

ஒருசமயம் வியாச முனிவர் திருதராஷ்டிரன் அரண்மனைக்கு விஜயம் செய்தார். வியாசரை உபசரிக்கும் பொறுப்பை காந்தாரியிடம் அவர் ஒப்படைத்தார். அதனால் மகிழ்ந்த முனிவர் காந்தாரியின் வேண்டுகோள்படி மக்கட் செல்வம் பெறும் வரத்தை அருளினார்.
கர்ப்பகாலம் 2 வருடம் நீடித்தது. காந்தாரி கர்ப்பமாக இருக்கும் போது திருதராஷ்டிரனுக்கு தேவையான பணிகளைச் செய்ய சுகதா என்ற பணிப்பெண் நியமிக்கப்பட்டார். அவள் கவனிப்பில் மயங்கி திருதராஷ்டிரன் தன் உடல் தேவைக்கு அவளை பயன்படுத்தினான். திருதராஷ்டிரனக்கு காந்தாரி மூலமாக 100 மகன்களும், துஷலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
சுகதா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது அவன்தான் யுயுத்சு. யுயுத்சுவின் குணம் விதுரரை ஒத்திருந்தது. இருவரும் கிருஷ்ணரிடம் பக்தி உள்ளவர்கள். கௌரவர்கள் மனச்சாட்சிபடி நடக்காவிட்டாலும் யுயுத்சு மனச்சாட்சிபடி நடந்தான். துரியோதனனின் சதித் திட்டங்களை தக்க சமயத்தில் பாண்டவர்க்கு எடுத்துரைத்து அவர்களைக் காப்பாற்றினான். குரக்ஷேத்திரப் போரில் கௌரவர்களும் பாண்டவர்களும் போரிடத் தயாராக இருந்தனர்.
அந்நேரத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரிடம், "100 கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தானே?" என்றான். கண்ணன் கலகலவென சிரித்து,"அப்படியல்ல..." என்று கூறி யுத்தகளத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார். ஏதோ ஒன்றை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அவர் நின்ற தோரணை இருந்தது.
அவர் "வீரர்களே இப்போது இருதரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. எங்கள் அணியிலிருந்து யாரேனும் துரியோதனன் அணிக்கு செல்வதானால் செல்லலாம். துரியோதனன் அணியிலிரூந்து பாண்டவர் அணிக்கு வருவதானால் வரலாம்" என்றார் கிருஷ்ணர். "இது கடைசி சந்தர்ப்பம்" என்றார். கௌரவர் படையில் இருந்து பாண்டவர் பக்கம் ஒரு தேர் மெல்ல நகரத் தொடங்கியது. அவன் யுயுத்சு என்று பீஷ்மருக்கு தெரிந்தது. துரியோதனன் அவனை நோக்கி வில்லை வைத்தபோது அவனை பீஷ்மர் தடுத்து, "கட்சி மாறுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது" என்றார். "அவன் நம்மிலிருந்து போனாலும் நம் வீரர்களாலேயே கொல்லப்படுவான்" என்றார்.
யுயுத்சு கௌரவர் படையில் ஓர் அதிரதி. அதிரதி என்பவன் ஒரே சமயத்தில் 60000 வீரர்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவர். கண்ணன் அர்ச்சுனனிடம் "ஒருமுறை பீமனை துரியோதனன் நஞ்சு கலந்து கொல்ல முற்பட்டான் அதைத் தடுத்து அவனைக் காத்தவன் யுயுத்சு. இவன் தர்மநெறி தவறாமல் இருப்பவன். இவன் உயிரை இறுதிவரை காப்பேன். இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. போர் முடிந்த பின் சொல்கிறேன்" என்றார். புதிதாய் சேர்ந்த யுயுத்சுவை அழைத்து வந்தார் கண்ணன்
அர்ச்சுனனிடம், "யுயுத்சுவைத்தவிர அனைத்து கௌரவர்களும் அழிக்கப்படுவார்கள். திருதராஷ்டிரனும் சில காலத்திற்குப் பிறகு மாண்டுபோவான். திருதராஷ்டிரனுக்கு கொள்ளி வைக்க யுயுத்சு தான் இருக்கிறான்" என்றார். பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். போரில் வென்றபின் இந்திரபிரஸ்த அரசனாக யுயுத்சுவை முடிசூட்டினார் தர்மர். நன்றாக அரசாட்சி செய்து அரசை பரீக்ஷித்திடம் ஒப்படைத்தார் யுயுத்சு.
மகாபாரதத்தில் வீரர்களாக கர்ணன், அர்ஜுனன் போன்றவர்களை அறிந்தவர்கள், யுயூத்சு போன்ற மகா வீரனைப் பற்றி அறிய வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றிய செய்திகள் அதிக அளவு அறியப்படவில்லை. ஆனால் யுயுத்சுவின் வீரத்தை குறித்து கண்ணன் வெளிப்படுத்தி உள்ளார்.