குட்டிக் கதைகள்: இராமகிருஷ்ண பரமஹம்சர் போதித்த பாடங்கள்!

Sri Ramakrishna Paramahamsa
Sri Ramakrishna Paramahamsa
Published on
Deepam strip
Deepam strip

1. ஒரு சமயம் ஒருவனுக்கு கடலைக் கடக்கவேண்டிய சந்தர்ப்பம் எழுந்தது. ஒரு துறவியை சந்தித்தான். அவர் ஒரு இலையில் இராமநாமத்தை எழுதி அதை அவனுடைய ஆடையின் முனையில் வைத்து முடிச்சு போட்டார்.

“மனதில் முழு நம்பிக்கையோடு கடலின் மீது நடந்து செல். நீ நம்பிக்கையை இழந்தால் அந்த கணமே கடல் நீரில் முழ்கி இறந்து விடுவாய்", துறவி இவ்வாறு அவனிடம் எச்சரித்து அனுப்பினார்.

அவனும் நம்பிக்கையோடு கடலின் மீது நடக்கத் தொடங்கினான். இப்படியே நடந்து சுலபமாக வெகுதூரம் போய்விட்டான்.

திடீரென்று அந்த துணியில் துறவி முடிந்து அனுப்பியது என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. உடனே அந்த துணியின் முடிச்சை அவிழ்த்துப் பார்த்தான். அதில் ராமநாமம் எழுதப்பட்டிருந்தது. உடனே அவன் துணுக்குற்றான். இதில் வெறும் இராமநாமம்தானே எழுதியியிருக்கிறது என்று தன் மனதுள் நினைத்துக் கொண்டான்.

இராமநாமத்தில் என்ன மகிமை இருக்கிறது என்ற சந்தேகம் அவன் மனதில் எழுந்த அடுத்த கணமே அவன் கடலில் மூழ்கி விட்டான்.

2. ஒரு சமயம் இராமகிருஷ்ணரை நாடி ஒருவன் வந்து அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டான்.

“சுவாமி. ஞானத்தை அடையும் வழி என்ன என்று கூறுவீர்களா?”

இதற்கு இராமகிருஷ்ணர் ஞானத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்று கூறினார்.

“தினமும் கீதையை படி. பின்னர் நிவேதனம் செய். அதன் பின்னர் திராட்சைப் பழங்களை சாப்பிடு. இதைக் கேட்ட அந்த மனிதனுக்கு திடீரென ஒரு சந்தேகம் தோன்றியது.

“சுவாமி. தினமும் எத்தனை திராட்சைப் பழத்தை சாப்பிட வேண்டும்?”

“நீ தினமும் கீதையில் எத்தனை ஸ்லோகங்களை படிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் உனக்கு ஞானத்தை அடையும் வழியில் ஆர்வம் இருக்கிறது என்று பொருள். ஆனால் நீயோ சாப்பிடுவதைப் பற்றி கேட்கிறாய். நீ புறப்படலாம்”.

இதையும் படியுங்கள்:
ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளிய பொன்மொழிகள்!
Sri Ramakrishna Paramahamsa

3. இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க அவருடைய பக்தர் ஒருவர் வந்தார்.

“ஸ்வாமி. நான் இதுநாள் வரை செய்து வந்த தொழில் மற்றும் எனது சொத்துக்களை எனது பிள்ளைகளுக்குத் தந்துவிட்டேன். சர்வசதா காலமும் இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இறைவன் எனக்கு இதுவரை தரிசனம் தரவில்லை. அது ஏன் என்று விளக்குவீர்களா?”

“நீ என்ன வியாபாரம் செய்து வந்தாய்?”

“மளிகைப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தேன் ஸ்வாமி”

“நீ விற்ற பொருட்கள் தீர்ந்த பின்னரும் அவற்றை வைத்திருந்தவற்றில் வாசனை இருக்குமா அல்லது இருக்காதா?”

“நிச்சயம் இருக்கும் ஸ்வாமி”

“உனது விஷயமும் அப்படித்தான். நீ சொத்துக்கள் அனைத்தையும் உன் மகன்களுக்குக் கொடுத்த பின்னரும் அதன் மீது உனக்கு இன்னமும் பற்று இருக்கிறது. அது எப்போது உன்னைவிட்டு முழுமையாக அகலுகிறதோ அப்போதுதான் உனக்கு இறைதரிசனம் கிடைக்கும்”

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அடையாளம் காட்டிய 'ஆதிய காளி' !
Sri Ramakrishna Paramahamsa

4. ஒரு சமயம் பகவான் இராமகிருஷ்ணரைப் பார்க்க பக்தர் ஒருவர் வந்திருந்தார். அவர் நீரில் நடக்கும் கலையை கற்றிருந்தார். அதுபற்றி மிகுந்த பெருமையுடன் அவர் இராமகிருஷ்ணரிடம் பேசினார்.

“ஸ்வாமி. நான் நீரில் நடக்கும் கலையை மிகுந்த சிரமப்பட்டு கற்றுவைத்திருக்கிறேன். இக்கலையை கற்க எனக்கு பதினாறு ஆண்டுகள் பிடித்தன”

இதைக் கேட்டு இராமகிருஷ்ணர் தன்னை பாராட்டுவார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த அந்த பக்தருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

“படகுக்காரனிடம் அரை அணாவைக் கொடுத்து சுலபமாக எந்த ஆற்றையும் கடந்து விடலாம். இதற்காக நீ உன்னுடைய வாழ்க்கையில் பதினாறு ஆண்டுகளை வீணடித்திருக்க வேண்டாம்”

இராமகிருஷ்ணரின் இந்த பதில் பக்தரை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com