
ஒரு மகான் ஒரு கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த மக்கள் சிலர் அவரை கன்னா பின்னா என்று வாய்க்கு வந்தபடி திட்டினர். அவர் அதை பொருட்படுத்தாமல், புன்னகையுடன் பார்த்துக் கொண்டே சென்றார்.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் மிகுந்த வியப்புடன், "ஊர் மக்கள் உங்களை இவ்வளவு திட்டியும் உங்களுக்குக் கோபமே வரவில்லையா..?" என்று கேட்டான்.
அதற்கு மகான், "இதற்கு முன் இன்னொரு ஊருக்கு சென்றிருந்தேன்.. அங்கிருந்த மக்கள் பழங்களும், இனிப்புகளும் தந்தனர். அவற்றை வேண்டாம் என்று நான் மறுத்ததால் தத்தம் வீடுகளுக்கே திரும்ப எடுத்துச் சென்றனர். அது போல உங்கள் திட்டுகளை நான் ஏற்கவில்லை.. அவற்றை நீங்களே திரும்ப எடுத்துக் கொண்டதாகத்தானே அர்த்தம்..?" என்றார் சிரித்தவாறே..
ஊர் மக்கள் வெட்கித் தலை குவிந்தனர்.
ஒருவன் செல்வம் வேண்டி கடவுளை நோக்கி தவம் செய்தான்.
இறைவன் அவன் முன் தோன்றி, "பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று தூரத்தில் உள்ள மலையைப் பார்த்துக் கொண்டு நின்றால், கீழே விழும் உனது நிழலுக்கு அடியில் ஒரு பெரிய பொக்கிஷம் உள்ளது..!" என்று கூறி மறைந்தார்.
உடனே அவன் மறுநாள் காலை நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான். மணலின் மீது அவனது நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது. அவன் மணலைத் தோண்ட ஆரம்பித்தான். அவன் தோண்டத் தோண்ட சூரியன் மேலெழுந்து கொண்டிருந்தது. அவனது நிழல் சுருங்கிக் கொண்டே வந்தது. நிழல் அவன் காலடிக்குள் நுழைந்து கொண்டது. நிழலே இல்லை.. அழுது புலம்பினான்.
இந்நிலையில் இறைவன் மீண்டும் அவன் எதிரே தோன்றி, "இப்போது உன் நிழல், பொக்கிஷம் உள்ள இடத்தை சரியாக காட்டுகின்றது.. அது உனக்குள்ளேயே இருக்கின்றது..!" என்று கூறி மறைந்தார்.
அவன் புரிந்து கொண்டு மனம் தெளிந்தான்.
நாத்திகன் ஒருவன் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், "அன்று ஒரு ஹிரண்யனை அழிப்பதற்காக கடவுள் நரசிம்மாவதாரம் எடுத்தார். ஆனால் இன்று ஹிரண்யனை விடக் கொடியவர்கள் பலர் நாட்டில் உள்ளனரே.. கடவுள் ஏன் அவதாரம் எடுக்கவில்லை..?" என்று கிண்டலாகக் கேட்டான்.
அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் அமைதியாக சிரித்துக்கொண்டே கூறினார்:
"அன்று ஒரு பிரகலாதன் இருந்தான்.. ஆனால் இன்று ஒருவர் கூட பிரகலாதனாக இல்லையே..!"
நாத்திகன் எதுவும் பேச முடியாமல், வெட்கித் தலை குனிந்து நின்றான்.
சீடனுடன் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார் ஞானி. வழியில் மலைப் பாதையில் சிரமப்பட்டு ஏறிக் கொண்டிருந்த மாட்டு வண்டியைக் கண்டனர்.
வண்டியின் அச்சாணி, க்ரீச் க்ரீச் என்று ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது.
சீடன் ஞானியிடம் கேட்டான்: "சுவாமி வண்டியை இழுக்கும் காளைகள் இரண்டும் எவ்வளவு துன்பப்படுகின்றன.. ஆனால் அமைதியாகச் செல்கின்றன.. வண்டிச்சக்கரத்தின் அச்சாணிகள் என்ன துன்பமா படுகின்றன.. இப்படி கிரீச் கிரீச் என கத்தி புலம்புகின்றனவே..?"
ஞானி புன்னகையுடன் கூறினார்:
"பெரியோர்கள் எத்தனை துன்பம் வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பர்.. ஆனால் சிறியோர்களோ சிறு துன்பம் வந்தாலும் கூட, பெரிதாகக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.. நிறைகுடம் தழும்பாது, குறைகுடம் கூத்தாடும்.." என்றார்.