
காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் உள்ள ருத்ரபாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிப்பட்டால் நமது பூர்வ ஜன்ம பாவங்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
யுகம் பல கண்ட கோவில்:
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர், பிரம வித்யாம்பிகை திருத்தலம் அமைந்துள்ளது. இது பல யுகம் கண்ட கோவில் ஆகும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பகவான் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
21 தலைமுறை சாபம் நீங்கும்:
காசியில் இருப்பது விஷ்ணுகயா. இத்தலத்தை வழிபட்டால் ஏழு தலைமுறைகளின் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் திருவெண்காட்டில் உள்ள ருத்ர கயாவை வழிபட்டால் காசியை விட மூன்று மடங்கு அதாவது 21 தலைமுறைகளின பிதுர் சாபங்கள் நீங்கும் என்கிறார்கள்.
அகோர மூர்த்தி:
சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இக்கோயிலில் மட்டுமே காண முடியும். இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.
புதனுக்கு தனி சன்னதி:
இக்கோயிலில் புதன் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இத்தலத்தில் உள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமையில், புதன் ஹோரையில் தலைக்கு பச்சைப்பயிறு வைத்து ஆற்றில் மூழ்கி புதனை தரிசனம் செய்ய வேண்டும். அதன் பின் சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமர விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ரபாதத்தை வணங்க வேண்டும்.
திதி தர்ப்பணம் கொடுத்தல்:
இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இங்கு முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்த குடும்பத்தினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
இங்கு வழிபடுபவர்கள் 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தல வரலாறு:
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்து வந்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேறொரு உருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர்.
அசுரன் அங்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்ற ரிஷபத் தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.
ரிஷப தேவர் சிவனிடம் முறையிட, சிவன் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசானிய முகத்தில் இருந்து அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்தில் அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான்.
சரண் அடைந்த அசுரனை அகோர மூர்த்தியின் காலடியிலும், காயம்பட்ட ரிஷப தேவரை சுவேதாரண்யேசுவரர் சுவாமி நிருத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.
தென்னிந்தியாவில் மிக புகழ்பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரக தலத்தில் இது புதன் தலமாகும்.
சிவனின் வேறு பெயர்கள்:
இவருக்கு திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என்ற பெயர்களும் உண்டு .
தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜபெருமானுக்கு ஆண்டுக்கு 6 அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோர மூர்த்தி. திருவெண்காட்டில் அகோர மூர்த்தி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஆதி சிதம்பரம்:
சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் இது ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. 108 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சூரியன், சந்திரன் புதன் வழிபட்ட திருத்தலம் இது.
புதன் பரிகார தலங்களில் முதன்மைத் தலமாக கூறப்படும் தலம் இது.
சிவபெருமானது ஆனந்த தாண்டவத்தின் போது அவரது முக்கண்களில் இருந்து சிந்திய நீர் துளிகளே அக்கினி சூரிய, சந்திர தீர்த்தங்களாக இங்கு அமைந்துள்ளன.
சிறப்புகள்:
புதன் பகவானுக்கு இத்திருத்தலத்தில் 17 அகல் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இத்தலத்தில் தீபம் ஏற்றி வழிபட்ட பின்பு அடுத்து வரும் காலகட்டங்களில் உங்களுக்கு நடக்கப் போகும் புதன் திசையானது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்பது ஐதீகம்.
தொழிலில் சிறந்து விளங்க வேண்டுமென்றாலும், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், கடன் தொல்லை, குழந்தை வரம், திருமண யோகம் கிடைக்கவும், தீராத பாவங்கள் தீரவும் புதன் பகவானை வழிபட இவை அனைத்தும் நீங்கும்..
21 தலைமுறை பாவங்கள் நீங்கி புண்ணியம் பெற இத்தலம் சென்று வழிபடலாம்.