சிறுகதை: அடங்கா மனசு

tamil Short story: adangaa manasu
A gurucredit AI Image
கே. அசோகன்

கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் . மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய சிந்தனை செம்மல் திருவிக பேச்சரங்க திருவிக விருது தமிழக ஜோக் எழுத்தாளர்கள் குழும விருது வெளியிட்டுள்ள நூல்கள் அம்மா , சின்னசைக்காலாஜி நீங்களும் அம்பானிதான் தமிழ் இந்துவில் சிறுவர் கதைகள் வெளியானது தொகுப்பு ஆந்தைக்குகையில் இளவரசி, பீட்ஸா சாப்பிட்ட காகம் மற்றும் காதல் முதல் கடவுள் வரை கவிதை ஆகிய நூல்களின் ஆசிரியர்

Updated on
Deepam strip
Deepam strip

காதோரமிருந்த நரைமுடிகள் முதுமையை வெளிச்சம் போட்டுக் காட்டின; ஆனால், இன்னமும் அலைபாயும் மனசுதான் ஆனந்தனுக்குள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

தெளிவான குளத்தில் சிறிய கல்லைப் போட்டால் நீரலைகள் வட்டவட்டமாகச் சுழலுமே, அப்படி ஒரு குறையும் அவனின் மனசில் கூடாரமிட்டிருந்தது. 'அலைபாயும் மனசை அடக்குவது எப்படி?' என்ற குறைதான் அது. அதை அடக்க அதிகாலை எழுந்து, குளித்துவிட்டு அமர்ந்து கண்களை மூடிக்கொள்வான்.

கண்களை மூடியவுடன் நெஞ்சக் கூட்டிலிருந்து விதவிதமாக, விநோதமான எண்ணங்கள் வரிசைக்கட்டிப் பறவைகள் போலப் பறந்து வரும். சில நேரம், ”அட! இப்படியெல்லாம் மோசமாவா நம்ம மனசுக்குள்ளாற எண்ணங்கள் இருக்குது?” என்று யோசிப்பான். அந்த யோசனையே அவனைக் கவிழ்த்துவிடும்.

”இந்த மனசு அடங்கவே மாட்டேங்குது! எப்பப் பார், அம்மா வீட்டுக்குப் போயிட்டு வந்த மனைவி மாதிரியே முரண்டு பிடிச்சுக்கிட்டு நிக்குதே! என்ன செய்தும் வழிக்கு வரமாட்டேங்குதே!” என வருந்துவான்.

காட்டில் வாழும் சாமியார் முதல் கார்ப்பரேட் சாமியார் வரை பார்த்துவிட்டான். உஹ்ம்... உஹ்ம்... உஹ்ம்... பார்த்துட்டு வந்த பத்து நிமிஷம் மனசு சொல்பேச்சு கேட்கும்; அப்புறம், செல்போனுக்கு அடம்பிடிக்கும் குழந்தை மாதிரி சிணுங்கிக்கிட்டு நிக்கும்.

எப்படியாவது அதை வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முடிவோடு, காலையிலேயே கண்களை மூடி அமர்ந்து விடுவான் ஆனந்தன். எந்தச் செயல் செய்தாலும் பிள்ளையாரைக் கும்பிடுவதுதானே வழக்கம்? ஆனந்தன் கண்களை மூடினால்... பிள்ளையாருக்குப் பதில் 'ஆக்ரோஷ காளி' காட்சியளிப்பாள். ”ஐயோ! காளியா?” என அலறிக்கொண்டே கண்களைத் திறந்து விடுவான்.

கொஞ்ச நேரம் கழித்துக் கண்களை மூடுவான்... இப்போது கதாயுதத்தோடு ஆஞ்சநேயர் எதிரில் நிற்பார். ”ஐயோ! ஆஞ்சநேயரா? பிரம்மச்சாரி ஆயிற்றே! நாமோ குடும்பஸ்தன், ஆஞ்சநேயர் கோவிச்சுக்கிட்டா?” அப்படின்னு கண்களைத் திறந்து விடுவான்.

சிறிது நேரம் கழித்துக் கண்களை மூடுவான். இப்போது நீளமான அரிவாளேந்திய அய்யனார் கண்களை உருட்டிக்கொண்டு மிரட்டுவார். மறுபடி கண்களைத் திறந்து விடுவான். ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் கண்களை மூடினால், அழகான குழந்தை மயிலும் வேலுமாய் நிற்கும். ”அட, நம்ம முருகா!” அப்படின்னு கன்னத்தில் இரு கைகளால் போட்டுக்கொண்டு கண்களைத் திறந்து விடுவான்.

‘கண்களை மூடினால்தானே இப்படியெல்லாம் நடக்கிறது’ என்று எண்ணி, கண்களை நன்றாகத் திறந்து கொண்டு, கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டே “தியானம் செய்கிறேன்” பேர்வழியென்று நாட்களைக் கடத்துவான்.

இப்படிப்பட்ட ஆனந்தனுக்குத் திருப்பதி போகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனந்தனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. “திருப்பதி போய் வந்தால் திருப்பம் ஏற்படும்னு பெரியவங்க சொல்றாங்களே, அது நடக்குதான்னு பார்த்துடுவோம்” எனப் பயணத்திற்குத் தயாரானான்.

ஆட்டோ பிடித்து, பஸ் பிடித்து, ஏழுமலை தாண்டி... திருப்பதி தேவஸ்தானக் கூண்டு அறையில் சிறைப்பட்டு... இரண்டு நாள் கழித்து... வரிசையில் கூட்டத்தோடு ‘கோவிந்தா’ போட்டு... மூலஸ்தானத்தை நெருங்கும்போது, “ஜரகண்டி... ஜரகண்டி... ஜரகண்டி!” என்ற தெலுங்கு வார்த்தைக்குப் பதிலாக, “சீக்கிரமா தரிசனம் செய்திட்டு நகருங்கோ, பின்னாடி வருகிறவர்களும் தரிசனம் செய்யணுமில்லையா?” என்ற குரல் கேட்டு அதிசயித்தான்.

”ஏழுமலையானை, வேங்கடவனைக் காணப்போகிறோம்!” என்ற ஆனந்தத்தோடு, ஆனந்தன் மூலஸ்தானத்தின் அருகில் போனவுடன் கண்களை இறுக மூடிக்கொண்டான். மனசு கோவிந்த நாமம் பாடியது.

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் கதை: பாத்திரங்கள் குட்டி போடும்  அதிசயம்! 
tamil Short story: adangaa manasu

அந்த நேரத்தில், “என்னங்க நீங்க... பெருமாள் தரிசனத்துக்கு வர்றீங்க, ஆனா கண்ணை மூடிக்கிறீங்க? இங்க வந்தா ஏழுமலையானை உச்சி முதல் பாதம் வரை சேவிக்கணும். அதுதான் நீங்க இவ்வளவு தூரம் வந்ததற்கான பலன். அதை விட்டுட்டு கண்ணை இறுக்க மூடிக்கிட்டா என்ன பலன்? கண்ணை மூடி சேவிக்கணும்னா வீட்டுலேயே அரை மணி நேரங்கூட வேணாம், அரை நிமிடம் கண்ணை மூடி உட்கார்ந்துக்கோ!” என்ற குரல் கேட்டது.

அக்குரல் கேட்டவுடன், ஆனந்தனின் நெஞ்சில் அந்தப் பணியாளர் ஒரு தேர்ந்த குருவாகவே நிழலாடினார்!

logo
Kalki Online
kalkionline.com