அறிமுகமில்லாதவரிடம் குழந்தையைத் தராதீர்கள், பிறகு அவதிப்படாதீர்கள்.
எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் ஏதேனும் வன்முறை, தற்கொலை, கொலை, கொள்ளை என்று செய்தித் தாள்கள் சுமந்து வரும் செய்திகள், தினசரி காலைக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றால் அது மிகையில்லை.
இன்னொரு கொடுமையான செய்தி, அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது.
திருமணமாகாமலேயே தாய்மை அடையும் பெண்கள், ஏற்கெனவே மூன்று, நான்கு குழந்தைகள் உள்ள, புதிதாகப் பிறக்கவிருக்கும் குழந்தையை வளர்க்க இயலாத ஏழைப் பெண்கள் போன்றவர்கள் குழந்தை கடத்தல் கும்பலால் ஏமாற்றப் படுகிறார்கள். அவர்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி, மிரட்டியோ அல்லது பண ஆசை காட்டியோ அந்தப் புதுக் குழந்தைகளைப் பறித்துக் கொள்கிறார்கள்.
குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர், எத்தனையோ மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டும் தமக்கு இனி குழந்தை பிறக்காது என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு வந்து ஏதேனும் குறுக்கு வழியில் குழந்தை கிடைக்குமா என்று சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இவர்களைப் போன்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, குழந்தை கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் ஏற்கெனவே சொன்னதுபோல குழந்தைகளைத் திருடியோ, வேறு வகைகளிலோ கடத்தி, இவர்களிடம் கொடுத்துப் பணம் பெறுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
குழந்தை பாக்கியம் கிட்டாத பெற்றோருக்கு, நேர்மையாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சில தொண்டு நிறுவனங்களிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும் அதைத் தெரிந்துகொள்ளாமலோ அல்லது சட்ட ரீதியாகத்தான் அந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள முடியும் என்ற நிர்ப்பந்தத்தாலோ, தயங்கும் பெற்றோர், இப்படி சமூக விரோதிகளிடம் பணத்தை இழப்பதோடு, பின்னாளில் காவல்துறையால் பிடிபட்டு, குழந்தையையும் இழந்து அவர்கள் வருந்துகிறார்கள்.
அரசு மருத்துவ மனைகளில் குழந்தைகல் திருடு போவதைத் தடுப்பதற்காகவே, கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனால் குழந்தைத் திருட்டு உடனே கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள், பறிகொடுத்த தாய், குழந்தையை மீண்டும் பெற்று மகிழ்கிறார்.
சில அனுதாப வார்த்தைகளிலும், ஆறுதல் சொற்களிலும் மயங்கி சில தாய்மார்கள் முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் தங்கள் குழந்தையைப் பறி கொடுக்கிறார்கள். மருத்துவமனைக்குள் அதிகாரபூர்வமான பணியாளர்கள் இருக்கும்போது, பிறந்த குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் மேற்கொண்டிருக்கும்போது எதற்காகப் புது மனிதர்களை நம்பி, குழந்தையை ஒப்படைக்க வேண்டும்?
அதிகாரபூர்வமற்றவர்கள் மருத்துவமனைக்குள், நோயாளிகளின் உறவினர் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து விடுகிறார்கள், அவர்களே திட்டமிட்டு குழந்தைத் திருட்டை மேற்கொள்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்குச் செல்லும்போது ஒருவர் அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒழுங்கு மீறாமல் இருக்கிறார்; ஆனால் அதே நபர் அரசு மருத்துவமனைக்கு வருவாரானால், மிகுந்த உரிமை எடுத்துக்கொண்டு பல ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்! இது நிதர்சனமான அவலம். அரசு மருத்துவ மனைகளில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாததால், ஏமாறும் அப்பாவி தாய்கள் இங்கே அதிகம்!
இதனால்தான் அரசு மருத்துவமனை என்றாலே அலட்சியமும், ஒழுங்கீனமாக நடந்துகொள்ளலாம் என்ற அகங்காரமும், அளவுக்கு மீறிய சலுகைகளை எடுத்துக்கொள்ளலாம் என்ற அகம்பாவமும் சிலரிடம் மிகுந்துவிடுகின்றன. பொதுவாகவே அரசு மருத்துவமனைகளில் கண்டிப்பு, கெடுபிடி, ஒழுங்கு மற்றும் சுத்தத்தைப் பராமரித்தல் ஆகியவை குறைவது, இத்தகையவர்களுக்கு சலுகைகளாக அமைந்துவிடுகின்றன. இதனாலேயே குழந்தை திருட்டு என்ற அளவுக்கு அங்கே ஒழுக்கம் சீர்கெட்டு கிடக்கிறது.
கண்காணிப்பு காமிரா மூலமாகக் குழந்தைத் திருட்டைக் கண்டுபிடித்து, குழந்தையை மீட்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன என்றாலும் திருட்டு நடந்த பின், துரத்திச் செல்வது என்றில்லாமல், அந்தத் திருட்டே நடைபெறாதபடி கட்டுப்பாடுகளை இறுக்குவதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும். சில மருத்துவமனைகள் கண்காணிப்பு காமிராக்கள் இயங்கவே இல்லை என்ற தகவல் இன்னொரு சோகம்.
அரசு மருத்துவமனைகளில், நுழைவாயிலிலிருந்தே ஆரம்பித்து கட்டுப்பாடுகளை உறுதியாக்கி எந்த ஒழுங்கீனத்துக்கும் இடம் கொடுக்காத நிலை உருவாகுமானால், தாய்மார்கள் நிம்மதியாகப் பிள்ளை பெற்று, சந்தோஷமாக வீடு திரும்புவார்கள்; குழந்தை திருட்டு என்ற அச்சத்திற்கும் இடமில்லாமல் போகும்.