ஆன்மீகக் கதை: வரமா? விதியா? மகாபாரதத்தின் மர்ம முடிச்சு...

நாம் விளையாட்டாகச் சொல்லும் சொல்லும், பிடிவாதமாகக் கேட்கும் வரமும் காலச் சக்கரத்தில் எப்படி உருமாறி வரும் என்பதை இக்கதை உணர்த்துகிறது.
திரௌபதியின் வரமும் வாழ்வும்
திரௌபதியின் வரமும் வாழ்வும்image credit- AI Image
Updated on

காரணம் இன்றி இவ்வுலகில் எதுவும் நடப்பதில்லை.

நாம் சாதாரணமாக, விளையாட்டாக ஏதாவது செய்ய போய் அது விபரீதமாக முடிந்து விடக்கூடிய நிகழ்வுகள் உண்டு.

மகாபாரதத்தில், பஞ்ச பாண்டவர்கள் தமது தாயார் குந்திதேவியுடன் காட்டில் அந்தணர்கள் வேடத்தில் யாரும் அறியா வண்ணம் இருந்தார்கள்.

அவர்கள் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் மகள் திரௌபதியின் சுயம்வரத்தை காணச் சென்றார்கள்.

அங்கு துரியோதனன், கர்ணன் மற்றும் பாரத தேசத்தின் பல பகுதிகளில் இருந்து மன்னர்கள் வந்து சுயம்வரத்தில் கலந்து கொண்டார்கள்.

அங்கு வைக்கப்பட்ட ஒரு போட்டியில், மேலே வட்ட வடிவத்தில் ஒரு மீன் பொம்மை சுழன்று கொண்டிருக்கும்.

அதை , கீழே தண்ணீரில் பார்த்து, அந்த பிம்பத்தை வைத்து, சரியாக மீன் கண்ணில் அம்பு எய்த வேண்டும்.

அப்படி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவரே, திரௌபதியின் மணமாலைக்கு உரிமையை கோரக் கூடியவர்கள் ஆவார்கள். அவர்கள் தோளை திரௌபதியின் மணமாலை அலங்கரிக்கும்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட, துரியோதனன் உள்ளிட்ட பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் இருந்து வந்த மன்னர்கள் தோல்வி அடைந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களை திருப்திபடுத்த முயற்சித்தால் தோல்வி தான் மிஞ்சும் – மகாபாரதம் தரும் பாடம்!
திரௌபதியின் வரமும் வாழ்வும்

சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அர்ஜுனன், தனது அண்ணன் தர்மன் மற்றும் பாஞ்சால தேசத்து அரசன் அனுமதி பெற்று, இந்த போட்டியில் கலந்து கொண்டு, அம்பை மீனின் கண்ணில் எய்து வெற்றி அடைந்தார். திரௌபதியின் மணமாலைக்கு உண்டான தனது உரிமையை நிலைநாட்டினார்.

திரௌபதியும், ‘என் கல்யாண வைபோகம் உங்களோடு தான்’ என்று அர்ஜுனன் கழுத்தில் மாலையிட்டு, அவரை மணவாளனாக ஏற்றுக் கொண்டார்.

துரியோதனன் கோபம் அடைந்தார்.

‘ஒரு அந்தணனுக்கு, திரௌபதி மாலையிட்டதன் மூலம் சத்திரிய வம்சத்தை அவமானம் செய்து இருக்கிறார்’ என்றார்.

மற்றவர்களும், ‘இதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கடும் வாக்குவாதம் செய்தார்கள்.

பிறகு ஏற்பட்ட போரில் பீமன் மற்றும் அர்ஜூனன் வெற்றி பெற்றார்கள். அவர்கள் திரௌபதியை அழைத்துக் கொண்டு தமது தாயார் குந்தி தேவி இருக்கும் இல்லத்திற்கு சென்றார்கள்.

மகிழ்ச்சி உற்சாகத்தில், அர்ஜுனன் இல்லத்தின் வெளியே நின்று கொண்டு “அம்மா, இன்று நான் சிறந்த பிட்சை வாங்கி கொண்டு வந்திருக்கிறேன்.” என்று விளையாட்டாக, வேடிக்கையாக கூறினார்.

அவர்களை கவனிக்காமல் சமைத்துக் கொண்டிருந்த குந்தி தேவி, “அப்படியானால், நீங்கள் அனைவரும் அதை பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

“அம்மா! இங்கே பாருங்கள். நான் பாஞ்சால தேசத்தில் நான் சுயம்வர போட்டியில் வெற்றி கொண்டு திரௌபதி மணந்து கொண்டு வந்திருக்கிறேன்” என்றான், அர்ஜுனன்.

பதறிப் போனாள் குந்தி தேவி.

"தெய்வத் திருமகளை, குலமகள் திரௌபதியையா ‘பிட்சை’ என்று சொன்னாய்? அவள் என்ன பிட்சை பொருளா? வேடிக்கையாக பேசுவதில் ஒரு அளவு வேண்டாமா? நடப்பது அறியாமல் ,'நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் ' என்று நான் கூறி விட்டேனே?” என்று வருந்தினாள்.

பஞ்சாயத்து கிருஷ்ணரிடம் சென்றது.

கிருஷ்ணர் “திரௌபதி! விளையாட்டாக, நீயே இது விரும்பி பெற்றதுதான். உனது முற்பிறவி நிகழ்ச்சியை நீயே கூறுகிறாயா? இல்லை, நான் கூறட்டுமா?” என்றார்.

மௌனம் காத்த திரௌபதியிடம், கிருஷ்ணர் கூறினார் .

“முற்பிறவியில் நீ மகாதேவரிடம் வரம் வேண்டி நின்றாய்.

'எனக்கு தர்மசீலம் உடைய,

அனுமனைப் போன்ற மாபெரும் ஆற்றல் உடைய,

ஒப்பு உவமை அற்ற மாவீரனாக,

பேரழகு மிக்கவனாக,

பூமா தேவியைப் போன்ற சகிப்புத்தன்மை உடைய ஒருவன்

எனக்கு மணவாளனாக வரவேண்டும்'

என்று வரம் கேட்டாய்! அதற்கு மகாதேவர்,

'இது நடைமுறை சாத்தியமற்றது. எல்லா குணங்களும் ஒருங்கே கொண்ட ஒருவன் அமைவது கடினம். நதியை பானைக்குள் அடக்க முடியாது. நடைமுறை சாத்தியமுள்ள ஒரு வரமாக கேள்,' என்றார்.

அதற்கு நீ,

'மகாதேவா! உம்மால் முடியாதது எதுவும் இல்லை. எனக்கு அந்த வரம் தான் வேண்டும்' என்று பிடிவாதம் பிடித்தாய். நீ பெற்ற அந்த வரத்தின் விளைவு தான் இது. நீ விரும்பி கேட்டாய். நீயே பெற்றுக் கொள்," என்று புன்னகை புரிந்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

இதையும் படியுங்கள்:
மகாபாரதத்தில் விதுரரின் துயரங்களுக்குக் காரணம் தெரியுமா?
திரௌபதியின் வரமும் வாழ்வும்

“எந்த ஒரு நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை. எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. இந்த நிகழ்வையும் நீ ஏற்றுக்கொள்,” என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.

logo
Kalki Online
kalkionline.com