

முன்னொரு காலத்தில் நிர்மலன் என்ற மன்னன் குடகு மலைப்பகுதியில் ஆட்சி புரிந்தான். சரும நோயால் பாதிக்கப்பட்ட மன்னன் மிகவும் வருந்தினான். தன் நிலை குறித்து வருந்தி இறைவனிடம் முறையிட்டான். மன்னனின் தொடர் பிரார்த்தனைக்கு மனமிரங்கிய பெருமாள், அவனுக்கு அருள விரும்பினார்.
“உனக்குக் கடுமையான தோஷம் உள்ளது. காவிரிக் கரையில் உள்ள ஆலயத் திருக்குளங்களில் நீராடி வந்தால் தோஷம் நீங்கும். மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் உனக்கு வழி காட்டுவார். வழியில் உள்ள திருத்தலங்களில் நீராடும்போது, எங்கு உன் மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ, அப்போது தோஷங்கள் நீங்கும்,” என்று ஒருநாள் அசரீ கேட்டது.
அதன்படி, மன்னனும் காவிரிக் கரை வழியாகத் தன் பயணத்தைத் தொடங்கினான். ஓரிடத்தில் அவன் மேனி பொன் நிறமாக மாறியதும், மன்னன் மகிழ்ந்து, மகாவிஷ்ணுவுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான். அப்போது அங்கிருந்த பெரிய அத்தி மரத்தில், சங்கு சக்கரதாரியாக கதாயுதம் ஏந்தி, அபய ஹஸ்தம் காட்டி மன்னனுக்குக் காட்சி அளித்தார் ஸ்ரீமன் நாராயணன்.
மன்னனின் பாவங்கள், தோஷங்கள் நீங்கியதால் இத்தலம் 'கோடி ஹத்தி' (கோடி பாவங்களையும் நீக்கும் தலம்) என்று பெயர் பெற்றது. காலப்போக்கில், பேச்சு வழக்கில் மருவி 'கோழி குத்தி' என்று இப்போது அழைக்கப்படுகிறது.
மன்னன் நிர்மலன் அதன்பின் பெருமாளின் பக்தனாகி, தவமிருந்து ரிஷியாக மாறிவிட்டான். ‘பிப்பல மகரிஷி’ என்று மக்கள் அவரை அழைக்கலானார்கள். இவர் தவம் செய்த இடத்தில் இப்போது மண்டபம் ஒன்று உள்ளது. அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை ‘பிப்பல மகரிஷி தீர்த்தம்’ என்று அழைக்கிறார்கள்.
கோழிகுத்தி பெருமாளின் சிறப்பைப் பற்றி அறிந்த சரபோஜி மன்னன், இங்கு வந்து இறைவனை வழிபட்டார். “பகவானே! பிப்பல மகரிஷியின் தோஷம் நீக்கி அருள் செய்தவரே! எனக்கும் யுத்த தோஷம் உள்ளது, பிப்பலருக்கு வானளாவக் காட்சி தந்து அருளியதுபோல் எனக்கும் அருள வேண்டும்,” என்று மனமுருக வேண்டி நின்றார்.
கருணைக்கடல் கமலக்கண்ணன் அத்தி மரத்தில் விஸ்வரூப தரிசனமாகக் காட்சி தந்து சரபோஜி மன்னனுக்கு அருளினார். தனக்குக் காட்சியளித்த பெருமாளை அப்படியே அதே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக வடித்தான் மன்னன். விஸ்வரூப பெருமாள் என்பதால் காலப்போக்கில் வானமுட்டி பெருமாள் என்ற திருநாமம் கொண்டார்.
இப்போதும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், கோழிகுத்தி என்ற ஊரில் (மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே) வானமுட்டி பெருமாள் அத்தி மரத்தில், சதுர்புஜனாய் சங்கு சக்கரம் கதாயுதம் தரித்து, அபய ஹஸ்தம் காட்டி நமக்குக் காட்சியளிக்கிறார்.
காஞ்சியில் இருக்கும் அத்தி வரதரை அவர் வெளியே வரும்போதுதான் தரிசிக்க முடியும். ஆனால் இவர் அத்தி மரத்திலேயே 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் எப்போதும் பக்தர்களுக்கு அருள்கிறார். இந்த அத்தி மரத்தின் வேர் நன்கு படர்ந்து இப்போதும் பூமிக்கு அடியில் இருக்கிறது.
அத்தி மரத்தால் ஆனவர் என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதரையும் ஒன்றாகத் தரிசித்த பலன், வானமுட்டி பெருமாளைத் தரிசித்தால் கிடைக்கும் என்கிறார்கள். பெருமாளுக்கு இடப்பக்கத்தில் தாயாரின் விக்ரகம் உள்ளது. தனி சந்நிதி இல்லை. நரசிம்மர்தான் இங்கே உற்சவமூர்த்தியாக உள்ளார்.