ஆந்திராவின் விஜயவாடா அருகில் உள்ள மங்களகிரி ஶ்ரீ பனகால லஷ்மி நரசிம்மர் கோயில், நரசிம்ம பகவானின் பஞ்சஷேத்திரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ராஜா பரியாத்ராவின் மகன் ஹிரஸ்வ ஸ்ருங்கி நரசிம்மரை நினைத்து இங்கேயே தவமிருக்க ஒரு கட்டத்தில் அவன் உருவம் மாறி யானை வடிவ மலையாக மாறினான் என்று கதை ஒன்று உள்ளது. இந்த மலையில் ஶ்ரீலஷ்மி தேவி, விஷ்ணு பகவானை நோக்கி தவமிருந்ததால் இந்த மலைக்கு மங்களகிரி (மங்களமலை) என்ற பெயர் வந்தது. இங்கு மூன்று நரசிம்மர் கோவில்கள் உள்ளது. ஒன்று மலையடிவாரத்திலும் இன்னொன்று மலைக்கு மேலேயும் இன்னொன்று மலைக்கு மேல் நடு காட்டிலும் உள்ளது.
புராணங்களின்படி, நமுச்சி என்ற அரக்கன் கடுந்தவம் புரிந்து பிரம்ம தேவரிடமிருந்து உலர்ந்த அல்லது ஈரமான பொருட்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். அதன் பின்னர் நமுச்சி, இந்திரனையும் தேவர்களையும் துன்புறுத்தினான். மஹாவிஷ்ணுவின் உதவியுடன் நமுச்சியின் படையினை இந்திரன் அழித்தான். பயந்து போன நமுச்சி மங்களகிரியின் ஒரு சிறு குகைக்குள் ஒளிந்து கொண்டான். இந்திரன் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை கடலில் நனைத்து அசுரனின் மீது ஏவினான். சுதர்சன சக்கரம் மீது அமர்ந்திருந்த விஷ்ணு, நமுச்சி விடும் மூச்சை தன் வெப்பத்தால் சூடாக்கி அவனை கொன்றார். இதனால் சுதர்சன நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகிறார்.
நமுச்சியை கொன்றாலும் விஷ்ணுவின் கோவத்தை தணிக்க முடியவில்லை. தேவர்கள் சேர்ந்து அவருக்கு அமிர்தம் கொடுத்து கோபத்தை தணித்தனர். துவாபர யுகத்தில் பாலாலும், திரேதாயுகத்தில் நெய்யாலும், கலியுகத்தில் பானகத்தாலும் நரசிம்மர் சாந்தம் அடைவதாக ஐதீகம். இங்கு படைக்கப்படும் பானகத்தை ஈயும் எறும்பும் மொய்ப்பதில்லை என்பது அதிசயம். இந்த 'கோவில் இருக்கும் மலையில் ஹனுமான் மஹாவிஷ்ணுவின் கட்டளையை ஏற்று தங்கியிருப்பதாக' ஒரு ஐதிகம் நிலவுகிறது.
இக்கோவிலில் மூர்த்தியான லட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் வாய் திறந்த நிலையில் உள்ளது. பக்தர்கள் 'இறைவனுக்கு பானகம் கொடுப்பதை நீங்கள் நேரில் காணலாம், மேலும் அந்த சிலையிலிருந்து பானகம் குடிக்கும் சத்தம் கேட்கும்'. பானகத்தில் பாதியை மட்டுமே இறைவன் ஏற்றுக் கொள்வதால், மீதியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். 108 சாலிகிராமங்களைக் கொண்ட நரசிம்மரின் மாலையைக் காணலாம்.
மலையின் உச்சியில் கடவுள் சிலை இல்லாத காந்தாள நரசிம்மர் கோவில் ஒன்றும் உள்ளது. இங்கு நெய்யில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்த கோவிலுக்கு செல்ல 600 படிகளைக் கடக்க வேண்டும். கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள உண்டவல்லி குகைகளுக்கு செல்லும் வழி லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு அருகில் இயற்கையாக உருவான சிறிய குகையில் உள்ளது.
விஜயநகர அரசர் கிருஷ்ண தேவராயர் கோவிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளார். 11 நிலைகளைக் கொண்ட இக்கோயிலின் ராஜ கோபுரம் 153 அடிகளைக் கொண்டது. ஆந்திராவில் உயரமான கோபுரங்களில் மங்களகிரி லஷ்மி நரசிம்மர் கோயில் கோபுரமும் ஒன்று. விஜயநகர தளபதி திம்மராஜு, தேவராஜு இந்தக் கோயிலை விரிவுபடுத்தினார். அவர் பிரகாரங்கள், மண்டபங்கள், கோபுரங்களையும் கட்டினார். ஏரிளையும் நந்தவனங்களையும் அமைத்து மரத்தேர் ஒன்றையும் கோவிலுக்கு அர்ப்பணித்தார்
மங்களகிரி லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. இந்த விழா முதன்முதலில் பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரனால் கொண்டுவரப்பட்டது என்று நம்பப்படுகிறது. மங்களகிரி கோயிலில் நரசிம்ம ஜெயந்தி, ஹனுமந்த் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி , சிவராத்திரி விழாக்களும் கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்: இந்த கோயில் விஜயவாடாவின் ரயில் நிலையத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலும் பேருந்து நிலையத்தில் இருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.