

கதை 1: அவசரம்
பக்கத்து கிராமத்தில் மகான் ஒருவர் வந்திருப்பதை கேள்விப்பட்ட வியாபாரி ஒருவன், அவரிடம் சென்று, "நான் தங்களிடம் சீடனாக சேர்ந்து வேதங்களை கற்க விரும்புகிறேன். அதற்கு எத்தனை காலம் ஆகும்..?" என்று கேட்டான்.
"இரண்டு ஆண்டுகள் ஆகும்.." என்றார் மகான்.
"ஐய்யோ அவ்வளவு காலம் இங்கு தங்கியிருந்தால் என் வியாபாரம் பாதிக்கப்படும்.. விரைவாகக் கற்றால் எத்தனை நாட்களில் கற்கலாம்..?" என்று கேட்டான் அவன்.
"ஐந்து ஆண்டுகள் ஆகும்..!" என்றார் மகான்.
அதற்கு அவன், "என்ன சுவாமி நான் விரைவாக முடிக்க ஆசைப்படுகிறேன்.. நீங்கள் இன்னும் மூன்று ஆண்டுகள் அதிகம் ஆக்கி சொல்கிறீர்களே..!" என்று கேட்டான்..
ஞானியோ, "ஓஹோ... உனக்கு அவ்வளவு அவசரமா..? அப்படியானால் முழுமையாகக் கற்றுத் தேற உனக்கு பத்து ஆண்டுகள் ஆகும்..!" என்றார்.
அவசரப்படுவதால் எந்த ஒரு காரியமும் பதட்டத்தால் மேலும் தாமதமாகிக் கொண்டுதான் போகுமே தவிர, சீக்கிரம் முடியாது என்பதையே ஞானி இவ்விதம் கூறினார்.
கதை 2: பிறவிப் பயன்:
வழிப்போக்கன் ஒருவன் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு புழு சாலையைக் கடக்க முயன்றது.
அதைப் பார்த்த அந்த வழிப்போக்கன் கிண்டலாக, "அற்ப ஜந்துவான நீ பிறந்ததால் உலகில் யாருக்கு பயன்..?" என்று கூறி சிரித்தான்.
அதற்கு அந்தப் புழு, "சுவாமி ஒவ்வொரு பிறவிக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்றே நான் நினைக்கிறேன்.. என்னாலும் ஏதாவது உபயோகம் இருக்கும்.. ஏன்.. நீங்கள் என்னைக் காலால் தேய்த்துக் கொன்று மகிழ்கிறீர் என்றால், இந்த மகிழ்ச்சியை உமக்கு கொடுக்கும் பாக்கியமாவது என் இந்தப் பிறவிக்கு இருக்கும் அல்லவா..!" என்றது.
வழிப்போக்கனின் கண்கள் குளமாயின.. அந்தப் புழுவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.