

ஆந்திரமாநிலத்தில் நந்தியால் (முந்தைய கர்னூல் மாவட்டம்) மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நல்லமலா மலைத்தொடரில் (Nallamala Hills) அமைந்துள்ளது அஹோபிலம் எனும் புனிதத்தலம். அஹோபிலம், கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் என இரண்டாகப் பிரித்து அறியப்படுகிறது. இப்பகுதியில் நவநரசிம்மர்கள் பல இடங்களில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்கள்.
கீழ் அஹோபிலத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் செக்போஸ்ட்டும், செக்போஸ்ட்டில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ஸ்தலமும் ஆக மொத்தம் இருபது கிலோமீட்டர் தொலைவில் நவநரசிம்ம ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ பாவன நரஸிம்மர் ஸ்தலம் அமைந்துள்ளது. முற்காலத்தில் இந்த ஸ்தலத்திற்கு பலமணி நேரம் காட்டிற்குள் நடந்தே செல்லுவார்கள். தற்காலத்தில் ஸ்ரீ பாவன நரசிம்மரை ஜீப் மூலமாக சென்றடைந்து நரஸிம்மப் பெருமாளை சேவித்து மகிழ்கிறார்கள்.
ஸ்ரீபாவன நரஸிம்மரை தரிசிக்க ஜீப்பில் பயணம் செய்வது என்பதும் மிகவும் கடினம். பதினைந்து கிலோமீட்டர் தொலைவிற்கு பாதையே கிடையாது. ஜீப் ஒரு சர்ப்பத்தைப் போல வளைந்து நெளிந்து செல்லுகிறது. இருபது கிலோமீட்டரைக் கடக்க இரண்டு மணி நேரம் ஆகிறது. ஆனால் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் ஸ்தலத்திற்கு முன்புவரை ஜீப் செல்லுகிறது. இறங்கி ஒரு நிமிடத்தில் ஸ்தலத்தை அடைந்து விடலாம்.
பரத்வாஜ முனிவர் தனது பிரம்மஹத்தி தோஷத்தை இத்தலத்திற்கு வந்து போக்கிக் கொண்டதாக புராண வரலாறு. செய்த பாவங்கள் அனைத்தையும் விலக்கி அருளும் ஸ்தலம். எத்தகைய பாவங்களைச் செய்தவர்களாக இருந்தாலும் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ பாவன நரசிம்மரை மனதார வணங்கினால் அவர் அவர்கள் செய்த பாவங்களை விலக்கி தூயவர்களாக மாற்றி அருளுவார். கோயிலுக்கு வெளியில் கருடஸ்தம்பம் காட்சி தருகிறது. மஹா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது இந்த ஸ்தலம்.
செஞ்சு வேடுவகுல மலைவாழ்மக்கள் காட்டில் வேட்டையாடி வாழ்பவர்கள். இக்குலத்தில் பிறந்து வளர்ந்த செஞ்சுலட்சுமி, 'மணந்தால் நாராயணனை மட்டுமே மணப்பேன்' என்று சபதம் பூண்டவள். அவளுடைய பக்திக்கு மெச்சிய நரஸிம்மர் செஞ்சுலட்சுமியை மணந்து கொண்டார். வேடுவ குல மலைவாழ் மக்கள் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியை தங்களுடைய இஷ்ட தெய்வமாக சேவிக்கிறார்கள்.
வழக்கமாக தாயார் நரஸிம்மஸ்வாமியின் இடது மடி மீது முன்புறமாக பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால் இத்தலத்தில் மீசையுடன் காணப்படும் நரஸிம்ம ஸ்வாமியின் தொடையில் தாயார் செஞ்சுலட்சுமி எழிலாக இடது மடிமீது அமர்ந்து நரஸிம்ம ஸ்வாமியை நோக்கியவாறு சேவை சாதித்தருளுகிறார். நரஸிம்ம ஸ்வாமி சதுர்புஜங்களுடன் சுகாசனத்தில் வீற்றிருக்கிறார்.
மேலிரு திருக்கரங்கள் சக்கரம், சங்கைத் தாங்கியிருக்க கீழிரு திருக்கரங்களில் ஒரு திருக்கரமானது இடது மடியில் அமர்ந்துள்ள செஞ்சுலட்சுமித் தாயாரை அரவணைத்த படியும் மற்றொரு திருக்கரமானது அபயஹஸ்த்தைக் காட்டிக் கொண்டும் காட்சி தருகிறார். ஏழு தலை ஆதிசேஷன் குடையாக அமைந்திருக்கிறார். கருவறைக்குள் சுயம்பு மூர்த்தியுடன் பிரதிஷ்டை மூர்த்தியும் காட்சி தருகிறார். வெளிப்பிரகாரத்தில் லிங்கம் மற்றும் வேணுகோபாலனை தரிசிக்கலாம். தரிசித்து முடித்து வெளியே வரும்போது நரஸிம்மருக்கு உகந்த பானகத்தை பிரசாதமாக வழங்குகிறார். வாங்கிப் பருகி புத்துணர்ச்சி பெற்று பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்.
சற்று தொலைவில் அமைந்துள்ள மலையில் ஒரு குகையில் செஞ்சுலட்சுமித் தாயார் தாமரை மலரைத் தனது திருக்கரங்களில் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஹனுமனும் எழுந்தருளியுள்ளார். இந்த குகைக்குள் அமைந்துள்ள வெளியேறும் வழியில் சற்றே தவழ்ந்தபடிதான் வெளியேற வேண்டும்.
செஞ்சு மலைவாழ் மக்களான வேடுவ குலத்தினர் பிரதி சனிக்கிழமைகளில் இத்தலத்திற்கு வந்து கோயிலுக்கு முன்னால் ஆடு, கோழி முதலானவற்றை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே மக்கள் டிராக்டர், வேன், ஆட்டோ முதலான வாகனங்களில் சாரைசாரையாக வருகை தந்து தக்க இடத்தைத் தேர்வு செய்து தங்குகின்றனர். வரும்போதே அனைத்துவிதமான பொருட்களையும் கொண்டு வருவதையும் பார்க்க முடிகிறது.