
கண்ணன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ”கோபியர் கொஞ்சும் ரமணா” என்ற பாடல் கூட உண்டு. கவிஞர் கண்ணதாசன் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்” என்று எழுதி உள்ளார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையாரோ ”குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா”என்று தேன்குரலில் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்து உள்ளார். அந்த நீல வண்ண கண்ணனை, ஆயர் குல கொழுந்தினை, பலவாறாக செல்லமாக கூப்பிட்டும், போற்றியும் பலர் பாடியுள்ளார்.
ஆண்டாளோ கண்ணனையே மணாளனாக மனதிற்குள் வரித்து, பாடல்களால் வர்ணித்த திருப்பாவையில் இந்த பாடலிலும் இவ்வாறாக வர்ணித்துள்ளார்.
வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி,
அங்கப்பறை கொண்டவாற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர், எம்பாவாய்.
இப்படிப்பட்ட கண்ணனுக்கு பல பெயர்கள் உண்டு. அவை ஒவ்வொரு சூழலில் வேறு வேறாக அழைத்துள்ளார்கள். அந்த பெயர்களை நாமும் தெரிந்து கொண்டு.. கோகுலாஷ்டமியைக் கொண்டாடலாமே!
அந்த பால்வடியும் முகம், உதட்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெய்…… ஆநிரைகளையும்….. மக்களையும் கவரும் கீதமிசைக்கும் புல்லாங்குழல்... இவற்றோடு காட்சியளிக்கும் கிருஷ்ணனைப் பிடிக்காதவர் எவரும் உண்டோ?”
கிருஷ்ணனுக்கு சிறப்பு பெயர்கள் பல உண்டு. அவனின் பூவுலகம் துவாரகை. வானுலகம் கோலோகம் ஆகும்.
கோபாலன் – ஆநிரைகளைக் கண்ணும் கருத்துமாய் காப்பவன் என்பதால் கோபாலன் என்றழைக்கப்படுகிறான்.
கோவார்த்தன் – இடி மின்னல் மழைப் பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்க கோவர்த்த மலையைத் தாங்கி பிடித்ததால் கோவர்த்தன் ஆகிறான்.
இராதாகிருஷ்ணன் – மனதுக்கு உகந்த இராதையை மணம் புரிந்ததால் இராதாகிருஷ்ணன் என்கின்றனர்.
பார்த்தசாரதி – குருஷேத்திர போரில் பார்த்தனாகிய அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் பார்த்தசாரதி என அழைக்கப்படுகிறான்.
கீதாசார்யன் – பகவத் கீதையை அர்ஜுனனுக்கும், உத்தவ கீதையை உத்தவனுக்கும் உபதேசித்த தால் கீதாசார்யன் என போற்றப்படுகிறான்.
பங்கே பிகாரி - பிருந்தாவன காடுகளில் சுற்றி திரிந்து விளையாடுவதை நேசிப்பவன் ஆதலால் பங்கே பிகாரி.
பிரஜேஷ் - விரஜ மக்களின் தலைவனாக பொறுப்பேற்று கொண்டதால் பிரஜேஷ் என்பவனாகிறான்.
தீனபந்து – ஆபத்து சமயங்களிலும்…. துன்பத்தில் இருப்பவர்களுக்கும் கை கொடுத்து உதவி புரிவதால் தீனபந்து என வழங்கப்படுகிறான்.
துவாரகநாதன் – துவாரகையை தனது ஆட்சிக்குட்படுத்தியதால் துவாரகநாதனாகிறான்.
கோவிந்தராஜன் – இடையர் சமுதாயத்தின் அரசராக இருந்த தால் கோவிந்தராஜனாக பரிணமளிக்கிறார்.
ஜெனார்த்தனன் - பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குவதால் ஜெனார்த்தனன் என்ற பெயராகிறது.
மாதவன் – ஸ்ரீ மகாலட்சுமி தேவியை நாயகியாக வரித்துக் கொண்டதால் மாதவனாக வலம் வருகிறார்.
கன்னையா – பக்தர்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதில் கிருஷ்ணனுக்கு அலாதி பிரியம் ஆதலால் கன்னையா ஆகிறான்.
முராஹரி – முரா என்ற அரக்கனைக் கொன்றதால் முராஹரி ஆகிறான்.
நந்த கோபாலன் – யாதவ குலத்திற்கு பிரியமானவனாக இருந்ததால் நந்த கோபாலாகிறான்.
பரப்பிரம்மன் - அனைத்திற்கும் மேலானவன் என்பதால் பரப்பிரம்மன் ஆகிறான்.
பிரதிபாவனன் - பாவத்தில் வீழ்ந்தவரை கைக்கொடுத்து தூக்கி அவர்களை தூய்மைப்படுத்தி கரையேற்றுவதால் பிரதிபாவனன்.
சந்தான சாரதி – பூவலகில் பார்த்தனுக்கு தேரோட்டியவன்…. வானுலக ஆன்மிக தேரோட்டியாக இருப்பதால் சந்தான சாரதி
யதுநந்தன் – யதுக்களின் அன்பிற்குரியவனாக இருப்பதால் யதுநந்தன்.
செல்லமாக இன்னும் பல பெயர்கள் கிருஷ்ணனுக்கு உண்டு. யாருக்கு என்ன பெயர் பிடிக்குமோ, அந்த பெயரில் அழையுங்கள் கிருஷ்ணனின் காலடித் தடம் உங்கள் வீட்டில்தானே!