தெனாலிராமன் கதை: பாத்திரங்கள் குட்டி போடும்  அதிசயம்! 

Tenaliraman story
Tenaliraman storyAI Image
Published on
Kalki Strip
Kalki Strip

வட்டிக்கடை வைத்திருக்கும் மக்கள் பலர் விஜயநகரத்தில் இருந்தனர். அவர்களில் கிராத்சந்த் என்பவன் தடிவட்டி வாங்குபவன். கொஞ்சம் கூட இரக்கமில்லாதவன். ஆனால், அவன் நகரில் பிரபலமானவன்.

ஏழை விவசாயிகள் பால்காரர்கள் சிறு தொழில் செய்வோர் இப்படியாக பலர் கிராத்சந்திடம் வட்டிக்கு கடன் வாங்குவார்கள். நூற்றுக்கு ஐம்பது வீதம் வட்டி வாங்கும் கல் நெஞ்சன் அவன். வட்டியை குறைத்துக் கொள்ளுமாறு எவ்வளவு கெஞ்சினாலும் குறைக்க மாட்டான். கொஞ்சம் கூட அசையமாட்டான்.

"உங்கள் ஆடு, மாடுகள் குட்டி போடுவது போல் என் பணமும் குட்டி போடும்" என்பான். தன் நெருங்கிய நண்பர் ஜக்கையா என்பவன் மூலம் தெனாலிராமன் இதை தெரிந்து அதற்கு ஒரு திட்டம் தீட்டினான்.

ஜக்கையா அடிக்கடி கடன் வாங்குபவர். தெனாலிராமன் திட்டப்படி ஒருநாள் ஜக்கையா கிராத்சந்திடம் சென்று தன் வீட்டில் நடைபெற இருக்கின்ற மண விழாவுக்காக பன்னிரண்டு பெரிய பித்தளை பாத்திரங்களை பத்து நாட்களுக்கு இரவலாக தருமாறு கேட்டான்.

பத்து நாட்கள் கழித்து அசலான பன்னிரண்டு பெரிய பித்தளை பாத்திரங்களுடன சிறிய பித்தளை பாத்திரங்களையும் கொண்டு வந்து கிராத்சந்திடம் கொடுத்தான். "இந்த சிறிய பாத்திரங்கள் ஏது?" என்று கேட்டான்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சிங்கராஜாவின் காதில் கானம் இசைத்தது யார்?
Tenaliraman story

"ஐயா..! தாங்கள் கொடுத்த பாத்திரங்கள் என் வீட்டில் இருந்தபோது குட்டி போட்டன. அவையே இவை" என்றான் ஜக்கையா. அதைக் கேட்ட கிராத்சந்த் அவனுடைய ஏமாளித்தனத்தை கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டு சாமர்த்தியமாக, "ஆமாம்..! உன்னிடம் பெரிய பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கருவுற்றிருந்தன. அதை அப்போது சொல்ல மறந்துட்டேன். நீ மிகவும் நேர்மையானவன்" என்று அவனைப் புகழ்ந்தான். மேலும், "உனக்கு எப்பொழுது என்ன பொருள் வேண்டுமானாலும் என்னிடம் வந்து வாங்கி செல்லலாம்," என்று தாராளமாக கூறினான்.

ஒரு மாதத்திற்கு பிறகு தன் வீட்டில் நடக்க போகும் மற்றொரு விழாவுக்காக கிராத்சந்திடம் ஜக்கையா வந்து பன்னிரண்டு தங்க பாத்திரங்களும், பன்னிரண்டு வெள்ளி பாத்திரங்களும் இரவல் கேட்டான். கிராத்சந்த் தடை சொல்லாமல் உடனே கொடுத்து, "இந்த பாத்திரங்கள் யாவும் இப்பொழுது கர்ப்பத்தோடு பிரசவிக்கும் தருணத்தில் இருப்பதால், நீ திருப்பித் தரும்போது அதன் குட்டிகளுடன் சிறு பாத்திரங்களுடன் தர வேண்டும்" என்று சொல்லி அனுப்பினான்.

ஜக்கையா பாத்திரங்களை கொண்டு வந்தான். ஆனால், குறிப்பிட்ட நாட்கள் கழிந்தன. பாத்திரங்களை திருப்பி கொண்டு போய் கொடுக்கவில்லை. ஜக்கையா வீட்டுக்கே போய் கேட்டான் கிராத்சநத். "உன்னுடைய பாத்திரங்கள் யாவும் பிரசவத்தின் போது குட்டி போடாமல் அசலோடு இறந்துவிட்டன. அதற்காக மிகவும் வருந்துகிறேன்," என்று கூறினான் ஜக்கையா.

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் கதை: மணலா? சர்க்கரையா?
Tenaliraman story

ஆத்திரமும் கோபமும் கொண்ட கிராத்சந்த் ஜக்கையாவை இழுத்துக் கொண்டு அரசரிடம் சென்று, "ஜக்கையா கூறுவது அதிசயமாய் இருக்கிறது" என்று முறையிட்டு கதறினான். அரசர் வழக்கை விசாரித்தார். அப்பொழுது தெனாலிராமன் அங்கே சென்று, "மன்னரே பிரானே நாணயங்கள் குட்டி போடுகின்ற போது பாத்திரங்கள் குட்டி போடுவதில் என்ன அதிசயம். மேலும், குட்டி போட்ட பித்தளை பாத்திரங்களை முன்பு ஒருமுறை ஜக்கையாவிடமிருந்து வாங்கிக் கொண்டது அதிசயம் இல்லை. இப்பொழுது பிரசவத்தினால் தங்க வெள்ளி பாத்திரங்கள் இறந்து விட்டன என்பது மட்டும் என்ன அதிசயம்?" என்று கேட்டான்.

"முன்பு பித்தளை பாத்திரங்கள் குட்டி போட்டதுடன் ஜக்கையாவிடமிருந்து  தான் வாங்கிக் கொண்டது உண்மையே" என ஒப்புக்கொண்டான் அவன். "முன்பு குட்டிகளுடன் வாங்கியிருக்கும் பொழுது அவை இறந்து போனதில் என்ன அதிசயம்? அது நியாயமே என்று கூறி" உண்மையை அறிந்த அரசர் கிராத்சந்தை கண்டித்து அனுப்பினார் .

சபையோரும் பொதுமக்களும் தெனாலிராமனுடைய தந்திரத்தை மிகவும் பாராட்டி புகழ்ந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com