

சத்ய சாயி இன்ஸ்டிடியூட்டின் விளையாட்டு தினத்தன்று பிரசாந்தி நிலையத்தில் உள்ள பூரண சந்திரோதயா ஆடிட்டோரியத்திலிருந்து சங்கராந்தி நன்னாளில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா 13-1-1984 அன்று ஆற்றிய அருளுரை:
நீங்கள் விளையாடும் விளையாட்டுக்களை மஹாபாரதப் போருடன் ஒப்பிடலாம்.
ஒரு புறம் கௌரவர் எனப்படும் தீய சக்திகள் இருக்க, மறுபுறம் பாண்டவர்கள் எனப்படும் நல்ல சக்திகள் உள்ளன. கால்பந்து போல உள்ள சாம்ராஜ்யத்தை வாழ்க்கை என்னும் விளையாட்டில் அவர்கள் விளையாடினர். தர்மநெறி கொண்ட பாண்டவர்களுக்கு கிருஷ்ண பகவானே தலைமை வகித்தார். போரில் தீயகுணம் படைத்த கௌரவர்கள் தங்கள் படைத்தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக இழந்தனர். கிருஷ்ணரிடம் முழு சரணாகதி அடைந்த பாண்டவர்கள் கடைசியில் வெற்றியை அடைந்தனர்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
பேராசை, வெறுப்பு, பொறாமை, கர்வம் போன்ற தீய குணங்கள் ஒரு புறமும் சத்தியம், நல்ல செய்கைகள், ஆழ்ந்த அமைதி, அஹிம்சை, அன்பு போன்றவை இன்னொரு புறமும் இருக்க அவற்றிற்கு இடையே நடந்த போட்டி தான் இது என்று விவரிக்கலாம். நல்ல குணங்களின் மொத்தமே ஒரு குழுவுக்குத் தலைவன் என்று சொல்லலாம். எதிர்த்த குழுவுக்கு உலகியல் ஆசைகளே தலைவன் என்று சொல்லலாம். எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் உலகியல் இச்சைகளுக்கு தோல்வியே கிட்டும். என்றுமே மாறாத எப்போதும் இருக்கும் தெய்வீகத்துடன் தங்களை இணைத்துக் கொள்பவர்களே வாழ்க்கையில் நிலையான வெற்றியைப் பெற நம்பிக்கை கொள்ள முடியும்.
திருதராஷ்டிரனின் மனைவியும் கௌரவர்களின் தாயுமான காந்தாரியும் சகுனியும் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள் தாம். காந்தாரி அமிர்தகலசத்திற்கு ஒப்பானவள். சகுனியோ நல்ல புத்திசாலி, ஆனால் முழுவதும் விஷமானவன். சகுனியின் புத்திமதியின் பேரில் கௌரவர்கள் தங்கள் ராஜ்யம் உட்பட அனைத்தையும் இழந்தனர். எவருமே தனது புத்திசாலித்தனம் மற்றும் அறிவு அல்லது படிப்பில் பல விருதுகள் பெறும் திறமை ஆகியவை பற்றி கர்வப்படக் கூடாது.
அறிவால் பெறும் சாதனைகளையும் திறமைகளையும் விட நல்ல ஒழுக்கமும் நேரிய சிந்தனையுமே அதிக மதிப்பு வாய்ந்தவை. உங்கள் அறிவையும் சிந்தனையையும் ஒழுக்கமான நல்ல வாழ்க்கையைக் கடைப்பிடிப்பதால் உண்டாகும் ஆனந்தத்தைப் பெற பயன்படுத்துங்கள். இலட்சியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையைக் கடைப்பிடியுங்கள்.
இன்று சங்கராந்தி தினமாகும். சூரியன் வடக்கு நோக்கி தனது யாத்திரையை மகர ராசியில் நுழைந்து ஆரம்பிக்கும் தினம் இது. ‘சம்யக் கிராந்தி இதி சங்கராந்தி” – நல்லதற்கான மாறுதலே சங்கராந்தி.
நாம் முழுமையாக மாற வேண்டும். சங்கராந்தி இயற்கையின் அழகை மட்டும் வெளிப்படுத்தவில்லை, ஆனால் அது தெய்வீக அழகின் ஒளியையும் வெளிப்படுத்துகிறது. அது பிரேமையால் மட்டுமே அடையப்படக் கூடியது. இறைவன் பக்தனின் ஆழ்ந்த பக்திக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். பக்தியே இறைவனைப் பிணைக்கும் முக்கிய அம்சமாகும். பஜனைகளும், பிரார்த்தனைகளும் வெறும் உதட்டிலிருந்து வெளிப்பட்டால் மட்டும் போதாது. அவை இதயத்திலிருந்து எழுந்து பாய வேண்டும். உண்மையான பக்தி என்னும் கங்கை பக்தனின் உள்ளத்திலிருந்து எழுகிறது. தெய்வீகத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஒவ்வொன்றும் இதயத்தையே ஆதாரமூலமாகக் கொண்டுள்ளது. ஆகவே இதயம் எல்லா தீயனவற்றிலிருந்தும் விடுபட வேண்டும். நல்ல செய்கைகளால் அது தூய்மை உள்ளதாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நல்ல மற்றும் தீய செய்கைகளால் ஏற்படும் விளைவுகளிலிருந்து ஒருவன் தப்பிப்பது முடியவே முடியாது. ஆனால் மலை போன்ற பாவமும் கூட இறைவனின் கருணையை அடைவதால் துடைத்து எறியப்படலாம். அகவே ஒருவன் இறைவனின் அன்பைப் பெற முயல வேண்டும். அது அனைத்தையும் கொண்டது. மிகவும் சக்தி வாய்ந்தது.
இந்த சங்கராந்தி தினத்திலிருந்து நல்ல குணங்களையும் நல்ல செயல்களை வளர்க்கவும், தூய பக்தியை வளர்க்கவும் உங்களை நீங்கள் அர்ப்பணியுங்கள். அது உங்கள் வாழ்க்கையிலிருந்து உங்களை மீட்கும்.
இது தான் உங்களுக்கு எனது செய்தியாகும். இதுவே உங்களுக்கு எனது ஆசீர்வாதம் ஆகும்.