

சிவலோகம். சிவனும் பார்வதியும் பேசி... இல்லை விவாதித்துக்கொண்டு இருந்தார்கள்.
சிவன், படைப்பில் எல்லாம் 'மாயை' என்று சொன்னார்.
பார்வதி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் காரசாரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள்.
எல்லாம் மாயை என்பதை பார்வதி ஏற்றுக்கொள்ளவே இல்லை.
சிவனும் தம் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்.
கடைசியில் பார்வதி கோபம் கொண்டு எல்லாம் மாயை அல்ல என்று சூளுரைத்தாள்.
சிவனும் போட்டிக்குத் தயார் ஆனார்.
பார்வதி மூன்று உலகங்களுக்கும் தலைவி. "நான் நிரூபித்துக் காட்டுகிறேன்" என்று சூளுரைத்தாள்.
பார்வதி தனது சக்தியை முழுதாகப் பயன்படுத்தி மூவுலகிலும் விளைச்சலைத் தடுத்தார். எங்கும் பயிர்கள் வளரவில்லை.
மிக மோசமான நிலையில் சிவனும் தட்டுத்தடுமாறி கஷ்டப்பட்டு சமாளித்தார்.
ஆனால், அதற்குள் உணவு பஞ்சம் வந்துவிட்டது. யாருக்கும் உணவு இல்லை.
சிவனாலும் இதைத் தாங்கமுடியாமல் போனது. பசி எடுத்தது. பசி என்றால் கொடூரபசி.
சிவன், பார்வதியின் சக்தியைப் புரிந்துகொண்டு கீழே இறங்கி வந்தார். சாப்பிடாமல் பசி வயிற்றைக் கிளறியது. அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பிச்சைப்பாத்திரத்துடன் பார்வதி முன்வந்து…
“தேவி… எல்லாம் மாயை அல்ல. பசி கட்டாயம் மாயை அல்ல. அதேபோல் உடை மற்றும் உறைவிடமும் மாயை அல்ல என்று ஒப்புக்கொள்கிறேன். எனக்கு கடும் பசி. தயவுசெய்து என் தவறை மன்னித்து எனக்கு போஜனம் தாருங்கள்,” என்றார்.
இதுதான் காசி அன்னபூர்ணி கோயில். அங்கு சிவன் பிச்சை ஓட்டோடு அன்னபூர்ணியை யாசிப்பதுபோல் சிலைகள் உள்ளன.
கட்டாயம் உணவு மாயை அல்ல; நிஜம்; யதார்த்தம்; உண்மை.
இதை உணர்ந்துகொண்ட சிவனுக்கு உணவளித்தார் பார்வதி.
காசி கோயில் மகத்துவம். காசியின் ஸ்தல வரலாறு இதுதான். பல்வேறு புராணங்களில் காசியின் அருமை, பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
கடவுள் படைப்பில் எல்லாம் மாயை அல்ல. உணவு, உடை மற்றும் உறைவிடமும் நிஜம்; யதார்த்தம். நூற்றுக்கு நூறு உண்மை.
படைத்தவன் ஆனாலும் பசிக்கு உணவு சாப்பிட வேண்டும்.
அப்படி இருக்கும்போது எப்படி ஒரு மனிதன் சாப்பிடாமல், குடிக்காமல் இருக்க முடியும்..? நிச்சயமாக முடியவே முடியாது.
பூமாதேவி…! எல்லா வளங்களும் பெற்றவள்.
அவள் தான் உலகில் உள்ள ஒருவனுக்கு உணவு, குடிநீர் அளிக்கிறார்.
பொறுமையில் பூமாதேவி ஆக இருங்கள் என்று சொல்லி, கேள்விப்பட்டு உள்ளோம்.
சக்தியின் வடிவமாக அன்னபூர்ண ஈஸ்வரி மற்றும் பூமாதேவி இருக்கிறார். இதை யாரும் மறுக்க முடியாது; மறக்க முடியாது.
மூக்கு பிடிக்க மூணு வேளை சாப்பிட்டுவிட்டு “எல்லாம் மாயை“ என்று சொல்வது அபத்தம்; அநியாயம்.
சாப்பாட்டிற்கு அவதிபடுபவர்களைப் பார்த்தால்தான் நமக்கு அன்னம் எவ்வளவு அவசியம் என்று புரியும்.
பசித்தவனுக்கு மட்டுமே அதன் அருமை பெருமை தெரிய வரும்.
பசி மாயை அல்ல…! உணவும் மாயை அல்ல..!
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here