

ஒரு சாமியாா் ஊா் எல்லையின் கடைசியில் பொிய ஆற்றின் கரையில் சிறிய குடிசை போட்டு தியானம், பூஜை, அருள் வாக்கு சொல்லுதல், அதிக ஆசை பேராபத்து என்ற நல்ல குணங்களுடன் வாழ்ந்து வந்தாா்.
சிறுவயதிலேயே மனைவி குழந்தையை இழந்ததால் தனிமனிதனான ஆன்மிக நெறியுடன் ஆற்றங்கரையோரம் வாழ்ந்து வந்தாா்.
அவரைப் பாா்க்க வருவதாக இருந்தால் சுமாா் ஏறக்குறைய அரை பர்லாங் கல்லிலும் முள்ளிலும் நடந்து வரவேண்டும். தினசரி பொதுமக்கள் கூட்டம் அதிகமானது.
கொஞ்சநாள் கழித்து மந்திாியின் வழியாக அந்த ஊா் மகாராஜாவுக்கு விஷயம் தொிய வந்ததுடன், மகாராஜாவோ அவரைப் பாா்க்க முடிவுசெய்து, மந்திாியை அழைத்துக்கொண்டு தனித்தனி குதிரையில் வந்தாா்.
மகாராஜா மாறுவேடத்தில் வருவதை சாமியாா் புாிந்து கொண்டாா். மாறு வேடம் பூண்டாலும் மன்னர் முகம் மாறாதே. ‘மன்னவா என் மன்னவா’ என வரவேற்றாா்.
அப்போது கல்லிலும் முள்ளிலும் மன்னர் நடந்து வந்தாா், வந்து கால் வலிக்க அமர்ந்தாா். "இப்படி காலில் மூள் மற்றும் கற்கள் குத்துகின்றன. ஏன் கஷ்டப்படுகிறீா்கள்? அரண்மனைபக்கம் வந்து தங்கலாமே என மன்னர் கூற, "வேண்டாம் மன்னவா, நான் இங்கேயே என் ஆன்மிக பணியை செய்கிறேன்," என்றாா் சாமியாா்.
"சரி, ஒரு சிப்பாய் இங்கே இருப்பாா். உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் அவரிடம் தகவல் சொல்லி விடுங்கள்," என ஒரு சிப்பாயை குதிரையுடன் பணியமர்த்திச் சென்றாா் மகாராஜா.
சில நாட்கள் கழித்து மன்னர் திரும்பவும் வந்தாா்.
அவர் சாமியாரைப் பாா்த்து,"இந்த கல்லிலும் முள்ளிலும் எப்படி நடக்க முடிகிறது? இதோ வாங்கிக் கொள்ளுங்கள்," எனக்கூறி ஒரு ஜோடி தங்கத்திலான செருப்பை கொடுத்தாா்.
"மன்னவரே! இதெல்லாம் வேண்டாமே, நான் பூஜையில் இருப்பேன். செருப்பை யாா் காவல் காப்பது?" என சாமியாா் கூறியவுடன் செருப்பை பார்த்துக் கொள்ள இரண்டு வீரர்களை நியமித்தாா்.
நாட்கள் ஓடின. மன்னருக்கு செய்தி வந்தது.
"நான் பக்தர்கள் கொண்டுவரும் பழங்களை அருந்தி பசியாறி விடுவேன். காவலர்கள் பசிபோக்க என்ன செய்வேன்?" என தகவல் வந்தவுடன் மன்னா் இருபால் சமையலர்கள் என தலா நால்வரை பணியமர்த்தினாா். அவர்கள் அனைவருக்கும் தினசரி வகை வகையாய் விதவிதமாய் சமையல் செய்து போட்டாா்கள்.
ஆனால் அந்த குடிசையில் அனைவரும் தங்குவதற்கு இடம் இல்லையே என தகவல் பறந்தவுடன் அதே இடத்தில் மாளிகையை கட்டிக்கொடுத்தாா் மன்னர்.
இப்படியே அவரது ஆன்மிகப் பணியானது ஆசைக்கிணங்கிய பணியாக மாறியது. ஆசை துன்பமல்லவா, அதுவும் மறந்து போனது!
ஒரு சில நாள் கழித்து மன்னருக்கு தகவல் பறந்தது. நிறைய மக்கள் அருளாசி பெற வந்தாா்கள். நல்ல வருமானம் வந்தது. அதோடு தினசரி வித விதமான உணவு சைவம், அசைவம் வேறு.
அப்போது தூக்கம் போனது. முதுகுவலி வந்தது. கை, கால் அசதியும் சேரவே, மருந்து தடவி விட கை, கால்களுக்கு மருந்து போட பணிப்பெண் தேவை என்றாா். உடனே நான்கு அழகான பெண்களை பணிக்கு அமர்த்தினாா் மன்னர். அவர்கள் மருத்துவ சேவை செய்து வரும் வேளையில், அவருக்கு ஒரு பெண்ணை பிடித்துப்போகவே மன்னரிடம், "ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்," என்றாா்.
"ஆகட்டுமே தாராளமாக செய்து கொள்ளுங்களேன்," என தானே முன்னின்று திருமணத்தையும் நடத்தினாா். இப்போது சாமியாா் கிரகஸ்தம் ஆனாா்.
இவரது செயல் கண்டு இவரிடம் யாரும் அருளாசி பெற வருவதே இல்லை. சனிப்பெயர்ச்சி வந்தது. துறவறம் மறந்து இல்லறம் தொடர இரட்டை குழந்தையும் பிறந்தது.
பின்னா் சில நாட்களில் இரு குழந்தைகளும் நோய் வந்து இறந்துவிட்டன. குழந்தைகள் இறந்துவிட்ட சோகத்தில் மனைவியும் இறந்து விட்டாள். அழுவதற்கு ஆட்கள் இல்லை.
"பத்து நபர்களை அனுப்புங்கள் மகாராஜா," என சாமியாா் சொல்ல, "அதெல்லாம் இயலாது தாங்கள் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தேன். அதிக ஆசையால் உங்களிடம் பேராசை வளா்ந்தது. குழந்தை மற்றும் மனைவி இறந்து போனது உமது கர்மா செய்தது. விதி வலியது! நீங்கள் தான் அழவேண்டும். அந்த கடன், பாவ புண்ணியம் தங்களைச் சோ்ந்தது.
மண் ஆசை, பொன் ஆசை இறுதியில் பெண் ஆசை உம்மை படுகுழியில் தள்ளிவிட்டது.உமது பாவத்திற்கு நீங்களே வடிகால் தேடுங்கள்," என தகவல் சொல்லி அனுப்பினாா் மகாராஜா.
ஆக நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் நம்மையே சாா்ந்ததாகும். அதற்கு பரிகாரம் எதுவுமே இல்லை. நோ்மை, நல்ல சிந்தனை, நல்ல ஒழுக்கத்தை நாம் கடைபிடிப்பதே எப்போதும் சிறந்தது.