கீதை கூறும் நெறி... ஶ்ரீ சத்ய சாயி சொன்ன உண்மை பாடம்!
02-06-1991 அன்று, பிருந்தாவனில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆடிட்டோரியத்தில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய நீண்ட உரையில் ஒரு பகுதி....
பகவத் கீதை சொல்லும் செய்தியை பல அறிஞர்களும் வெவ்வேறு விதங்களில் விளக்கி இருக்கின்றனர். 'அது கர்ம மார்க்கத்தையும், ஞான மார்க்கத்தையும் அல்லது பக்தி மார்க்கத்தையும் முதலாவது வழியாக எடுத்துரைக்கிறது' என்று அவர்கள் விவாதித்துக் கூறுகின்றனர். ஆனால் பகவத் கீதையின் உண்மையான செய்தியை அதன் முதல் ஸ்லோகத்தில் முதல் வார்த்தையாலும் (தர்ம) கடைசி ஸ்லோகத்தின் கடைசி வார்த்தையாலும் (மம) பெற வேண்டும்.
'மம தர்ம' என்பதே அந்த வார்த்தைகள்!
ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய கடமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதுவே பகவத் கீதை புகட்டும் பாடம்.
இல்லறத்தார்கள் அவர்களுடைய கிரஹ கடமைகளைச் செய்ய வேண்டும்.
வயதானவர்கள் வானப்ரஸ்த தர்மத்தை (உலகியலிலிருந்து ஒதுங்கி இருத்தல்) கடைப்பிடிக்க வேண்டும்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
அனைத்தையும் துறந்தவர்களுக்கு சந்யாஸ தர்மமும், திருமணத்திற்கு முன்னர் பிரம்மசர்ய தர்மமும் இருக்கிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் கடைப்பிடிப்பதற்கு இவற்றை பகவத் கீதை போதிக்கிறது.
இந்த தர்மங்களுக்கெல்லாம் அடிப்படையாக மனு தர்ம சாஸ்திரம் திகழ்கிறது. மனு விதித்துள்ள இந்த நெறிமுறைகளுக்கு ஈடு இணையாக வேறு ஒன்றும் உலகத்தில் இல்லை.
ஜெர்மானிய தத்துவஞானியான நியட்ஸே (NIETZSCHE), ’தி வில் டு பவர்’ (THE WILL TO POWER) என்ற புத்தகத்தை எழுத ஆரம்பித்தார். புத்தகத்தை எழுதி வரும் போது அவர் மனு தர்ம சாஸ்திரத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்த நூலைப் படிக்க ஆரம்பித்தவுடன் அவர் எல்லையற்ற சந்தோஷத்தை அடைந்தார். தான் எழுதிக் கொண்டிருந்த நூலை அப்படியே நிறுத்தினார்.
'சூரியன் போல மனு தர்ம சாஸ்திரம் பிரகாசிக்கும் போது நான் எழுதுகின்ற இந்த புத்தகம் ஒரு மெழுகுவர்த்தி போல ஆகி விடும். உலகில் இது போன்ற ஒரு நூலை காணவே முடியாது' என்றார் அவர்.
இப்படிப்பட்ட மகத்தான புனிதமான நூல்கள் பாரதத்தில் இருக்கும் போது எதற்காக தங்களது தர்மத்தை விட்டு விட்டு பிற நாட்டுக்குரிய கருத்துக்களை நாடிப் பின்பற்ற வேண்டும்?
இது ஒரு தவறான மோகமாகும். ஒருவர் விலைமதிப்பற்ற ரத்தினங்களையும் மேலான உண்மைகளையும் கொண்டிருக்கும் போது, அவர் மற்றவரின் கொள்கைகளின் பால் கவர்ச்சி கொண்டால் அது அப்படிப்பட்ட வியாதிகளுக்கு இரையாவதாகும்.
தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு – 'சொந்த வீட்டில் இருக்கும் சுவையான உண்டியை விட்டு விட்டு அடுத்த வீட்டு மக்கிப் போன உணவில் ஒருவன் ஆசைப்படுவது போல' என்பதே அந்தப் பழமொழி.
இணையற்ற பொக்கிஷமான பண்பாட்டுப் பாரம்பரியங்கள் ஒருவரிடம் இருக்கும் போது அதை விட்டு விட்டு வெளி நாடுகளில் இருக்கும் பளபளக்கும் பூச்சைக் கொண்டவற்றின் மீது மோகம் கொள்வதை விட வேறு பெரிய முட்டாள்தனம் எதுவாக இருக்கும்?
இந்தியாவில் உள்ள அமைப்பு மனித இயற்கையில் நுட்பமாயும் முன் மாதிரியாகவும் இருப்பதை ஊக்கி வளர்க்கும் ஒன்றேயாகும்.




