
நாம் எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியையும் விநாயகரை வணங்கியே தொடங்குகிறோம். அதேபோல் ராம தூதனான அனுமனை வணங்கிய பிறகே ஆன்மீக நிகழ்ச்சிகளை நிறைவு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும், ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை “மகா கணபதிம்” என்று ஆரம்பித்து வணங்கிவிட்டு கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து “ராமச்சந்த்ராய ஜனக" என மங்களம் பாடி முடிப்பது வழக்கில் உள்ள மரபு ஆகும்.
மகாபாரதம் வியாசர் சொல்ல, சொல்லப் பிள்ளையார் எழுதிய மகாகாவியமாகக் கூறப்படுகிறது. வியாசரின் வேண்டுகோளுக்கிணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, பிள்ளையாரே மகாபாரதத்தை ஏட்டில் எழுதினார் என கூறப்படுகிறது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்ல வேண்டும் என விநாயகர் நிபந்தனை விதித்தாராம்.
அதன்படி இடைவெளி இல்லாமல் வியாசரும் சொல்ல சொல்ல பிள்ளையார் வேகமாக எழுதத் தொடங்கினார். வியாசர் வேகமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எழுத பிள்ளையாரால் முடியவில்லை. ஒரு கட்டத்தில், பிள்ளையாரின் எழுதி வந்த எழுத்தாணியின் கூர் மழுங்கிப் போனது.
உடனடியாக தனது வலக் கொம்பை (தந்தம்) ஒடித்து அதையே எழுத்தாணியாக உபயோகித்து, பிள்ளையார் மகாபாரதத்தை எழுதி முடித்ததாக வரலாறு கூறுகிறது. இப்படி பிள்ளையாரோடு ஆரம்பித்த மகாபாரதம் அனுமாரோடு முடிகிறது. இதைத் தான், ’பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது ‘என்று நாம் கூறுகிறோம்.
மகாபாரதத்திலும் அனுமார் வருகிறார். இது நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். மகா பாரதப் போரின் கடைசி நாளன்று முதலில் அர்ஜூனனை இரதத்திலிருந்து இறங்கும்படி கிருஷ்ணர் கேட்டுக் கொண்டார். அர்ஜூனன் இறங்கியவுடன் கடைசி வரை உடன் இருந்ததற்காக அனுமாருக்கு நன்றி தெரிவித்து விட்டு கிருஷ்ணர் இரதத்திலிருந்து கீழே இறங்கிய உடனே இரதத்தின் கொடியில் இருந்த அனுமார் மறைய இரதம் தீப்பிடித்துக் கொண்டது.
இதைப் பார்த்த அர்ஜுனனுக்கோ ஆச்சரியமாக இருந்தது. அனுமார் மட்டும் இரதத்தைக் காக்காமல் இருந்திருந்தால், எப்போதோ எரிந்திருக்கும் எனக் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்கினார். எனவே தான் மகாபாரதம் பிள்ளையாரிடம் தொடங்கி அனுமாரிடம் முடிகிறது.
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை “ஆத்யந்த பிரபு’ என்பர். ஆதி+அந்தம் என்பதையே 'ஆத்யந்த பிரபு’ என்று சொல்கிறார்கள்.“ஆதி" என்றால் “முதலாவது". முதல் கடவுள் விநாயகர். “அந்தம்" என்றால் “முடிவு". விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம்.
எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.
சிவனும், சக்தியும் இணைந்த உருவத்தை அர்த்தநாரீஸ்வரர் என்றும், சிவனும், விஷ்ணுவும் சேர்ந்த மூர்த்தியை "சங்கர நாராயணன்" என்றும் அழைக்கின்றோம். இதே போல் விநாயகரையும், அனுமனையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட தோற்றமே 'ஆதியந்த பிரபு' என்கிற தெய்வம். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். அனுமன், விநாயகர் இருவருமே புத்திக்கூர்மையின் ஆளுமைகள். ஆத்யந்தப் பிரபு, புத்திக் கூர்மையின் சங்கமமாகவும் தோன்றுகிறார்.
இவரை வணங்கும் பக்தர்களால் வாழ்வில் சிக்கல்களை வெற்றியுடன் எதிர்கொள்ள முடிகிறது என்பது அனுபவ உண்மையாகும். அவர்களால் வாழ்வில் ஆனந்தத்தைக் காண முடியும் என்பதன் கருத்தாக ஆத்யந்தப் பிரபு உருவம் அமைந்துள்ளது. சென்னை தரமணி அருகிலுள்ள மத்திய கைலாஷ் கோயிலிலும், சென்னையை அடுத்த வல்லக்கோட்டை தாண்டி வடக்கால் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஆத்யந்த பிரபு ஆலயத்திலும் நாம் இவர்களை ஒருசேரத் தரிசிக்க முடியும்.