

புதன் பரிகாரத் தலங்களில் முதன்மையான தலமாகக் கருதப்படுவது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம்.
மருத்துவாசுரன் என்னும் அசுரன் ஈசனைத் தியானித்துத் தவமிருந்தான். அவன் தவத்திற்கு மனமிரங்கிய ஈசனிடம், அவரின் சூலாயுதத்தை வரமாகக் கேட்டான் அசுரன். சூலாயுதத்தைத் தவறாகப் பிரயோகிக்கக் கூடாது என்று எச்சரித்து, அதைக் கொடுத்தார் சிவபெருமான்.
ஆனால் வரம் கிடைத்ததும் அசுரனின் அட்டகாசம் அதிகமானது. தேவர்களைத் துன்புறுத்தினான். அவனிடமிருந்து தப்பித்து, வேறு உருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர் தேவர்கள். மருத்துவன் திருவெண்காட்டிற்கும் வந்து தேவர்களுக்குத் துன்பம் கொடுத்தான்.
தேவர்கள் ஈசனிடம் முறையிடவே, அவர் ரிஷப தேவரை அனுப்பி வைத்தார். அசுரன், ரிஷப மூர்த்தியையும் சூலாயுதத்தால் தாக்கினான். ரிஷப தேவர் ஈசனிடம் முறையிட்டார். சிவபெருமான் வெகுண்டார். அவரின் ஐந்து முகங்களில் தெற்கு நோக்கிய அகோர முகத்தில் இருந்து 'அகோர மூர்த்தி' தோன்றினார். அவரைப் பார்த்தவுடன் கை கால் நடுங்கிய மருத்துவன், அவர் காலடியில் சரணடைந்தான்.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அகோர மூர்த்தியின் திருவடியில், சரணடைந்த அசுரனை இப்போதும் காணலாம். சிவபெருமானின் 64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோர மூர்த்தி. இந்த அகோர மூர்த்தி தரிசனம் திருவெண்காட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வேறு எங்கும் காண இயலாது.
அசுரன் ரிஷப தேவரை சூலாயுதத்தால் தாக்கியதால் சுவாமி சன்னதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இப்போதும் பார்க்கலாம். சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் புரிந்தபோது அவரின் முக்கண்களில் இருந்தும் சிந்திய நீர்த் துளிகள் அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக இங்கே அமைந்துள்ளன.
மதங்க முனிவரின் தவத்தை ஏற்று மாதங்கியாக அன்னை அவதரித்து, திருமணப் பருவம் அடைந்ததும் வெண்காட்டீஸ்வரரை மணந்துக் கொள்ள தவம் இருந்தார். ஈசனும் அன்னையை ஏற்றுக் கொண்டார். பிரம்மா அம்பிகையைப் பிரார்த்தித்து மந்திரம் மற்றும் கலைகளைக் கற்றுக்கொண்டதால், இத்தல இறைவிக்கு பிரம்மவித்யாம்பிகை என்ற பெயர் வந்தது. எனவே கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்து இறைவனையும் அம்பிகையையும் வழிபடுதல் சிறந்தது.
இங்குள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தடியில் ருத்ரபாதம் உள்ளது. காசிக்கு நிகரான ஆறு தலங்களில் ஒன்று திருவெண்காடு. உத்கல முனிவரின் மகன் ஸ்வேத கேது. அவன் எட்டு வயது வரைதான் உயிரோடு இருப்பான் என்ற உண்மையை அறிந்த உத்கலர், ஸ்வேத கேதுவிடம் சுவேதவனம் சென்று சிவனை வழிபட்டு, ஆயுளைப் பெருக்கிக்கொள்ளும்படி கூறினார். ஸ்வேத கேதுவும் திருவெண்காடு வந்தடைந்து, வெண்காட்டீசர், சுவேதாரண்யேஸ்வரரைத் தஞ்சமடைந்து போற்றினான்.
ஸ்வேத கேதுவுக்கு எட்டாம் வயது முடியும்போது காலன் வந்தான். லிங்கத்துக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்த பாலகன் ஸ்வேத கேதுவின் மீது பாசக் கயிற்றை வீசினான். பாசக்கயிறு லிங்கத்தின் மேலும் விழுந்தது. வெகுண்ட ஈசன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு யமனை வீழ்த்தி, ஸ்வேத கேதுவுக்கு நீண்ட ஆயுளை வழங்கினார்.
யமனை, சுவேதாரண்ய க்ஷேத்திரத்தில் சுவேதாரண்யேஸ்வரர் வதம் செய்தது போல், ராமபிரான் கர, தூஷண அரக்கர்களை வதம் செய்தார் என்று வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகின்றது.
ஒருமுறை இந்திரன் ஐராவதம் மேல் பவனி வரும்போது, துர்வாச முனிவர் தந்த மாலையை மதிக்காமல், யானையின் மத்தகத்தின் மேல் வைத்தான் தேவேந்திரன். யானை அந்த மாலையைக் கீழே தள்ளி காலில் மிதித்தது. கோபமடைந்த துர்வாசர் ஐராவதத்தை சபித்தார். காட்டு யானையாக மாறிய ஐராவதம், தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்டியது.
வெண்காட்டீசரை வேண்ட சாபம் நீங்கும் என்று முனிவர் சொல்ல, யானையும் திருவெண்காடு வந்து, தடாகம் அமைத்து சிவபெருமானை வழிபட்டது. இதனால் சாப விமோசனம் பெற்று ஐராவதமாகி, மீண்டும் இந்திரலோகம் சென்றது. யானை அமைத்த தடாகம் 'யானை மடு' என்று அழைக்கப்படுகிறது. இது இப்போதும் உள்ளது. “வெள்ளானை தவஞ் செய்யும் மேதகு வெண்காட்டான்,” என்று திருநாவுக்கரசர் இதனைக் குறிப்பிடுகிறார்.