

கதை 1: மதிப்பு வாய்ந்த கல்
பணக்காரன் ஒருவன் ஒரு மகானிடம் சென்று, "சுவாமி..! என்னிடம் அபூர்வ வைரங்கள் இருக்கின்றன. அதன் மதிப்பு எத்தனை கோடி என்பது எனக்கே தெரியாது.." என ஆணவத்துடன் கூறினான்.
இதற்கு மகான், "இதைவிட மதிப்பு வாய்ந்த கல் உங்கள் ஊரிலேயே இருக்கிறது.. என்னுடன் வாருங்கள்.. அதை காட்டுகிறேன்.." என்று கூறி, ஒரு ஏழைக் கிழவியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சென்ற மகான், செல்வந்தனிடம் கூறினார்.. "இந்தக் கிழவி மாவரைத்துக் கொண்டிருக்கிறாளே இந்த ஆட்டுக்கல்.. அது உம் வைரக் கல்லை விட பல மடங்கு மதிப்புள்ளது. இந்தக் கல் இடைவிடாது உழைத்து இந்த குடும்பத்தைக் காக்கிறது. இதன் மூலம் அரைக்கப்படும் மாவை விற்று வரும் காசுதான் இக்குடும்பத்திற்கே சோறு போடுகிறது.. அதனால் இந்தக் கல்தான் மதிப்பு மிக்கது.."
பணக்காரன் வெட்கித் தலை குனிந்தான்.
கதை 2: மாற்றி சொன்னால் முடியும்:
ஒரு தெருவின் நடுவில் பெரிய பாறை ஒன்று கிடந்தது. அந்தத் தெருவைக் கடந்து சென்ற ஒருவரால் கூட அதை ஓரமாக தூக்கி வைக்க முயலவில்லை.
அவ்வழியே வந்த துறவிக்கு அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால் வயதானதால் அவரால் முடியவில்லை.
எதிரே வந்த இளைஞனை அழைத்து, "தம்பி இந்த பெரிய பாறையை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டுப் போயேன்..." என்றார்.
அதற்கு அவன் "அய்யய்யோ..! பெரிய பாறை என நீங்களே சொல்கிறீர்.. பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கிறது. என்னால் முடியாதப்பா..!" எனக்கூறி சென்றான்.
இப்படியே பலரும் "என்னால் முடியாது" எனக் கூறிச் சென்றனர்.
துறவி யோசித்தார். தான் சொன்ன வாசகத்தை சற்று மாற்றி சொன்னால் பலன் கிடைக்கும் என நம்பினார்.
இப்போது அங்கு வந்த இளைஞனை அழைத்து, "தம்பி.. இந்த சின்னக் கல்லை நகர்த்தி ஓரமாகப் போட உன்னால் முடியுமா..?" என்று கேட்டார்.
"ஓ.. இதென்ன பிரமாதம்..?" என்று கூறி அந்தப் பாறையை ஓரமாக தூக்கி வைத்து விட்டு சென்றான் அந்த இளைஞன்..