

ஆன்மீக சிந்தனை என்பது மனித வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த இறைவழிபாட்டு ஆன்மீக சிந்தனையே மனிதனிடத்தில் ஒழுக்கம், உயிரினங்கள் இடத்தில் அன்பு செலுத்துதல் என அனைத்தையும் தரவல்லது. ஆனால் உண்மையாகவே இறைவனை வழிபடும் முறையில் பலர் தோற்றுப் போகிறார்கள்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக ஒரு மனிதர் இருந்தான். அவன் எம்பெருமான் மீது அதீத பக்தி கொண்டவனாக இருந்தான். வீட்டில் சிவன் சிலையை வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்து பல வருடங்களாக அவன் எம்பெருமானை பிரார்த்தனை செய்து வந்தான். வருடங்கள் உருண்டோடின. அவன் பிரார்த்தனை தொடர்ந்து கொண்டே இருந்தது. இருப்பினும் அந்த மனிதனுக்கு ஒரு மனக்குறை இருந்தது. எவ்வாறு சிவனை வழிபாடு செய்தாலும் சிவன் தமக்கு காட்சியளிக்கவில்லை என்னுடைய வேண்டுதல்களையும் தேவைகளையும் நிறைவேற்றவில்லை என்ற எண்ணம் அவனுடைய மனதில் எழும்பியது.
இதனால் அவன் மனம் சஞ்சலம் கொண்டது. எவ்வாறு வழிபட்டாலும் ஏன் ஈசன் நமக்கு காட்சி தர மறுக்கின்றார் என்று அவன் எண்ணி சைவ சமயத்தில் இருந்து வைணவ சமயத்திற்கு மாறினான். வீட்டில் இருக்கும் சிவன் சிலையை வீட்டின் மேல் கூறையில் வைத்து விட்டு விஷ்ணு சிலையை வீட்டில் நிறுவினான். விஷ்ணு சிலைக்கு தினசரி தீப தூப ஆராதனை மற்றும் நெய்வேத்தியங்கள் செய்து வணங்கி வந்தான்.
இந்த வழிபாட்டு முறையை அவன் தினமும் விடாது ஆற்றி வந்தான். ஒரு நாள் இதே போல் தீப தூப ஆராதனை வீட்டில் காட்டிய போது அந்த நறுமணம் வீட்டின் அனைத்து இடங்களிலும் பரவியதை அவன் உணர்ந்தான். அதனால் அவனுடைய வீடு தெய்வீகமான கோவில் போன்று இருந்தது. அப்பொழுது அவனுக்கு ஓர் ஞாபகம் வந்தது வீட்டின் மேல் கூரையில் இருக்கும் சிவன் சிலையின் மூக்கை ஒரு துணியினால் அவன் இறுக்கமாக கட்டினான்.
அந்த ஜனமே எம்பெருமான் அவனுக்கு காட்சியளித்தார். இதனைக் கண்டு அதிர்ந்து போன அந்த மனிதன் சிவபெருமானை நோக்கி தம்மை பல வருடங்களாக நான் முழு மனதோடு வணங்கி வந்தேன். ஆனால் தாம் எனக்கு காட்சியளிக்கவில்லை.
இன்று காட்சியளித்ததன் காரணம் என்ன என்று எம்பெருமானிடம் அவன் கேட்டான். அதற்கு சிவபெருமான் நீ என் சிலையை மட்டுமே பிராத்தனை செய்து வந்தாயே தவிர அதில் நான் இருப்பதாக உன் மனம் உணரவில்லை. இன்று நீ விஷ்ணுவிற்கு செய்த பூஜையில் அந்த தீப தூப வாசனையை நான் நுகரக் கூடாது என்று என்னுடைய மூக்கை நீ துணியினால் கட்டினாய். இன்றே நீ அச்சிலையில் சிவபெருமான் இருப்பதை உணர்ந்தாய். அக்காராந்தினாலே நான் உனக்கு காட்சி அளித்தேன்.
எந்த கடவுளாக இருந்தாலும் சிலையை நிறுவி பிரார்த்தனை, தீப தூப ஆராதனை, நெய்வேத்தியம் செய்து விடுவது ஒரு கடமை என்று என்ன கூடாது. இறைவனை பிரார்த்திப்பது என்பது “இறைவனை முதலில் உணர வேண்டும்.
அச்சிலையில் இறைவன் இருப்பதாக உன் மனம் நம்ப வேண்டும். அவ்வாறு இறைவன் இருக்கிறான் என்று நம்பி செய்யப்படும் தீப தூப ஆராதனைகள், நெய் வைத்தியங்கள் மற்றும் பிரார்த்தனைகள், இறைவன் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்" என்று எம்பெருமான் அம் மனிதனிடம் கூறினார்.