

ஓர் ஊரில் நெசவுத்தொழில் செய்யும் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் உண்மையானவன். பொய்யே பேச மாட்டான். எப்போதும் நியாயமாக நடந்து கொள்ளுவான். இராமபிரானை மனதில் நினைத்தவாறே எதையும் நம்பிக்கையோடு செய்வான். எல்லா செயல்களும் இராமபிரானின் விருப்பப்படியே நடக்கின்றன என்பதில் அவனுக்கு முழு நம்பிக்கை உண்டு.
யாராவது வந்து துணியின் விலையைக் கேட்டால் அதையும் நேரடியாக இவ்வளவு விலை என்று சொல்லமாட்டான். இராமரின் திருவுளப்படி நூலின் விலை இவ்வளவு, லாபம் இவ்வளவு, துணியின் விலை இவ்வளவு என்று தனித்தனியே பிரித்து நேர்மையாக உண்மையான விலையைச் சொல்லுவான். இதனால் அவன் சொல்வதை அப்படியே நம்பி பேரம் எதுவும் பேசாமல் துணியை வாங்கிக் கொண்டு செல்லுவார்கள்.
இரவு சாப்பிட்டு முடித்ததும் அந்த ஊரிலிருந்த ஒரு மண்டபத்தில் உட்கார்ந்து இறைவனை மனதில் நிறுத்திச் சிந்திப்பான். இராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பான். இராமனின் மகிமைகளைப் பாடிக் கொண்டிருப்பான்.
ஒருநாள் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த போது சில திருடர்கள் அந்தப் பக்கமாக ஓடி வந்தார்கள். அவர்கள் கொள்ளையடிக்கத் துணையாக ஒருவன் தேவைப்பட்டான். எனவே, நெசவாளியைப் பார்த்து, "நீ எங்களோடு வா!" என்று கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றார்கள். ஒரு வீட்டில் கொள்ளையடித்து அந்தப் பொருட்களை நெசவாளியின் தலையில் வைத்து தூக்கிக் கொண்டு வரச்சொன்னார்கள். இந்த நேரத்தில் காவலர்கள் அங்கே வரவே அவனை தனியே விட்டுவிட்டுத் திருடர்கள் தப்பித்துச் சென்றுவிட்டார்கள். நெசவாளி காவலர்களிடம் மாட்டிக் கொண்டான்.
காவலர்கள் அவனை அன்றிரவு காவலில் வைத்து மறுநாள் நீதிபதியின் முன்னால் கொண்டு நிறுத்தினார்கள். விஷயத்தை அறிந்த ஊர்க்காரர்கள் அங்கே கூடினார்கள். அவர்கள் நீதிபதியிடம் “அய்யா இந்த நெசவாளி மிகவும் நல்லவன். நேர்மையானவன். இவன் ஒரு போதும் இத்தகைய செயலைச் செய்திருக்கவே மாட்டான்” என்று அனைவரும் ஒன்று போலவே கூறினார்கள். இதைக் கேட்ட நீதிபதியும் நெசவாளியிடம், "என்ன நடந்தது என்று சொல்" என்று கேட்டார்.
“நீதிபதி அய்யா! நான் இராமரின் திருவுளப்படி இரவு சாப்பிட்டு முடித்து இராமரின் திருவுளப்படி வழக்கமாக அமரும் மண்டபதில் உட்கார்ந்திருந்தேன். இராமரின் திருவுளப்படி அவரை நினைத்துக் கொண்டிருந்தேன். அவரின் பெருமைகளைப் பாடிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் இராமரின் திருவுளப்படி திருடர்கள் அந்த வழியாக வந்தார்கள். இராமரின் திருவுளப்படி என்னைத் தங்களுடன் இழுத்துக் கொண்டு சென்றார்கள். இராமரின் திருவுளப்படி அவர்கள் ஒரு வீட்டிற்குச் சென்று திருடினார்கள்.
இராமரின் திருவுளப்படி திருடிய பொருட்களை என் தலைமீது வைத்தார்கள். இராமரின் திருவுளப்படி காவலர்கள் அந்த இடத்திற்கு வந்தார்கள். இராமரின் திருவுளப்படி காவலர்கள் என்னைப் பிடித்துக் காவலில் வைத்தார்கள். இராமரின் திருவுளப்படி என்னை இப்போது தங்கள் முன்னால் நிறுத்தியிருக்கிறார்கள்.”
நெசவாளியின் தூய்மையான இராம பக்தியையும் நல்ல உள்ளத்தையும் நீதிபதி உணர்ந்து கொண்டு அவனை விடுதலை செய்தார். அவன் வீட்டிற்குத் திரும்பும் போது தன் ஊர்க்காரர்களிடம் “இராமரின் திருவுளப்படி என்னை நீதிபதி விடுதலை செய்துவிட்டார்” என்று சொல்லியவண்ணம் வீட்டிற்குச் சென்றார்.