

ஒரு மனிதனின் வாழ்வில் மரணத்தை விட கொடுமையானது மரண பயமே! மனித வாழ்வில் தர்மம், அதர்மம் ஆகிய இரண்டை புரிந்தவர்களுமே தம்முடைய இறுதிக்காலத்தில் பயம் கொள்வது மரணத்தை கண்டே.
எமதர்மன் எத்தனையோ நல்ல பதவிகள் இருந்தும் தனக்கு ஏன் உயிர்களைப் பறிக்கும் இந்த பதவி என்று மனம் வருந்தி வேதனை அடைந்தார். தான் உயிர்களை பறிக்கும் தொழில் செய்வதால் அனைவரும் தம்மை வெறுக்கின்றனர், பயன்தோடுகின்றனர் என்று மன வேதனை அடைந்தார் எமதர்மன். அப்பொழுது ஓர் அசரீதி ஒலித்தது. அது, யமதர்மனிடம் ஸ்ரீவாஞ்சியம் சென்று சிவபெருமானை நோக்கி தவம் செய்யுமாறு கூறியது. இதனை கேட்டு எமதர்மனும் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்தினால் மகிழ்ச்சியடைந்த சிவன் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் எமதர்மனுக்கு காட்சியளித்து, "வேண்டிய வரங்களை கேள்," என்றார்.
எமதர்மன் தான் செய்யும் தொழில் தனக்கு பிடிக்கவில்லை என்றும் உயிர்களைப் பறிக்கும் தொழில் செய்வதால் அனைவரும் தன்னை வெறுத்து ஒதுக்குகிறார்கள் தம்மை தூற்றுகின்றார்கள் என்றும் இறைவனிடம் கூறினார்.
"அனைவரது இறப்பிற்கும் நான் காரணமாக இருக்கிறேன். இதனால் பெரிய பிரம்மஹத்தி தோஷம் என்னை பிடித்து வாட்டுகிறது" என்றும், தன்னுடைய பாவச்சுமை கூடுகிறது என்றும் எமதர்மன் கூறினார்.
அதற்கு சிவபெருமான், "இனி யாரும் எமதர்மன் 'உயிரை பறித்து விட்டான்' என்று கூற மாட்டார்கள். நோயினாலும், விபத்து காரணமாகவும், வயது முறிவு காரணமாகவே இறந்தார்கள் என்று கூறுவார்கள். உம்மை இனி காரணம் காட்ட மாட்டார்கள். மனிதர்களின் பழி பாவம் உன்னை வந்து சேராது," என்ற வரத்தை வழங்கினார். மேலும் இத்திருத்தலத்தில் எமன் வந்து தவம் செய்ததால் (யோக நிலையில் இருப்பதால்) இத்தலத்தில் வந்து வணங்குபவர்களுக்கு எம பயம் நீக்கும் மற்றும் அமைதியான இறுதி காலம் அமையும் என்பது நம்பிக்கை. இக்கோவிலுக்கு வருபவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
மேலும் சிவபெருமான், "இத்திருத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை வணங்கிய பின்னே என்னை வணங்குவார்கள்," என்றும் அருளினார்.
திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் ஊரில் உள்ளது இத்திருக்கோயில். சிவபெருமான் ஸ்ரீவாஞ்சிநாதீஸ்வரர் தாயார் மங்களநாயகி நாமத்தில் அருள் பாழிக்கின்றார். இத்திருத்தலத்தில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக தோன்றியவர். இத்திருத்தலத்திற்கு வந்து இங்குள்ள எமதர்மனை பூஜிப்பதன் மூலம் மரண பயம் நீங்கி அமைதியான மரணம் நிகழும் என்பது ஐதீகம். இத்திருக்கோவில் காசிக்கு நிகரான புனித தலமாகக் கருதப்படுகிறது.