15ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கம், ரங்கநாதர் சந்நதியில், இறைப்பணி ஆற்றிவந்தார் கிருஷ்ண பட்டர். இந்தியா முழுவதும் திக்விஜயம் செய்து அருள் நெறி பரப்பி வந்த புரந்தரதாசர், ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். பட்டரின் மகள் பிரேமாவின் சங்கீத ஆர்வத்தை அறிந்த அவர், கர்நாடக சங்கீதத்தின் ஆரம்பமான சரளி வரிசையை (ச, ரி, க, ம, ப, த, நி) அவளுக்குச் சொல்லி கொடுத்தார். அவளும் ஆர்வத்துடன் கற்று, விரைவில் ஆழ்வார் பாசுரங்களை ராகத்துடன் பாடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றாள்.
பிரேமாவின் கணவன் குடியும், சூதாட்டமுமாக வாழ்பவனாக அமைந்தான். ஆனால் பிரேமாவால் பகவான் கிருஷ்ணன் மீது கொண்டிருந்த பக்தியினால் எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ள முடிந்தது. அதனால் கோவிலில் ராமாயணம், மகாபாரதம் கதைகளை இசையுடன் சொல்லி பக்தர்களை மகிழ்விப்பதில் மன நிம்மதி கண்டாள்.
அவளுக்கு ராமகிருஷ்ணன் என்ற குழந்தை பிறந்தான். சில நாட்களில், அவளுடைய கணவன் போதைத் தள்ளாட்டத்தில் காவிரி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். மகளுடைய துயர நிலையைக் கண்டு மனம் நொந்த கிருஷ்ண பட்டரும் உலகை நீத்தார்.
வாழ்க்கையின் இரு பிடிமானங்களையும் இழந்த பிரேமா, ஸ்ரீரங்கத்தை விட்டு குழந்தையுடன் காசி மாநகருக்குப் புலம் பெயர்ந்தாள். அங்கே தர்ம சத்திரம் ஒன்றில் பணியாற்றியபடியே தன் சங்கீத பிரசங்கத்தையும் மேற்கொண்டாள். அவளை ஊரார் ‘பிரேமா பாய்‘ என்றழைத்துக் கொண்டாடினார்கள்.
அப்போது பத்து வயதாகியிருந்த மகன் ராமகிருஷ்ணன், தாயிடமிருந்து கர்நாடக சங்கீதத்தைப் பயின்றதோடு, தாயார் தவிர பிற ஆன்மிக சொற்பொழிவாளர்களின் விரிவுரைகளையும் கேட்டு, மிகச் சிறந்த கிருஷ்ண பக்தனாக விளங்கினான். தமிழ், ஹிந்தி மொழிகளில் சரளமாக உரையாடும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டான். கோவில்களில் நடைபெறும் உபன்யாசங்களை தாயுடன் சென்று கேட்டான். தன்னுடன் தாயாரால் வரமுடியாத நாட்களில் தான் கேட்டதை அப்படியே முழு வர்ணனையுடன் அவருக்கு விளக்கிச் சொல்வான்.
ஒருசமயம், ‘யசோதை கிருஷ்ணனை உரலில் கட்டிப் போட்டாள்,‘ என்ற தகவலை அவன் உணர்ச்சிபூர்வமாக விவரித்தபோது, தான் அப்போது கோகுலத்தில் வாழ்ந்தது போன்ற பிரமை ஏற்பட்டது பிரேமாவுக்கு. உடனே, ‘‘அடடா, என் கண்ணன் உரலுடன் கயிற்றல் கட்டப்பட்டானா? ஐயோ அந்தக் குழந்தையின் இடுப்பை கயிறு பெரிதும் உறுத்துமே! உடனே என் கண்ணனை விடுவிக்க வேண்டும்,‘‘ என்று கதறிய அவள், நேரே ஓடிச் சென்று கங்கை வெள்ளத்தில் பாய்ந்தாள். அப்போது நதியிலிருந்து ஓர் ஒளிப் பிழம்பு எழுந்து வானோக்கிச் சென்றது.
தாயை இழந்த ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கத்துக்கே திரும்பினான். அங்கே அரங்கன் சந்நதியில் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஆடிப்பாடியபடி ஆனந்த நிலையில் மெய்மறந்திருப்பதைக் கண்டு பரவசமடைந்தான். அவரைத் தன் குருவாக ஏற்று அவருடன் பாரதம் முழுவதும் பயணித்தான். மொகலாய படையெடுப்பை அடுத்து அவன் பெர்ஷியா நாட்டிற்குச் சென்று தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த கட்டத்திலும் அந்நாட்டு மொழி, சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்தான் ராமகிருஷ்ணன். பிறகு நிலைமை ஓரளவு சுமுகமானபோது மீண்டும் இந்தியாவுக்கு வந்து, குருவின் ஆணைப்படி வட இந்தியாவிலுள்ள பிருந்தாவனத்தில் ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனம், பாகவத சேவை என்று இறைத்தொண்டில் இறங்கினான்.
இந்த ராமகிருஷ்ணனே, சைதன்ய மஹாபிரபுவால் தீட்சையும், ‘ஸ்வாமி ஹரிதாஸ்‘ என்ற பெயரும் வழங்கப்பட்டு, புகழ் பெற்றார். இவர் உருவாக்கியதுதான் ஹிந்துஸ்தானி சங்கீதம். அக்பர் சபையில் ஆஸ்தான இசைக் கலைஞராகத் திகழ்ந்த தான்சேன், சங்கீதம் பயின்றது ஸ்வாமி ஹரிதாஸிடம்தான் என்று வரலாற்றுப் பதிவு ஒன்று கூறுகிறது.
ஸ்வாமி ஹரிதாஸ், புராதன ஹிந்துஸ்தானி வகையான துருபதத்தில் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றியிருக்கிறார். வட இந்திய மாநிலங்களில் ஹிந்துஸ்தானி இசை போதிக்கும் ஹரிதாஸ் ஆன்மிகப் பள்ளிகளின் நிறுவனர் என்று இவர் இன்றளவும் புகழப்படுகிறார்.