

திருவாரூர் மாவட்டம் வெண்ணியில், வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோவில் அப்பர் மற்றும் சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். காவிரி தென்கரை ஸ்தலங்களில் 102 வது சிவதலம் ஆகும். கரும்பினை வில்லாகக் கொண்ட சிவபெருமான் கரும்பேஸ்வரர் ஆகவும், சௌந்தரநாயகி அம்மனாகவும் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த கோவில் சர்க்கரை நோயை குணப்படுத்தும் கோவிலாக விளங்கி வருகிறது. மூலவர் வெண்ணி கரும்பேஸ்வரர். அம்மன் சௌந்தரநாயகி. தலவிருட்சம் நந்தியாவட்டம். இங்கு இறைவன் கரும்பினை வில்லாகக் கொண்டு அம்பிகைக்கு காட்சியளித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் இந்த கோவில் வெண்ணி என்ற ஊரில் அமைந்துள்ளது.
சர்க்கரை நோயாளிகள் இங்கு வந்து வழிபட்டால், சர்க்கரை நோய் பூரண குணமாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில் ஆகும். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கோவில். கரிகால் சோழன் பாண்டிய மன்னனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்ற இடமாகும்.
முற்காலத்தில் மன்னருடன் இரண்டு முனிவர்கள் இங்கு உள்ள அடர்ந்த கரும்பு காட்டுக்குள் வந்தனர்.
அப்போது இங்குள்ள சிவன் கோவில் தலவிருட்சம் பற்றி இரண்டு முனிவர்களும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.
ஒருவர் தலவிருட்சம் கரும்பு என்றும் மற்றொருவர் நந்தியாவட்டை என்றும் கூறிக் கொண்டனர். இதைக் கேட்ட மன்னன் ஆச்சரியப்பட்டார்.
"இந்த இடத்தில் எந்த கோவிலும் இல்லையே பின்னர் எதற்காக நீங்கள் இருவரும் சண்டை போடுகிறீர்கள்?" என்று கேட்டார். அப்போது திடீரென ஒரு அசரீரி ஒலித்தது. "கரும்பு காட்டுக்குள் நான் சொரூபமாக இருக்கிறேன். எனது தலவிருட்சம் நந்தியாவட்டம்," என இறைவன் குரல் ஒலித்தது.
இதைக் கேட்ட மன்னன் அந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்தார். பூமியை தோண்டிய போது லிங்க பானம் வெளிப்பட்டது. மன்னர் தோண்ட தோண்ட அந்த இடம் மிகவும் ஆழமாக சென்று கொண்டே இருந்தது. மன்னன் இந்த இடத்தில் 20 அடி உயரத்தில் கோவிலை கட்டினார்.
இறைவன் கருவறையில் கரும்பே உருவாக காட்சி தருகிறார். கரும்பு கட்டுகளை சேர்த்து வைத்தால் போல் உருவம் தென்படுகிறது. இங்குள்ள சிவன் திருவுருவம் மிகவும் அபூர்வமானது என்று கூறுகிறார்கள்.
இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் ஆனதும் அதனை ஒரு துணி கொண்டு ஒத்தி எடுத்து விடுவார்கள்.
பாம்பாட்டி சித்தர் மற்றும் காகபுஜண்டர் இங்குள்ள சிவன் சர்க்கரை நோயை தீர்க்கும் அற்புத சக்தி படைத்தவர் என தங்களது பாட்டில் எழுதி உள்ளனர்.
இங்கு வரும் பக்தர்கள் ரவையை வெல்லத்தில் கலந்து இங்கு உள்ள பிரகாரத்தில் தூவி விடுவார்கள். அதனை எறும்பு வந்து தின்றுவிடும். அதை இறைவன் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். அவ்வாறு அதை இறைவன் ஏற்றுக் கொண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக நம்பிக்கை.
இங்குள்ள கருவறையில் நுழைவாயிலில் உள்ள நந்தி சிலை கற்சிலைக்கு பதிலாக வெண்கலத்தில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இந்த இடம் முழுவதும் கரும்பு காடாக இருந்தது.
சமீப காலமாக நகரத்தார் இந்த கோவிலை கவனித்து வருகிறார்கள்.
இந்த வெண்ணீஸ்வரர் கோவில் தஞ்சையில் இருந்து 26 கிலோமீட்டர் மற்றும் நீடாமங்கலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கருவறையைச் சுற்றி ஒரு அகழி உள்ளது. இதிலிருந்து தான் நீரை எடுத்து சிவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அதை துணியால் ஒற்றி எடுத்து விடுவார்கள்.
கிழக்கு நோக்கி கரும்பேஸ்வரரும், தெற்கு நோக்கி அம்பாளும் அருள் பாலிக்கிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டி நிறைய பெண்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.
அவர்கள் இங்கு உள்ள அம்மனுக்கு வளையல் சாற்றி நேர்த்திக் கடன் செய்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. எனவே, குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலுக்கு நிறைய பெண்கள் வருவது வழக்கம்.
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மதியம் 4 மணி முதல் 8 மணி வரை நடை திறந்து இருக்கும். நவராத்திரி ஒன்பது நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
பங்குனி மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி மூலவர் மீது விழும்படி கட்டப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிவனுக்கு சூரிய பூஜை நடைபெறுகிறது.
சர்க்கரை நோயாளிகள் ஒரு முறை வந்து இங்கு ரவை சர்க்கரை கலந்து வழிபட்டால் அவர்களது சர்க்கரை நோய் பரிபூரணமாக குணமாகும் என்பது கண்கூடாக தெரிகிறது.