிலையிலேயே இருந்தது. தற்போதும் நந்தி சிலையின் முதுகில் திமிலை ஒட்டி இந்த தழும்பு காணப்படுகிறது!
இங்குள்ள சிவன் சுயம்புவாக தோன்றியதாக வரலாறு உண்டு. கோவில் ஐந்து அடுக்கு கோபுரம் கொண்டதாக உள்ளது. தெற்கே விநாயகர் சிலையும் வடபுறம் முருகன் சிலையும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. 63 நாயன்மார்களுக்கும் தனித்தனியாக சிலைகள் அமைந்துள்ளது. நர்த்தமண்டபம், மா மண்டபம், மணிமண்டபம், அர்த்தமண்டபம் என ஒவ்வொரு மண்டபமும் கலை நயத்துடன் அமைந்துள்ளது.
மணிமண்டபத்தில் நடராஜர் சிலை உள்ளது. இந்தக் கோவிலின் பிரதான பெயர் அத்தீஸ்வரம் என்பதாகும். இந்த கோவிலில் தலவிருட்சம் கடம்ப மரம். முற்காலத்தில் அத்திரி முனிவர் தன் சீடர்களுடன் இங்கு தவம் செய்து வந்தார். அவரது ஆசிரமத்தில் உள்ள ஒரு சீடர் மலர்களை பறிப்பதற்காக நந்தவனத்திற்கு வந்தார். அப்போது ஒரு பசு தானாக ஒரு இடத்தில் நின்று கொண்டு பால் சுரந்து கொண்டு இருந்தது. இதைக் கண்ட அந்த சீடர் அத்திரி முனிவரிடம் கூற, அவர் அந்த இடத்துக்கு சென்று தோண்டி பார்த்தபோது அதில் லிங்கம் சுயம்புவாக காட்சிதந்தது. அத்திரி முனிவர் அந்த சிவலிங்கத்தை வழிபட்டு வந்தார். சிவபெருமான் அத்திரி முனிவருக்கு காட்சியளித்தார்.
அப்போது அத்திரிமுனிவர் சிவனிடம், "தாங்கள் திருமண கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சி அளித்தது போல் எனக்கும் திருமண கோலத்தில் காட்சி அளிக்க வேண்டும்," என வேண்டிக் கொண்டார். அதன் படி சிவன் பார்வதியுடன் அத்திரி முனிவருக்கு காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.
பிற்காலத்தில் சுயம்புவாக இருந்த இடம் புற்று ஏற்பட்டு மறைந்து போனது. இந்த இடத்தை ஆண்டு வந்த சுதர்சன பாண்டியன் என்ற மன்னன் இங்குள்ள மக்கள் செல்வ வளம் பெற அஸ்வமேத யாகம் நடத்தினார். இவரது யாகத்தில் இருந்த குதிரை நடந்து சென்று சிவன் இருக்கும் இடம் அருகே வந்து நின்றது.
சிறுவனாக வந்த முருகன் இந்த குதிரையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தார். இதனை அறிந்த மன்னன் சிறுவனை முருகன் என்று தெரியாமல் தாக்க தொடங்கினார். அப்போது மன்னரது தலைப்பாகை முடியுடன் கீழே விழுந்தது. உடனே முருகன் சுய உருவம் தோன்றி இந்த இடத்தில் உள்ள புற்றில் சிவபெருமான் உள்ளதாகவும் அவருக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்றும் கூறினார். அதன்படியே சுதர்சன பாண்டியன் அந்த இடத்தில் அழகிய சிவன் கோவில் கட்டினார். அதுதான் சிவசைலம் கோவில்.
குழந்தை இல்லாத மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குமார பாண்டியன் என பெயர் சூட்டி மன்னர் மகிழ்ச்சி அடைந்தார். ஒருநாள் சிவனை காண கோவிலுக்கு செல்லும்போது ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இவரால் குறித்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அர்த்த ஜாம பூஜை முடிந்து விட்டது. பின்னர் வெள்ளம் வடிந்தவுடன் பூசாரி பிரசாதங்களுடன் மன்னரை சந்தித்தார். அப்போது பிரசாதத்தில் நீண்ட தலைமுடி இருப்பதை கண்டு கோபமுற்றோர்.
பூசாரியை தண்டிக்க விரும்பினார். பூசாரி இறைவனிடம் முறையிட்டார். பூசாரி மன்னரிடம் இது இறைவன் தலைமுடி என்று மீண்டும் வாதிட்டார். உடனே மன்னன் இறைவனை காண கோவிலுக்கு சென்றார் அங்கு சிவனின் பின்புறம் நீண்ட தலை முடி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
அது சிவனின் தலை முடி என்றும் உணர்ந்து கொண்டார். இன்றும் சிவனின் பின்புறம் கரிய நிறத்தில் முடி இருப்பதை காணலாம். சிவனின் பின்புறம் உள்ள சாளரத்தில் வழியாக இதனை பார்க்க முடியும்.
பங்குனி திருவிழாவின் போது தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் ஒவ்வொரு பங்குனி உத்திரம் அன்று சிறப்பு அன்னதானம் நடைபெறும். இந்த கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய 21 மரங்கள் காணப்படுகிறது.