காகம் மரணத்தை எச்சரிப்பது ஏன்?

Death sign
Death sign
நெய்வாசல் நெடுஞ்செழியன்

தொழில்: விவசாயம், விற்பனை பிரிதிநிதி மற்றும் பத்திரிகை பணி பத்திரிகை அனுபவம்: 40 ஆண்டுகள் வளர்தொழில் மாத இதழில் மாவட்ட செய்தியாளராக பத்தாண்டுகள் பணி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வணிக கட்டுரைகள் தினத்தந்தி ஆன்மீக பிரிவுக்காக 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் மற்றும் சப்தகிரி, கல்கி தீபம் போன்றவற்றிலும் ஆன்மீக தினமணிகதிர், தினமலர் வாரமலர், மை விகடன், சிறுகதை டாட் காம் இதழ்களில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள். தினமலர் அமரர் ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டியில் மூன்று தடவை பரிசு, தினமணி கதிரில் எழுதப்பட்ட கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு தற்போது விகடன் குழுமத்தின் பசுமை விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், குமுதம் குழுமத்தின் மண்வாசனை மற்றும் கல்கி குழும இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடலூர் மாவட்ட பாடல் பெற்ற தலங்கள் என்னும் ஆன்மீக நூல், வெற்றிப் படிகள் என்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல், தேடக் கிடைக்கும் திறந்திட வரும் என்னும் தன்னம்பிக்கை கவிதை நூல். என்றும் இனிதாய் வாழ்வோம் என்னும் நாவல் ஆகியவற்றை பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Updated on

மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, கணவர் மீது அதீதபக்தி கொண்ட தர்மபத்தினி . அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள். ஒரு நாள் வணங்க முற்பட்டபோது, அவரது உடல் நிழல் அரையடி தள்ளி இருப்பதைப் பார்த்து துணுக்குற்றாள். தன் கணவருக்கு ஏதோ நிகழப் போகிறது என்பதை உணர்ந்தவள், அதை தடுக்கும் ஆவேசத்துடன் அகல்விளக்கைத் தூண்டி எரிய விட்டாள்.

குளித்து சாணம் தெளித்து கோலமிட்டாள். கண் விழித்த மகரிஷி நீராட புறப்பட, அவரை தடுத்தாள். "இன்று நான் விரதம் அனுஷ்டிக்கிறேன். சூரியன் மறையும் வரை தாங்கள் வெளியில் செல்ல வேண்டாம்!’’என்றாள்.

அவள் பேசிய விதம் மகரிஷியின் மனதை இளக வைத்தது. உள்ளே சென்றவர், விலகியிருக்கும் தனது நிழலைக் கண்டு பூந்ததி விதியுடன் போராடத் துணிந்து விட்டதை புரிந்து கொண்டு புன்முறுவலுடன் வேடிக்கைப் பார்த்தார். ஆற்றங்கரையில் காத்திருந்த எமதூதர்கள் தன்ரீகர் வராததால் குடிலை நோக்கி வந்தனர். குடிலை நெருங்கியவர்களை அக்னிப்பிழம்பு எரித்தது. மகா பத்தினி பூந்ததி தன் கற்பின் மீது சத்தியம் செய்து தன்னைக் காவலாக நிறுத்தியிருக்கிறாள்.

எமதர்மனே வந்தாலும் உள்ளே போக முடியாது! அக்னி பகவான் எச்சரித்தார். மிரண்டு போன எமதூதர்கள் எமனிடம் விஷயத்தைத் தெரிவிக்க விரைந்தனர். குடிலின் வாசலுக்கு எதிரே பூஜை செய்தாள் பூந்ததி. பக்கத்து மரக்கிளையில் வெகு நேரமாக ஒற்றைக் காகம் கரைந்து கொண்டே இருந்தது. நேரம் செல்லச் செல்ல அந்தக்காகம் பூந்ததிக்கு அருகில் வந்து கரைந்தது.

பூந்ததி பூஜை தடைபடா வண்ணம் கண்களை மூடி மந்திரங்களை ஓதினாள். திடீரென காகம் கரைவதை நிறுத்த நிசப்தம் நிலவியது. கண்களைத் திறந்த பூந்ததி, இறைவனுக்குப் படைத்த பிரசாதத்தை காகம் தின்பதை பார்த்து கோபமானாள். அருகில் இருந்த குச்சி எடுத்து விரட்டினாள். காகம் தள்ளிப் போனது. பூந்ததி நகர்ந்து விரட்டினாள்.

மீண்டும் தள்ளிப் போனது. இப்படியாக காகத்தை விரட்டிக்கொண்டே குடில் அமைந்த நந்தவனத்தை விட்டே வெளியே வந்தாள். இதுவரை விலகிப் போன காகம், அவளது காலடியில் அமர்ந்து எமதர்மராஜனாக உருமாறியது. ‘‘தாயே… மன்னியுங்கள்! குடில் அருகே நீங்கள் இருந்தால், என் கடமையை செய்ய முடியாது. விதிப் படி எல்லாம் நடக்க வேண்டும் என்பதை அறிய மாட்டீர்களா?’’ என்றான் எமதர்மராஜன்.

‘கணவரின் உயிரைக் காக்க இயலாத ஒரு பெண் உயிரோடு இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது’ என்று, அருகிலிருந்த கிணற்றில் குதித்தாள் பூந்ததி. எமதர்மன் பின் தொடர்ந்து வந்து எட்டிப் பார்த்தான். பூந்ததியின் ஆயுள் இன்னமும் முடியவில்லையே? என்று அவன் யோசித்தபோது… கிணற்றிலிருந்து காகமாக மாறி மேலே பறந்து வந்தாள் பூந்ததி. "தாயே! எங்கெங்கு நான் உயிர் எடுக்கப் போகிறேனோ… அங்கெல்லாம் காகம் உருவில் சென்று எச்சரியுங்கள்! இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய உணவு உண்டு அவரவர்க்கு சமர்ப்பணம் செய்யுங்கள்!" என்று பூந்ததியிடம் கேட்டுக் கொண்டான் எமதர்மராஜன். அதன்படி காகத்தின் வடிவில் இன்றும் மரணத்தை எச்சரித்துக் கொண்டும், இறந்தவரின் ஆன்மா சாந்திக்காக உணவு உண்டு வருகிறாள் பூந்ததி.

இதையும் படியுங்கள்:
வீட்ட இப்படி மாத்திப்பாருங்க... மனதில் சந்தோஷம் பொங்கும்!
Death sign
logo
Kalki Online
kalkionline.com